மும்பை: இராமாயண தொலைக்காட்சித் தொடரில் இராமராக வேடமிடும் நடிகர் அருண் கோவில், மதத்தலைவர்கள்தான் தங்களின் அரசியல் ஆதாயத்திற்காக சமூக வெறுப்பை பரப்புகிறார்களே ஒழிய, மதங்கள் அல்ல என்று கூறியுள்ளார்.

தேர்தலில் வாக்குகளைப் பெறும்பொருட்டு, அவர்கள் மதத்தை ஒரு ஆயுதமாகப் பயன்படுத்துகின்றனர் என்று சாடியுள்ளார் அருண் கோவில்.

இவர் ராமாயணத் தொடரில் ராமர் வேடம் தவிர, ஷிவ் மகா புராணில் சிவன் வேடமும், விக்ரம் வேடமும் தரித்து, ரசிகர்களைக் கவர்ந்தவர். மேலும், பாலிவுட் படங்களிலும் இவர் நடித்துள்ளார்.

சமீப ஆண்டுகளில் நாட்டின் பல இடங்களில் நிகழ்ந்துவரும் மாட்டிறைச்சி வைத்திருத்தல் மற்றும் இதர காரணங்களுக்கான கும்பல் கொலைகள் குறித்து அவரிடம் கேட்டபோது, மேற்கண்ட கருத்தை தெரிவித்தார் அருண் கோவில்.

தான் தற்போது நடித்துவரும் தொலைக்காட்சித் தொடர்கள் மனிதர்களின் உளப்பாங்கு, மானுடப் பண்புகள் மற்றும் நடத்தை மேம்பாடு ஆகிய அம்சங்களை வலியுறுத்துவது தொடர்பானதாகும் என்றுள்ளார் அவர்.