இம்பால்: காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வரும் இமாச்சலில் அரசியல் குழப்பம் ஏற்பட்டுள்ளது. இதனால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் சூழல் ஏற்பட்டுள்ளது.

68 இடங்களை கொண்ட இமாச்சல பிரதேசத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க 35 எம்.எல்.ஏ.-க்கள் ஆதரவு தேவை. காங்கிரஸ் கட்சியில் இருந்து ஆறு எம்.எல்.ஏ.-க்கள் மாற்றி வாக்களித்தால் காங்கிரஸ் பலம் 34 ஆக குறைந்து பெரும்பான்மையை இழந்துவிடும். பா.ஜனதாவைத் தவிர மற்றவை வரிசையில் 3 எம்.எல்.ஏ.-க்கள் உள்ளனர். இவர்கள் பா.ஜனதாவிற்கு ஆதரவாக வாக்களிக்க வாய்ப்பு உள்ளதால் காங்கிரஸ் ஆட்சி கவிழும் நிலை உருவாகி உள்ளது.

சமீபத்தில் நடைபெற்று முடிந்த நாடாளுமன்ற மாநிலங்களவைக்கான தேர்தலில், இமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற வாக்குப்பதிவின்போது, காங்கிரஸ் வேட்பாளர்  அபிஷேக் சிங்வி எளிதாக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஷ்டவசமாக எதிர்த்து போட்டியிட்ட பாஜகவேட்பாளர் வெற்றி பெற்றார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. அதாவது  ஆட்சியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு 40 எம்எல்ஏக்கள்  உள்ள நிலையில், , 25 எம்எல்ஏக்கள் கொண்ட பாஜகவுக்கு 6 காங்கிரஸ் எம்எல்ஏக்கள் கட்சி மாறியும், 3 சுயேச்சைகளும் வாக்களித்ததால் பாஜக வேட்பாளா் ஹா்ஷ் மஹாஜன் வெற்றி பெற்றார். இது காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் இடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியதுடன் அரசியல் குழப்பத்தையும் ஏற்படுத்தியது.

இந்த நிலையில், மாநில அரசின் அமைச்சராக இருந்து வந்த  விக்ரமாதித்ய சிங் திடீரென தனது பதவியை  ராஜிநாமா செய்துள்ளார்.  இதனால் ஏற்பட்டுள்ள சலசலப்புக்கு மத்தியில், பாஜக எம்எல்ஏக்கள் கவர்னரை சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதற்கிடையில், பதவியை ராஜினாமா செய்த,  விக்ரமாதித்ய சிங்  செய்தியாளர்களிடம் பேசும்போது,   “தற்போதைய அரசியல் சூழலில் அரசின் அங்கமாக நான் நீடிப்பது சரியல்ல, அதனால் அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்கிறேன். எனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்தி எதிர்கால நடவடிக்கைகள் குறித்து முடிவு செய்வேன். கள நிலவரம் குறித்து கட்சியின் மேலிடத்துக்கு எடுத்துரைத்துள்ளேன். கட்சியின் மேலிடம் தான் முடிவெடுக்க வேண்டும். எந்த முடிவு எடுக்கப்பட்டாலும், கட்சி மற்றும் மக்களின் நலனைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும்.” என்றார்.

இதுதொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த மாநில பாஜக தலைவர்கள், இமாச்சலில் காங்கிரஸ் கட்சி தனது  மெஜாரிட்டியை இழந்துள்ளது. இதனால் சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.  இமாச்சல பிரதேச சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவரான ஜெய்ராம் தாகூர் எம்.எல்.ஏ.-க்களுடன் சென்று கவர்னர் ஷிவ் பிரதாப் சுக்லாவை சந்தித்தார். அப்போது சுக்விந்தர் சிங் சுகு தலைமையிலான அரசை நம்பிக்கை வாக்கெடுப்பு கோர வலியுறுத்தும்படி கேட்டுக்கொண்டுள்ளார்.

பின்னர்  செய்தியாளர்களிடம் பேசும்போது,  “பா.ஜனதா வேட்பாளருக்கான ஹர்ஷ் மகாஜனுக்கு ஆதரவாக குறைவான எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருந்த நிலையில்,  நாங்கள் வெற்றி பெற்றுள்ளோம். தார்மீக உரிமை அடிப்படையில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்தை இழந்துள்ளது” என  கூறியவர்,  “பட்ஜெட் மீதான தீர்மானம் குரல் வாக்கெடுப்பு மூலம் நடத்தப்படுவதற்குப் பதிலாக வாக்குகள் பிரித்து எண்ணப்பட வேண்டும். அப்போது காங்கிரஸ் கட்சிக்கு பெரும்பான்மை இல்லை என்பது தானாகவே தெரியவந்து விடும்” என்றார்.

இதற்கிடையே காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களை ஆறு பேரை பா.ஜனதா அரியானாவிற்கு அழைத்துச் சென்றுள்ளது என முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு குற்றஞ்சாட்டியுள்ளார்.