திருவனந்தபுரம்: ககன்யான் திட்டத்தில் 4 வீரர்கள் விண்வெளிக்கு செல்ல உள்ள நிலையில், அதில் ஒருவர் தமிழர் என்பது தெரிய வந்துள்ளது. அவர் பெயர் அஜித் கிருஷ்ணன் என்றும், விமானப்படையின் டெஸ்ட் பைலட்டாக பணியாற்றி வருபவர் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள 4 பேரில் தமிழகத்தை சேர்ந்த அஜித் கிருஷ்ணனும் ஒருவர். இவர் 1982ம் ஆண்டு ஏப்ரல்19ம் தேதி பிறந்தார். அவர் தேசிய பாதுகாப்பு அகாடமியில் இருந்து தேர்ச்சி பெற்றவர். , 2023 ஜூன் 21ல், இந்திய விமானப்படையின் போர் விமானப் பிரிவில் நியமிக்கப்பட்டார். இவர் பயிற்சி விமானிகளுக்கு பயிற்றுவிப்பாளராகவும், இந்திய விமானப்படையின் புதிய விமானங்களுக்கான டெஸ்ட் பைலட்டாகவும் உள்ளார்.
அஜித் கிருஷ்ணனுக்கு 2,900 மணி நேரத்திற்கும் மேலாக விமானம் ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் சூ-30 எம்கேஐ, மிக்-21, மிக்-29, ஜாக்குவார், டோர்னியர், An-32 உள்ளிட்ட பல்வேறு விமானங்களை ஓட்டிய அனுபவம் உள்ளது. அவர் வெலிங்டனில் உள்ள பாதுகாப்புப் பணியாளர்கள் சேவைக் கல்லூரியில் பயிற்சி பெற்றவர். அவர் விமானப்படை பயிற்சி அகாடமியில் சிறப்பாக செயல்பட்டதற்காக, ஜனாதிபதியின் தங்கப் பதக்கம் மற்றும் மரியாதை வாள் ஆகியவற்றைப் பெற்றவர்.
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ, முதன்முறையா விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பு திட்டத்தை செயல்படுத்த தயாராகி வருகிறது. இதுவரை, ரஷ்யா, அமெரிக்கா மற்றும் சீனா என 3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ள நிலையில், அந்த வரிசையில் இந்தியாவும் இடம்பெற உள்ளது. அதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றனர்.
இதற்காகக் கடந்த 2007 ஆம் ஆண்டு 10 ஆயிரம் கோடி ரூபாய் பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. அதன்பிறகு கடந்த 2014 ஆம் ஆண்டு இந்தத் திட்டத்துக்கு ககன்யான் எனப் பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதற்கான வீரர்கள் தேர்வு செய்யப்பட்டு பல்வேறு கட்ட சோதனைகளுக்கு பிறகு 4 பேர் இறுதியாக தேர்வு செய்யப்பட்டு ரஷியாவுக்கு பயிற்சிக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். அவர்கள் 4 பேரும் ரஷ்யாவில் 14 மாதங்கள் பயிற்சி பெற்று இந்தியா திரும்பி உள்ளனர்.
ககன்யான் திட்டத்தின் கீழ் விண்வெளிக்கு செல்லும் இந்த 4 வீரர்களையும், பிரதமர் மோடி அறிமுகம் செய்து வைத்தார். இந்த குழுவில், குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மேலும் இந்த திட்டத்திற்கு தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு ககன்யான் திட்டத்திற்கான லோகோவை பிரதமர் மோடி வழங்கினார்.
இது குறித்து பிரதமர் மோடி தெரிவிக்கையில், “2035 ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் இந்தியாவுக்கென தனி ஆய்வு மையம் அமையவுள்ளது. 2035 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தயாரிக்கப்படும் ராக்கெட் மூலம் இந்தியர்கள் நிலவில் கால் பதிப்பர். 4 இந்திய விண்வெளி வீரர்களுக்கு லோகோவை ஒப்படைத்தது எனக்கு மிகவும் சிறப்பான தருணம் ஆகும். இது 140 கோடி இந்தியர்களின் நம்பிக்கையை பிரதிபலிக்கின்றன. குரூப் கேப்டன் பிரசாந்த் பாலகிருஷ்ணன், குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன், குரூப் கேப்டன் அங்கத் பிரதாப், விங் கமாண்டர் சுபான்ஷு சுக்லா ஆகியோரால் இந்தியா பெருமை கொள்கிறது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 4 பேரில் ஒருவர் தமிழர் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த குழுவில் இடம் பெற்றுள்ளவர்களில் இந்திய விமானப்படையைச் சேர்ந்த குரூப் கேப்டன் அஜித் கிருஷ்ணன் தமிழகத்தைச் சேர்ந்தவர் ஆவார். சென்னையில் பிறந்த இவர் உதகையில் உள்ள வெலிங்கடன் ராணுவ கல்லூரியில் பயின்றவர் ஆவார். அவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.