திருப்பூர்: போலீஸ் குடியிருப்புக்காக ஒதுக்கப்பட்ட நிலத்தை மசூதிக்காக கடந்த கால அரசு தாரை வார்த்துள்ளது. இது தொடர்பான வழக்கில், அனுமதியின்றி கட்டப்பட்டு வரும் மசூதியின் கட்டுமானப் பணிகளுக்கு உயர்நீதிமன்றம்  இடைக்கால தடை விதித்துள்ளது.

திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த இந்து முன்னேற்ற அமைப்பின் தலைவராக உள்ள கோபிநாத் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள  நல வழக்கில், கடந்த 2001ம் ஆண்டு திரூப்பூர் மாவட்டம் அவினாசி தாலுக்காவில் உள்ள மங்களம் சாலையில் காவல் குடியிருப்புக்காக நில வருவாய் அதிகாரி  85.1 செண்ட் நிலம் ஒதுக்கினார். ஆனால், பின்னர்  இதில் 4.5 செண்ட் நிலம் சாலை விரிவாக்கத்துக்காவும்,  18.6 செண்ட் நிலம் மசூதிக்காகவும் ஒதுக்கப்பட்டு உள்ளது. மசூதிக்காக ஒதுக்கப்பட்டுள்ள இடத்தில் பழமை வாய்ந்த கோவிலும் உள்ளது. மேலும், அந்த இடத்தில் சட்ட விரோதமாக மசூதி கட்டுமானப்பணிகளும் நடைபெற்று வருகிறது. அதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு சென்னை உயர்நீதிமன்ற  பொறுப்பு தலைமை நீதிபதி முனிஸ்வர் நாத் பண்டாரி , நீதிபதி ஆதிகேசவலு அமர்வில் இன்று விசாரிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, மசூதி விரிவாக்க பணிக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள், இதுதொடர்பாக  திருப்பூர் மாவட்ட ஆட்சியர் 3 வார காலத்திற்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஜனவரி 31ம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

தமிழ்நாட்டின் பன்னிரெண்டாவது சட்டமன்றத் தேர்தல் 2001 ஆம் ஆண்டு மே மாதம் நடை பெற்றது. அப்போது, அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் வெற்றி பெற்று, ஜெ. ஜெயலலிதா இரண்டாம் முறையாக தமிழகத்தின் முதல்வரானது குறிப்பிடத்தக்கது.