பெங்களூரு

லாத்காரம் செய்யப்பட்டதால் இறந்த 5 வயது சிறுமிக்கு இறுதிச் சடங்கு செய்யக்கூட பணமின்றி தவித்த ஒரு தாய்க்கு போலீஸ் அதிகாரி ஒருவர் உதவி உள்ளார்.

பெங்களூரு தலகட்டபுரா பகுதியில் ஒரு ஐந்து வயது சிறுமிக்கு நேர்ந்த அவலத்தைப் பற்றி தலகட்டபுரா போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமப்பா  கூறியதாவது :

”தலகட்டாபுராவில் வசித்து வந்த ஒரு விதவைப் பெண் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளார்.   தினமும் கூலி வேலை செய்து பிழைக்கும் நிலையில் அவர் இருக்கிறார்.   தனது ஒரே மகளான ஐந்து வயது சிறுமியை அருகிலுள்ள குழந்தைகள் காப்பகத்தில் விட்டு விட்டு பணிக்கு செல்வார் அந்த தாய்.   அவர் கணவர் நான்கு மாதம் முன்பு இறந்து விட்டார்.

குழந்தைகள் காப்பகப் பொறுப்பாளரான சந்தனா என்பவர் அந்த தாயை அழைத்து சிறுமி மிகவும் சோர்வாக உள்ளதாகவும் உடனே வீட்டுக்கு அழைத்துச் செல்லுமாறும் கூறியுள்ளார்.   பதறிப் போன தாய், அருகிலுள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளார்.   அங்கு அந்தக் குழந்தை அபாய நிலையில் உள்ளதால் மற்றொரு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.   அங்கும் சீராகாததால் செயிண்ட் ஜான்  மருத்துவமனை என்னும் தனியார் மருத்துவமனைக்கு தாய் எடுத்துச் சென்றுள்ளார்.   அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அந்த சிறுமி பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதனால் இப்போது அபாய நிலையில் தொடர்ந்து இருப்பதாகவும் கூறினார்கள்

மருத்துவ மனையில் சிகிச்சை பலனின்றி சிறுமி இறந்து விட்டாள்.   மருத்துவமனை மூலமாக எங்களுக்கு தகவல் வந்து நாங்கள் விரைந்து பிரேத பரிசோதனை செய்யச் சொல்லி வழக்கு பதிந்தோம்.   அந்தப் பெண்ணுக்கு மருத்துவமனையின் கட்டணத்தை செலுத்த பணமின்றி மகளின் பிரேதத்தை எடுத்துச் செல்ல வழியின்றி தவித்தார்.    கட்டணத் தொகை ரூ.1.7 லட்சத்தை கொடுத்தால் தான் சடலம் ஒப்படைக்கப் படும் என மருத்துவமனை நிர்வாகம் சொல்லி விட்டது.    நான் அங்கிருந்த ஒரு தனியார் நிறுவனத்தின் உதவியை நாடி தொகையை கட்டி, குழந்தையின் சடலத்தை தாயிடம் மீட்டுத் தந்தேன்.

அடுத்த அதிர்ச்சியாக அந்த தாயிடம், மகளின் சடலத்தை எரியூட்டவும் பணம் இல்லாததை அறிந்தோம்.   எங்கள் காவல் நிலையத்தில் உள்ளவர்கள் அனைவரும் உதவி அந்தக் குழந்தையை எரியூட்டத் தேவையான தொகையை கொடுத்தோம்,   இந்து மத வழக்கப்படி இறுதிக் கடனை செலுத்த விரும்பினார் அந்தத் தாய்.   ஆனால் இந்து மத வழக்கப்படி இறுதிக் கடன் செய்ய அவர் வீட்டில் ஆண்கள் யாரும் இல்லை.   அதனால் நானே முன் நின்று அந்தக் குழந்தையை எரியூட்டும் சடங்கை நிறைவேற்றினேன்.

அன்று என் வீட்டில் நடக்க இருந்த கணபதி ஹோமத்துக்காக எனது வீட்டினர்  காத்திருந்தனர்.   ஆனால் எனக்கு அந்தத் தாயின் துயரமே முக்கியமாக தோன்றியது.

விசாரணைக்குப் பின் குழந்தைகள் காப்பக உரிமையாளர் சந்தனா மற்றும் அவர் நண்பர் மல்லிகார்ஜுன் ஆகியோரை பலாத்கார குற்றத்தில் கைது செய்துள்ளோம்” என தெரிவித்துள்ளார்.