சென்னை: சென்னை அரும்பாக்கம் பெடரல் வங்கி கொள்ளை சம்பந்தமாக சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை பதுக்கி வைத்திருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் பணியில் இருந்து தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். அவர் எப்போது கைது செய்யப்படுவார் என சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.

சென்னை, அருகம்பாக்கத்தில் இயங்கி வந்த பெடரல் வங்கியின் தங்க நகை கடன் பிரிவில் கடந்த சனிக்கிழமை பட்ட பகலில் கொள்ளை நடைபெற்றது. இதில் வங்கி ஊழியர் முருகன் முக்கிய குற்றவாளியாக கருதப்பட்டார். தமிழ்நாட்டு மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த நிகழ்வில் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட முருகன் மற்றும் அவரது கூட்டாளிகள் பாலாஜி, சந்தோஷ், சக்திவேல், சூர்யா, ஸ்ரீவத்சன் ஆகிய 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில்,  காவல் ஆய்வாளர்  அமல்ராஜ் என்பவர் வீட்டில் இருந்து 3.5 கிலோ தங்கம் மீட்கப்பட்டது. அதனால், அவருக்கும் இந்த கொள்ளை சம்பவத்தில் தொடர்பு இருப்பது அம்பலமானது.  இதனையடுத்து, ஆய்வாளர் அமல்ராஜ் மற்றும் அவரது மனைவி மெர்சிக்கு இந்த கொள்ளை சம்பவத்தில் எந்த மாதிரியான தொடர்பு உள்ளது என்பது குறித்து தனிப்படை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை தொடர்ந்து, காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யபிரியா அமல்ராஜை  பணியிடை  நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்துள்ளார்.

வேலையே பயிரை மேய்ந்த கதையாக, கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட இன்ஸ்பெக்டர் அமல்ராஜ் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது கண்துடைப்பு நாடகம் என்றும், அவர்  கைது செய்யப்பட வேண்டும் என்றும், அவர்மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரி வருகின்றனர்.