கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கிங் உணவுப்பொருட்களில் விலை, மாதம் இல்லையென்றால் ரூ.25ஆயிரம் வரை அபராதம்!

Must read

சென்னை:  கடைகளில் விற்பனை செய்யப்படும் பேக்கிங் உணவுப்பொருட்களில்  விலை, மாதம் உள்ளிட்ட விவரங்கள் இல்லாத பொருட்கள், அதுபோல சில்லரையாக விற்பனை செய்யப்படும் பொருட்களின்போது,  முத்திரையிடாத எடையளவு கண்டறியப்பட்டால் அபராதம் விதிக்கப்படும் என  தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. விவரங்கள் இல்லாத பொட்டலப் பொருட்கள் விற்பனை ஆகியவை கண்டறியப்பட்டால் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று தொழிலாளர் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  நுகர்வோர் நலன் கருதி, தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த்,கூடுதல் ஆணையர் உமாதேவி, சட்டமுறை எடையளவு கட்டுப்பாட்டு அதிகாரி எம்.சாந்தி ஆகியோரின் உத்தரவுப்படி முத்திரையிடப்படாத எடையளவுகள் குறித்த ஆய்வு நடைபெற்றது.

அதன்படி, சென்னை சைதாப்பேட்டை மீன் மார்க்கெட் மற்றும் இறைச்சிக் கடைகளில் சட்டமுறை எடையளவுச் சட்டம் 2009-ன்கீழ், சென்னை 2-ம் வட்ட தொழிலாளர் உதவி ஆணையர் சுபாஷ் சந்திரன் தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இந்த ஆய்வின் போது முத்திரையிடப்படாமல் பயன்பாட்டில் இருந்த மின்னணு தராசுகள், இதர எடையளவுகள் பறிமுதல் செய்யப்பட்டு, வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.

எனவே, வியாபாரிகள் தாங்கள் பயன்படுத்தும் எடையளவுகளை உரிய காலத்துக்குள் மறு முத்திரையிட்டு, அதற்கான சான்றை நுகர்வோருக்கு நன்கு தெரியும்படி வைக்க வேண்டும். அவ்வாறு உரிய காலத்தில் மறு முத்திரையிடாமல் இருந்தால், ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

மேலும், சட்டமுறை எடையளவு சட்டத்தின்கீழ் விற்பனைக்கு தயாராக வைக்கப்பட்டுள்ள பொட்டலமிடப்பட்ட பொருட்களில் தயாரிப்பாளர், பொட்டலமிடுபவர் பெயர்,முகவரி, பொருளின் பெயர், பொருளின் நிகர எடை, எண்ணிக்கை, பொட்டலமிடப்பட்ட மாதம், ஆண்டு, அதிகபட்ச சில்லறை விற்பனை விலை, நுகர்வோர் புகார் தெரிவிப்பதற்கான பெயர், முகவரி, தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி போன்றவை இடம் பெற வேண்டும். அவ்வாறான அறிவிப்புகள் இல்லாமல் பொருட்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தால், விற்பனையாளர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

More articles

Latest article