சென்னை:

குப்பை கிடங்கில் துண்டு துண்டாக வெட்டி வீசப்பட்ட பெண் யார் என்பது அடையாளம் தெரிந்தது. அவரை கொலை செய்து துண்டு துண்டாக வெட்டி வீசிய அவரது கணவரும் சினிமா டைரக்டரருமான பாலகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் 21ந்தேதி சென்னையில் உள்ள  பெருங்குடி குப்பை கிடங்கில்  துண்டு துண்டாக வெட்டப்பட்ட பெண்ணின் உடல் பாகங்கள் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், உடலின் பாகங்களை கைப்பற்றிய காவல்துறையினர்,  கண்டெடுக்கப்பட்ட  கையில் சிவபார்வதி என டாட்டு போடப்பட்டிருந்தை கண்டனர்.  இதை ஆதாரமாக கொண்டு காவல்துறையினர் கொலை செய்யப்பட்ட பெண் யார் என தேடி வந்தனர்.

இந்த நிலையில், அந்த டாட்டு உள்ள பெண், தூத்துக்குடியில் காணாமல் போன பெண்ணின் கை என்பது தெரிய வந்தது. அந்த பெண்ணின் பெயர் சந்தியா என்பதும், அவர் காணாமல் போனது குறித்து கடந்த மாதம் 19ந்தேதி தூத்துக்குடி காவல்நிலையத்தில், அவரது தாயார் புகார்  கொடுத்திருந்ததும் தெரிய வந்தது.

இந்த நிலையில், அப்பெண்ணின் கணவரும் திரைப்பட இயக்குநருமான பாலகிருஷ்ணனை காவல்துறையினர் அதிரடியாக  கைது செய்துள்ளனர். பாலகிருஷ்ணன் காதல் இலவசம் என்ற படத்தையும் எழுதி இயக்கியுள்ளார். இந்த தம்பதிகளுக்கு  2 குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் சென்னை ஜாபர்கான் பேட்டையில் வசித்து வந்துள்ளனர்.

விசாரணையில், பாலகிருஷ்ணனின் மனைவி நாகர்கோவிலைச் சேர்ந்தவர் என்பதும்,அவரது பெயர் சந்தியா (வயது 38) என்பதும் தெரிய வந்தது. கணவன் மனைவிக்கு இடையேஏற்பட்ட மோதல் காரணமாக  கணவர்  பாலகிருஷ்ணனே சந்தியாவை கொன்றதாகவும், மரம் அறுக்கும் ரம்பம் மூலம் உடல் பாகங்களை வெட்டி மூட்டையில் கட்டி தூக்கி எறிந்ததாகவும், மீதம் இருக்கும் உடலை ஜாஃபர்கான்பேட்டை – ஈக்காட்டுத்தாங்கள் இடையே இருக்கும் ஆற்றில் வீசியதாகவும் தெரிவித்திருப்பதாக காவல்துறையினர் தெரிவித்து உள்ளனர்.

இதைத்தொடர்ந்து சந்தியாவின் மீதமுள்ள உடல் பாகங்களை ஈக்காட்டுத்தாங்கல் அருகே ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். மேலும் விசாரணை நடைபெற்று வருகிறது.