சென்னை

காவல் ஆணையர் சங்கர் ஜிவால் நேற்று நெஞ்சு வலி காரணமாகச் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை நகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால் கடுமையான உழைப்பாளி ஆவார்.  இவருக்கு தற்போது 56 வயதாகியும் எப்போதும் சுறுசுறுப்புடன் இயங்கி வருவது வழக்கமாகும்,.  இவர் நள்ளிரவிலும் அலுவலகத்தில் தங்கி பணியாற்றி விட்டு தொடர்ந்து காலையிலும் பணியைத் தொடர்ந்து வந்தார்.   கடந்த 5 மாதங்களாக இது தொடர்கிறது.

நேற்று மதியம் வேப்பேரியில் உள்ள காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் எட்டாம் மாடியில் உள்ள தனது அறையில் பணிகளை கவனித்து வந்த சங்கர் ஜிவாலுக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது.  இதையொட்டி உதவியாளரை அழைப்புமணி அடித்து அழைத்துள்ளார்.  அவர் நெஞ்சு வலியால் அவதிப்படுவதை அறிந்த காவல்துறை அதிகாரிகள் பதறிப் போனார்கள்.

அதிகாரிகள் அவரைத் தூக்கி வந்து சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அவரை அனுமதித்துள்ளனர்.  அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.  மருத்துவமனை நிர்வாகம் தற்போது அவர் அபாய கட்டத்தை தாண்டி உள்ளதாகவும் உடல்நிலை சீராக உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.