திருவனந்தபுரம்: ஜூஸில் விஷம் கலந்து காதலனை கொலை செய்த வழக்கில் குற்றவாளியான காதலிக்கு நெய்யாற்றின்காரா அமர்வு நீதிமன்றம், மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கி உள்ளது.
கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்தவர் ஷரோன் ராஜ் (வயது25). இவர் குமரி மாவட்டம் நெய்யூரில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த கல்லுரியில் படித்து வந்த குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த ராமவர்மன்சிறையை சேர்ந்த கிரீஷ்மா (22) என்ற என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்து, இருவரும் காதல் பறவைகளாக சுற்றி வந்தனர்.
இந்த நிலையில், காதலன் ஷரோன்ராஜுக்கு திடீரென அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து, அவரது பெற்றோர், அவரை திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு, அவருக்கு பல்வேறு சோதனைகள் நடத்தப்பட்டு, தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது. ஆனால், 11 நாட்களுக்குப் பின்னர் அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடலில் விஷம் கலந்திருந்தது சோதனையில் தெரிய வந்தது.
இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் ஷாரோன் காதலி உள்பட பலரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது, முன்னுக்குபின் முரணகாக பேசிய காதலியான கிரீஷ்மாவிடம் கிடுக்கிபிடி விசாரணை மேற்கொண்டனர். அதில், அவர், தான்தான் குளிர்பானத்தில் விஷம் கலந்து அவரை கொலை செய்தேன் வாக்கு மூலம் அளித்தார்.
மேலும் விசாரணையில் கிரீஷ்மாவுக்கு வேறொருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டதால் காதலர் ஷரோன் தன்னுடன் எடுத்த புகைப்படங்களை மாப்பிள்ளையிடம் காட்டி விடுவாரோ என்ற அச்சத்தில் விஷம் கொடுத்து கொலை செய்ததாக தெரிவித்தார். மேலும் இந்த கொலைக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் பிந்து, தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகியோரை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இதுதொடர்பான வழக்கில், கிரிஷ்மாவின் தாயாரும், தாய்மாமனுக்கும் ஜாமீன் கிடைத்த நிலையில், கிரிஷ்மா கடந்த ஒரு வருடம் சிறை தண்டனை அனுபவித்து வந்தார். இந்த வழக்கின் விசாரணை நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது. விசாரணையின்போது, 95 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதையடுத்து ஜனவரி 17ந்தேதி அன்று நடைபெற்ற இறுதி விசாரணையின்போது, இந்த கொலை வழக்கில், ,கிரிஷ்மா மற்றும் அவரது தாய்மாமன் நிர்மல் குமாரன் நாயர் ஆகியோர் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பளித்ததுடன், தண்டனை விவரங்களை பிறகு அறிவிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தது.
இந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. குற்றவாளி கிரிஷ்மாவுக்கு தூண்டு தண்டனை விதித்து அதிரடி தீர்ப்பு வழங்கி உள்ளது. அத்துடன், அவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டு உள்ளது. மேலும், இந்த கொலையை மறைக்க உதவிய கிரிஷ்மாவின் தாய்மாமாவுக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நெய்யாற்றின்கரை கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.