சென்னை: பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்திய தவெக தலைவர் விஜய், அரிட்டாப்பட்டிக்கு ஒரு நிலைப்பாடு பரந்தூருக்கு ஒரு நிலைப்பாடா? என கேள்வி எழுப்பியதுடன், மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே என திமுக அரசையும் கடுமையாக சாடினார்.
திமுக எதிர்க்கட்சியாக இருக்கும்போது 8 வழிச்சாலைத் திட்டத்தை எதிர்த்தீர்கள், காட்டுப்பள்ளி துறைமுகத் திட்டத்தை எதிர்த்தீர்கள். அதே நிலைப்பாட்டைத்தானே பரந்தூரிலும் எடுத்திருக்க வேண்டும். அது எப்படி, எதிர்க்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு ஆதரவு, ஆளுங்கட்சியாக இருக்கும்போது விவசாயிகளுக்கு எதிர்ப்பா? இனிமேலும், உங்களுடைய நாடகத்தை எல்லாம் பார்த்துக்கொண்டு மக்கள் சும்மா இருக்கமாட்டார்கள்” என்று ஆவேசமாகதெரிவித்தார்.
”ஒவ்வொரு வீட்டிற்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானவர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான்,” என பரந்தூரில் த.வெ.க., தலைவர் விஜய் பேசினார்.
முன்னதாக பரந்தூர் வந்தடைந்த விஜய்யிடம் நெற்கதிரை வழங்கி, விவசாயிகள் பச்சை துண்டு அணிவித்தனர். அப்போது, உங்கள் வீட்டு பிள்ளையாக சட்டத்திற்கு உட்பட்டு உங்களுடன் உறுதியாக நிற்பேன். உங்களுடன் தொடர்ந்து நிற்க வேண்டும் என்று தோன்றுகிறது என்றார். தொடர்ந்து, பரந்தூரில் புதிய விமான நிலைய எதிர்ப்பாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
கிட்டத்தட்ட 910 நாட்களுக்கு மேலே, உங்க மண்ணுக்காக போராடி கொண்டு இருக்கிறீர்கள். உங்க போராட்டத்தை பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசுவதை கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்க எல்லாரும் சந்தித்து பேச வேண்டும் என்று தோணுச்சு. உங்கள் எல்லோரும் கூட தொடர்ந்து நிற்பேன்.
ஒவ்வொரு வீட்டிற்கு ரொம்ப முக்கியமானவர்கள் அந்த வீட்டில் இருக்கும் பெரியவர்கள் தான். அதே மாதிரி நம்ம நாட்டுக்கு ரொம்ப முக்கியமானர்கள் உங்களை மாதிரி விவசாயிகள் தான். அதனால் உங்கள மாதிரியான விவசாயிகளின் காலடி மண்ணை தொட்டு கும்பிட்டு தான், என்னுடைய பயணத்தை துவங்க வேண்டும் என்று முடிவோடு இருந்தேன். அதற்கு சரியான இடம் இது தான் என்று எனக்கு தோணுச்சு.
910 நாட்களுக்கு மேலாக மண்ணிற்காக போராடி வருகிறீர்கள். உங்கள் போராட்டம் பற்றி ராகுல் என்ற சின்ன பையன் பேசுவதை கேட்டேன். அந்த குழந்தையின் பேச்சு மனதை ஏதோ செய்தது. உடனே உங்க எல்லாரும் சந்தித்து பேச வேண்டும் என்று தோணுச்சு. என்னுடைய பயணத்தை தொடங்க இது தான் சரியான இடம். ஓட்டு அரசியலுக்காக இதை நான் பேசவில்லை. “பரந்தூர் விமான நிலைய திட்டத்தை மீண்டும் ஆய்வு செய்ய வேண்டும் என ஒன்றிய, மாநில அரசைக் கேட்கிறேன்.
விவசாய நிலங்கள் இல்லாத பகுதியில் விமான நிலையத்தை அமைக்க வேண்டும். வளர்ச்சி திட்டங்களுக்காக விவசாயத்தை அழிக்கக் கூடாது, விவசாய நிலங்களை அழிக்கும் அரசு நிச்சயம் மக்கள் விரோத அரசாக தான் இருக்கும். 13 ஏரிகளை அழித்து நிறைவேற்றப்பட உள்ள பரந்தூர் விமான நிலைய திட்டத்தை கைவிட வேண்டும் என்றவர், நான் வளர்ச்சிக்கு எதிரானவன் அல்ல. போராடும் விவசாயிகளுடன் நான் எப்போதும் உறுதியாக நிற்பேன். வளர்ச்சி என்ற பெயரில் நடக்கும் அழிவுகள் மக்களை பாதிக்கும். விமான நிலையம் வேண்டாம் என்று சொல்லவில்லை, இங்கே வேண்டாம் என்றுதான் சொல்கிறேன்.
எதிர்க்கட்சியாக ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியாக ஒருநிலைப்பாடா? மக்கள் நம்பும்படி நாடகம் ஆடுவதுதான் உங்களுக்கு கைவந்த கலையாச்சே. உங்கள் நாடகத்தை பார்த்து மக்கள் சும்மா இருக்க மாட்டார்கள், என திமுக அரசை கடுமையாக சாடியதுடன், இந்த விமான நிலையத்துக்கான இடத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என்றார்.
“அரிட்டாப்பட்டி மக்கள் போலதான் பரந்தூர் மக்களும் நம் மக்கள். அதுபோலதான் அரசு சிந்தித்திருக்க வேண்டும். உங்கள் கிராம தேவதைகளான எல்லையம்மன் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழந்துவிடாதீர்கள். உங்கள் வீட்டுப் பிள்ளையாக உங்களுடன் உறுதியாக நிற்பேன். போராட்டத் திடலில் உங்களைச் சந்திக்கதான் விரும்பினேன். ஆனால் அதற்குத் தடைவிதித்தார்கள். அதுபோலதான், சமீபத்தில் துண்டு சீட்டுக் கொடுத்ததற்கு தடை விதித்தார்கள். இதெல்லாம் ஏன் செய்கிறார்கள் எனப் புரியவில்லை” – எதிர்க்கட்சியாக 8 வழிச் சாலை, காட்டுப்பள்ளி துறைமுகம் எதிர்ப்பு என்ற நிலைப்பாடு எடுத்தீர்கள் அப்படிதானே இங்கேயும் எடுத்திருக்க வேண்டும்” –
விமான நிலையத்தைத் தாண்டி இந்த திட்டத்தில் அவர்களுக்கு ஏதோ திட்டம் இருக்கிறது. அதை மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். “பரந்தூர் விமான நிலைய திட்டத்திற்கு எதிராக சட்டத்திற்கு உட்பட்டு எல்லா போராட்டங்களையும் நடத்துவோம். நம்பிக்கையோடு இருங்கள், நல்லதே நடக்கும், வெற்றி நிச்சயம், நன்றி வணக்கம்” என விஜய் பேசினார்.
காஞ்சிபுரம் மாவட்டம் பரந்துார் பகுதியில், சென்னையின் இரண்டாவது விமான நிலையம் அமைய உள்ளது. இதற்காக நெல்வாய் நாகப்பட்டு, ஏகனாபுரம், தண்டலம், மகாதேவி மங்கலம் உள்ளிட்ட, 13 கிராமங்களில் இருந்து, 5,133 ஏக்கர் நிலங்களும், 1,000க்கும் மேற்பட்ட வீடுகள், நீர்நிலைகள், விளைநிலங்களும் கையகப்படுத்தப்பட உள்ளன.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம், தண்டலம் உள்ளிட்ட கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். மக்களின் போராட்டம் 910 நாட்களை கடந்துள்ளது. மக்களின் போராட்டம் ஒருபக்கம் நடக்க அதை கண்டுகொள்ளாமல், காவல்துறை உதவியுடன் வருவாய்த்துறையினர், நிலம் எடுக்கும் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏகனாபுரம் கிராமம் முழுதுமாக விமான நிலையத்துக்காக கையகப்படுத்தப்பட இருப்பதால், எதிர்ப்பு தெரிவிக்கும் அக்கிராம மக்கள், 900 நாட்களை கடந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இறுதியாக தற்கொலை செய்துகொள்வோம் என்றும் கூறி வருகின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட வரும் அந்த பகுதி மக்களை, பா.ம.க., தலைவர் அன்புமணி, வி.சி., தலைவர் திருமாவளவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் வேல்முருகன் மற்றும் அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், விவசாய சங்கங்களும் ஆதரவு தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக, அந்த பகுதிக்குள் யாரும் செல்ல முடியாதவாறு, ஊரைச்சுற்றி காவல்துறை பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. வெளியாட்கள், வெளி வாகனங்கள் அந்த பகுதிக்கு வந்தால், அவை உடடினயாக தடுத்து நிறுத்தப்பட்டு, திருப்பி அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், எ தமிழக வெற்றிக் கழகத்தை துவங்கியுள்ள நடிகர் விஜய், போராடும் பரந்தூர் பகுதி மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க விரும்பினார். ஏற்கனவே கடந்த ஆண்டு (2024) அக்டோபர் 27ம் தேதி விழுப்புரத்தில் முதல் மாநாட்டை நடத்தினார். அதில், ‘பரந்துார் விமான நிலையத்தை வேறு இடத்தில் அமைக்க வேண்டும். விவசாயிகளை பாதிக்கும் திட்டங்களை செயல்படுத்தக்கூடாது’ என, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்காக, விமான நிலைய எதிர்ப்பு போராட்ட குழுவினர் நன்றி தெரிவித்தனர்.
இந்த நிலையில், புதிய விமான நிலையத்திற்கு எதிராக போராடி வரும் கிராம மக்களை சந்தித்து ஆதரவு தெரிவிக்க, விஜய் இன்று (ஜன.,20) பரந்துார் புறப்பட்டார். அவர் வீடு அமைந்துள்ள பனையுரில் தனது இல்லத்தில் இருந்து, பிரசார வேனில், புறப்பட்டார்.
முன்னதாக விஜய் மக்களை சந்திப்பதற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் காஞ்சிபுரம் மாவட்ட போலீஸ் அனுமதி அளித்துள்ளது. பரந்துார் செல்ல உள்ள விஜய், ஏகனாபுரம் கிராமம் அருகே, அம்பேத்கர் திடல் பகுதியில் மக்களை சந்தித்து பேசுகிறார். முன்னதாக, பரந்தூர் ஏகனாபுரத்தில் உள்ள அம்பேத்கர் திடலில் போராட்டத்தில் ஈடுபடும் மக்களைச் சந்திக்க தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அனுமதிக் கேட்டிருந்தார். ஆனால், அது திறந்தவெளி மைதானம் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டது. அதே நேரம் 4 நிபந்தனைகளுடன் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் போராட்டக்காரர்களைச் சந்திக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது. விஜய்யுடன் குறிப்பிட்ட கட்சி நிர்வாகிகளுக்கும், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான வாகனங்களுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, செய்தியாளர்களிடம் பேசிய த.வெ.க -வின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், “12 – 1 மணிக்குள் தலைவர் தளபதி வருகிறார். அனைத்து விவகாரம் குறித்தும் தலைவர் விஜய் பேசுவார் என்றார்.
அப்போது, கட்சித் தலைவர் மக்களைச் சந்திப்பதற்கு இவ்வளவு பிரமாண்டம் தேவையா என ஆர்எஸ்.பாரதி கூறியது குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் கூறியவர்,அப்படி ஒன்றும் இங்கு செட்அப் செய்யப்படவில்லை. இவ்வளவு கெடுபிடிகள் இருப்பதற்கு காவல்துறையைக் கேளுங்கள்” எனக் கூறினார்.
விஜய் வருகையை முன்னிட்டு, பரந்தூர் – காஞ்சிபுரம் சந்திப்பு பகுதியில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். வருபவர்கள் ஏகனாபுரம் உள்ளிட்ட கிராமத்தைச் சேர்ந்தவர்களா என ஆய்வு செய்கின்றனர். இதுவரை 30க்கும் மேற்பட்ட வேன்களில் பொதுமக்கள் வருகை. வெளியூர் நபர்களை போலீசார் திருப்பி அனுப்பி வருகின்றனர்.
பரந்தூரில் விஜய் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்க சென்ற நிர்வாகிகளை காவல் துறையினர் தடுத்து நிறுத்தப்பட்ட நிலையில் நிர்வாகிகள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அந்த பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது. விஜய் சந்திப்பில் அடையாள ஆவணங்கள் வைத்திருப்போருக்கு மட்டுமே போலீசார் அனுமதி அளிக்கின்றனர்.
இதற்கிடையில் பரந்தூர் பகுதி மக்களுக்கு விஜய் கட்சி சார்பில் உணவு வழங்கப்பட்டது. பரந்தூரில் விஜய் என்ன பேசப் போகிறார் என எதிர்ப்பார்பு அதிகரித்துள்ள நிலையில் அவரை காண மக்கள் குவிந்து வருகின்றனர். பரந்தூர் செல்லும் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. தமிழக அரசியல் கட்சிகளும், விஜய் பேசுவதை ஆவலோடு எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இந்த நிலையில், பரந்தூர் வந்த விஜய்க்கு, வழிநெடுக தவெம தொண்டர்கள், பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். பரந்தூர் வந்த விஜய், மக்களை சந்திக்க அனுமதி வழங்கப்பட்டுள்ள இடத்தில், மக்களிடையே உரையாற்றினார்.