“பொறுக்கி”யின் கவிதையை திருடிய “மகாகவி!: மனுஷ்யபுத்திரனுக்கு கடங்கநேரியான் பதில்

Must read

கடந்த சில நாட்களுக்கு முன், சமூகவலைதளங்களில்.. குறிப்பாக முகநூலில் பெரும் விவாதப் பெருளானது, கவிஞர் மனுஷ்யபுத்திரனின் வார்த்தைகள். கவிஞர் கடங்கநேரியானை, “பொறுக்கி” என விளித்தது.
தொடர்ந்து பத்திரிகை டாட் காம் இதழிடம் பேசிய மனுஷ்யபுத்திரன், “பொறுக்கிகளை செருப்பால் அடிப்பேன்” என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில், கவிஞர் கடங்கநேரியான், நமது பத்திரிகை டாட் காம் இதழுக்கு இன்று எழுதியுள்ள கடிதம்:

வரவர் தம் சொற்களாலேயே வெளிப் படுவர் என்கிறது வேதாகமம் . கலைஞர் தொலைகாட்சியின் நிலைய வித்துவான் மனுஷ்யபுத்திரன் என்னை “பொறுக்கி ” என்றழைத்ததையும் ” செருப்பால் அடிப்பேன் ” எனச் சொன்னதையும் இப்படித்தான் பார்க்கிறேன்.

அதிகாரக் குவி மையத்திற்கு எதிராக பயணிப்பதுவும் , பிம்ப உருவாக்கத்தை சிதைப்பதுவும்/ தகர்ப்பதுவும் இலக்கியச் செயல்பாடுகளில் ஒன்றென நம்புகிறேன் . அதன்பொருட்டு யாதொரு பரபட்சமுமின்றி விமர்சிக்கிறேன் .
அப்படியான விமர்சங்களில் அதிகம் பாதிக்கப்பட்டது மனுஷ்யபுத்திரனின் இரட்டை நாக்கு.

எழுத்தாளர்கள் லட்சுமி சரவணக்குமார், வா. மணிகண்டன் போன்றவர்கள் தங்களுக்கு வரவேண்டிய ராயல்டி யை மனுஷ்யபுத்திரனிடம் கேட்டபோது நானும் அவர்களுக்கு ஆதரவாக நின்றேன். அதன்பொருட்டு நிறைய விமர்சனங்களையும் / பகடியையும் செய்திருக்கிறேன். தன்னுடைய பதிப்பகத்தில் புத்தகம் கொணர்ந்த எழுத்தாளர்களுக்கு உரிய ராயல்டி கொடுக்காத மனுஷ்ய புத்திரன் தொலைக்காட்சிகளில் அறச்சீற்றம் கொள்வதை பகடி செய்து தானே கடக்க வேண்டும்?

னுஷ்யபுத்திரன்

சுயமோகத்துடன் தான் கட்டி எழுப்பும் பிம்பத்தை என்னைப்போன்றவர்கள் பகடி செய்வதைத் தாங்கிக்கொள்ள முடியாமல், பகடியை அவதூறு என்கிறார் மனுஷ்யபுத்திரன்.

திருடனே பொருளின் உரிமையாளனுக்கு திருட்டுப் பட்டம் கட்டி செருப்பால் அடிப்பேன் எனச் சொல்லும் விந்தை இங்கு மட்டுமே நடக்கிறது .அந்தக் கொடுமையை தன்னுடைய தொலைகாட்சி / பதிப்பக / அரசியல் பிம்பத்தால் மனுஷ்யபுத்திரன் இங்கே நடத்துகிறார்.

ஆம் சமீபத்தில் அகரமுதல்வன் நேர்கண்டு மோக்லி பதிப்பகம் வெளியிட்ட “நன்றேது தீதேது” புத்தகத்தில் அகரமுதல்வன் கேட்ட, “உங்களது கவிதையை மனுஷ்யபுத்திரன் கையாடல் செய்துவிட்டார் என குற்றம் சாட்டினீர்கள். நீங்கள் அதனை பல்வேறு இடங்களில் சுட்டிக்காட்டிக் கொண்டே இருக்கிறீர்கள் . அவர் உங்களின் இந்தக் கவிதையை எவ்வாறு கையாடல் செய்திருக்கிறார்?” இந்தக் கேள்விக்கு கீழ்க்கண்டவாறு பதில் சொன்னேன்:

“இரண்டாயிரத்து பதினான்காம் ஆண்டின் கோடை காலத்தில் ஒரு நாள் இருசக்கர வாகனத்தில் நெல்லையிலிருந்து அம்பாசமுத்திரத்திற்கு சென்று கொண்டிருந்தேன் . அப்போது கல்லிடைக்குறிச்சியில் மொத்தம் நான்கே நான்கு பேர் பங்கேற்ற இறுதி யாத்திரை ஒன்று சென்று கொண்டிருந்தது . அப்போது நான் மதுரையில் வசித்துக் கொண்டிருந்தேன். என்னுடைய கிராமத்திற்கும் கல்லிடைக்குறிச்சிக்கும் முப்பது கிலோமீட்டர் தொலைவு தான்.

அந்தக் காட்சி மனதை வெகுவாக பாதிக்க அம்பாசமுத்திரம் ஆற்றுப் பாலத்தில் நின்று கொண்டு தாமிரபரணியை பார்த்தவாறே புகைத்துக் கொண்டிருந்தேன். அப்போது ஆற்றில் ஒற்றை மாலை மட்டும் மிதந்து வந்தது. வலிமிகுந்த இந்த இரண்டு காட்சிகளும் தான் “இறுதி யாத்திரை” எனும்கவிதையாக பிறந்தது.//சாவுக்கொட்டுச் சத்தமில்லை சாராயமருந்தி யாரும் சலம்பவுமில்லை முன்னும் பின்னும் யாரும் வரவும் இல்லை . தனியே தூக்கிச் செல்கிறது நதி , மயானம் வரை பிணம் சுமந்து வந்த மாலையை … ..//

கீழே மனுஷ்யபுத்திரனின் கவிதை …

// உடன் வருபவர்கள் இல்லை தாரை தப்பட்டைகள் இல்லை குடிகாரர்களின் ஆட்டம் இல்லை வழி நெடுக்கக் கசியும் பிரிவின் துயரங்கள் இல்லை. அமரர் ஊர்தியில் போர்த்திய மாலைகளிலிருந்து மலர்கள் நீர் வழியெங்கும் அவ்வளவு தனிமையுடன் உதிர்ந்து கொண்டிருக்கின்றன …..//

ஒரே காட்சி / கருப்பொருள் இரண்டு கவிஞர்களின் கவிதைக்குள் வரலாம், ஆனால் அது இப்படி வார்த்தைக்கு வார்த்தை ஒன்று போல இருக்காது. நான் புதியவன் . அவர் அறியப்பட்ட கவிஞர் . நாளையே அவருடைய கவிதையை நான் பிரதியெடுத்து விட்டதாக அவருடைய பலத்தைப் பயன்படுத்தி யாரையாவது எழுத வைக்கலாம். ஆக இதனை பதிவு செய்வது என்னுடைய கடமையாகிறது.

“இதற்கு எதிர்வினையாக நண்பர் அருணாச்சலம் அவர்களின் மேகா பதிப்பகத்தின் துவக்க விழாவிற்கு முந்தைய நாள், “கடங்கநேரியானும் நானும் ஒன்றா , அவர் இருக்கும் மேடையில் நான் இருக்கமாட்டேன் எனச் சொல்லியிருக்கிறார் மனுஷ்யபுத்திரன்.

“எல்லோரையும் போல அவரும் விமர்சிக்கிறார் அதற்கா இப்படி?” என திருப்பிக் கேட்க “நான் அவருடைய கவிதையை திருடி விட்டதாகச் சொல்கிறார். ஒரே மேடையில் அமர்ந்தால் அதனை ஆமோதிப்பது போலாகிவிடும்” என பிடிவாதம் பிடித்திருக்கிறார் மனுஷ்.

எப்போதும் மேடைக்கு கீழே இருந்து பழக்கப்பட்ட நான் அந்த விழாவுக்குச் செல்லவில்லை. பின்னர் அதே அருணாச்சலம் நடத்திய மேகா இலக்கிச் சந்திப்பின் துவக்க விழாவில் நான் தான் வரவேற்புரை ஆற்றினேன்.
தன்னைப் புகழாமல், விமர்சிப்பவர்களை மிக மோசமாக தாக்கக் கூடியவர் மனுஷ்யபுத்திரன். அவரிடம் கருத்துச் சுதந்திரத்தை ஒரு போதும் எதிர்பார்த்ததில்லை .

சட்டசபை பிரச்ச்சாரத்தின் போது திருமங்கலம் கூட்டத்தில் வைத்து நடிகர் விஜயகாந்த் பத்திரிக்கையாளர்களை பார்த்து துப்பியதை “நாம செய்யணும்னு நெனைச்ச்சோம் அவர் செய்துவிட்டார்” எனப் பேசியவர் தான் மனுஷ். சண்டைக்கோழி திரைப்படத்தில் கவிஞர் குட்டி ரேவதியை அவமதித்து உள்நோக்கத்துடன் வசனம் எழுதிய எஸ் .ராமகிருஷ்ணனை கண்டித்து எதிர்வினையாற்றியதற்காக “பிளாட்பாரத்தில் பின்னடித்து விற்கப்படும் ஆபாசப் புத்தகம்” என்று கவிஞர் சுகிர்தராணியின் கவிதைத் தொகுப்பு பற்றி உயிர்மையில் எழுதினார் மனுஷ்யபுத்திரன்.

கடங்கநேரியான்

அவ்வளவு ஏன் ?

சமீபத்திய சர்ச்ச்சையில் கூட ” மூடர் “, “சுண்டெலி ” , “அல்பம்” என கவிஞர்கள் சுகிர்தராணி மற்றும் மாலதி மைத்திரியை வசைபாடிய மனுஷ் தான் காலமெல்லாம் பெண்களை மதிப்பவர் (?)

இதனோடு உயிமையில் புத்தகம் கொணர்ந்த பெண் படைப்பாளிகளை அவமதிக்கும் விதமாக “உயிர்மையில் புத்தகம் எழுதிய பெண்களையும் என்னையும் கடங்கநேரியான் தவறாக எழுதியதால்தான் , அதுவரை பொறுமையாக இருந்த நான் , இணைய பொறுக்கி என திட்டினேன்” என பத்திரிக்கை காம் இணைய இதழுக்கு பேட்டியளிக்கிறார்.

இது எவ்வளவு பெரிய பொய்!!!

உயிர்மையில் புத்தகம் பதிப்பித்த பெண் படைப்பாளிகளோடு இன்றுவரை நல்ல நட்போடு தான் இருக்கிறேன். மேலும் இதுவரை நான் பொதுத்தளத்தில் விமர்சித்தது ஒருவருடைய பொதுத்தள எழுத்து / செயல்பாடு சார்ந்து தானே தவிர தனிப்பட்ட வாழ்க்கை குறித்து அல்ல. இதனை அனைவரும் ஒப்புக் கொள்வர். அதனால் தான் இத்தனை சர்ச்சை / சண்டைகளுக்குப் பிறகும் என்னோடு நண்பர்கள் சக படைப்பாளிகள் நிற்கிறார்கள். எந்தப் பெண் படைப்பாளியை மனுஷ்யபுத்திரனோடு சேர்த்து எங்கே தவறாக எழுதினேன் என மனுஷ்யபுத்திரன் நிரூபிக்க வேண்டும். அல்லாமல் போனால் தன்னுடைய மலத்தையே எடுத்து புசிப்பது ” எனும் அவருடைய வார்த்தைகள் அவருக்கே உரித்தாகட்டும்.

மேலும் அலைக்கற்றை வழக்குகள் , ஈழத்தமிழர்களுக்கு திமுக இழைத்த துரோகம் போன்றவற்றை உயிர்மை தலையங்கத்தில் பக்கம் பக்கமாக தானெழுதிய வார்த்தைகளுக்கு எதிராகவே இன்று களமாடும் மனுஷ்யபுத்திரன் போல அல்ல கடங்கநேரியான். சரியோ தவறோ நானெழும் வார்த்தைகளுக்கு உண்மையாக இருந்து வந்திருக்கிறேன் / இருப்பேன். அதன் பொருட்டு ஏற்படும் யாதொரு எதிர்வினையையும் சந்திக்க ஆவலாக இருக்கிறேன் .

ஆம்! நான் “மனிதர்களை விட சொற்களையே அதிகம் நம்புகிறேன்”. அது யாருக்கும் விசுவாசமில்லாதது. சொற்களுக்கு உண்மையாக இல்லாதவர்களை அம்பலப்படுத்தி அசிங்கப்படுத்திவிடும்

இப்படிக்கு,

கடங்கநேரியான்.

(09.05.2017 – செவ்வாய்க்கிழமை இரவு 07,38)

பின் & முக்கிய குறிப்பு: இது கவிதை அல்ல

More articles

Latest article