சென்னை: பாலியல் மற்றும் கட்டப்பஞ்சாயத்தில் ஈடுபட்ட 2 வழக்கறிஞர்கள், பணி செய்ய இடைக்கால தடை விதித்து  தமிழ்நாடு புதுச்சேரி பார் கவுன்சில் நடவடிக்கை எடுத்து உள்ளது.

தற்போதைய காலகட்டத்தில் சில வழக்கறிஞர்கள் ரவுடிகளைப் போலவே கட்டப்பஞ்சாயத்து செய்து வருகின்றனர். பலர் குற்றப்பின்னணி உள்ளவர்களாக சட்டவிரோத செயல்களை அடாவடித்தனமாக செய்து வருவதை காணமுடிகிறது. வழக்கறிஞர்கள் என்றால் என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற மிதப்பில் செயல்பட்டு வருகின்றனர். மேலும் சிலர் ரவுடிகளாகவும் சுற்றி வருகின்றனர். இதுபோன்ற வழக்கறிஞர்களை கட்டுப்படுத்த நீதிமன்றங்கள், பலமுறை பார் கவுன்சிலுக்கு உத்தரவிட்டு உள்ளன. இதையடுத்து,   குற்ற செயல்களில் ஈடுபடும் வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளவே, பார் கவுன்சில் “ஒழுங்கு நடவடிக்கை குழு” எனும் “Disciplinary Committee”-யினை ஏற்ப்படுத்தி நடவடிக்கை எடுத்து வருகிறது.

அதன்படி,  குற்றம் சாட்டப்படும் வழக்கறிஞர் மீது விசாரணை மேற்கொள்ளப்படும். குற்றம் நிரூபிக்கப்படும் நிலையில், தண்டனை வழங்கப்படும். வழக்கறிஞர் தொழில் செய்ய இயலாத வகையில் அவர்களது வழக்கறிஞர் பதிவினை ரத்து செய்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட அதிக வாய்ப்பு உள்ளது.

இந்த நிலையில், புகார்கள் தொடர்பாக 2 வழக்கறிஞர்கள் மீது பார்கவுன்சில் நடவடிக்கை எடுத்துள்ளது. ஒரு வழக்கறிஞர் மீது, பாலியல் குற்ச்சாட்டு எழுந்துள்ளது. அவர்  போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார்.  மற்றொருவர் சொத்தை அபகரித்து, அதைக் காலி செய்ய ரூ.20 லட்சம் கேட்டு கட்டப்பஞ்சாயத்து செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளார்.

இவர்களை வழக்கறிஞர் பணியிலிருந்து இடைநீக்கம்  தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் அறிவித்து உள்ளது.