கடலூர்: என்எல்சி விரிவாக்கத்துக்கு நிலம் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்தும், என்எல்சியை வெளியேற்றக் கோரியும்  பாமக தலைவர் அன்புமணி  ராமதாஸ் 2 நாள் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்றும், நாளையும் அவர் கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் செய்து, மக்களிடையே ஆதரவை திரட்டி வருகிறார்.

பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவராக அன்புமணி ராமதாஸ் நியமிக்கப்பட்டதிலிருந்து பல்வேறு மாவட்டங்களுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு அங்கு நடைபயணம் செய்து மக்களை சந்தித்து வருகிறார்.  வன்னியர்கள் அதிகம் உள்ள மாவட்டங்களில் அவரது நடைபயணம் அவ்வப்போது நடைபெற்று வருகிறது. எதிர் வரும் நாடாளுமன்ற தேர்தலில் கட்சியின் பலத்தை நிரூபிக்க இவ்வாறு தொடர் பயணத்தை மேற்கொண்டு வருகிறார் என்று கூறப்படகிறது.

இந்த நிலையில், இன்றும், நாளையும் என்எல்சிக்கு எதிராக கடலூர் மாவட்டத்தில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். இன்று கடலூர் மாவட்டம் வானதிராயபுரத்தில் தனது நடைபயணத்தை தொடங்கினார்.

இனறைய நடைபயணத்தின்போது செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி, என்எல்சியால் கடலூர் மாவட்ட மக்களுக்கு எந்த பயனும் இல்லை என குற்றம் சாட்டியதுடன், திமுக அரசை கடுமையாக சாடினார். விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்ப்பதே வேளாண் அமைச்சரின் பணி, ஆனால் அவர்கள் என்.எல்.சி நிர்வாகத்துக்கு உடந்தையாக,  செயல்படுகிறார்கள் என்று குற்றம்சாட்டியவர்,  என்எல்சி சுரங்க பணிகளுக்கு விளைநிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று கூறினார்.

இதுதொடர்பாக பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில்,  என்எல்சி பிரச்னையில் இன்றும் நாளையும் நடைப்பயணத்தை மேற்கொள்கிறார். இந்த இரண்டு நாட்களும் கடலூர் மாவட்டம் வானதிராயபுரம் முதல் தென்குத்து, கங்கை கொண்டான், வடக்கு வெள்ளூர், அம்மேரி, தொப்பிலிக்குப்பம், ஆதண்டார்கொல்லை, மும்முடிச்சோழன், கத்தாழை, வளையமாதேவி, கரிவெட்டி வரை நடைப்பயணத்தை மேற்கொள்கிறார்.

என்எல்சி நிறுவனத்திற்கு ஏற்கெனவே நிலம் வழங்கியவர்களுக்கு நிறுவனத்தில் வேலை கொடுக்கப்படும் என்று சொல்லப்பட்டது. ஆனால், என்எல்சியில் அவ்வப்போது வடமாநில தொழிலாளர்களுக்கு தொடர்ந்து பணி வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல தற்போது இந்நிறுவனத்தை மேலும் விரிவாக்க சுமார் 25 ஆயிரம் ஏக்கர் நிலங்களை அடுத்த கட்டமாக நிறுவனம் கைப்பற்ற இருக்கிறது. இதற்காக சுற்றுவட்டாரத்திலிருக்கும் சுமார் 49 கிராம மக்களை அணுகி இருக்கிறது. இதைதான் அன்புமணி ராமதாஸ் கடுமையாக எதிர்த்திருக்கிறார்.

அதாவது, “கடலூர் மாவட்ட மக்கள் வழங்கிய நிலங்களையும், அதில் உள்ள நிலக்கரி வளங்களையும் ஆதாரமாகக் கொண்டு அமைக்கப்பட்ட என்.எல்.சி. நிறுவனம் இன்று இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாக உயர்ந்து நிற்கிறது. ஆனால், அதன் பயன்கள் மக்களுக்கு கிடைக்கவில்லை. அடுத்தக்கட்டமாக கடலூர் மாவட்டத்தின் 49 கிராமங்களில் இருந்து 25 ஆயிரம் ஏக்கர் விளைநிலங்களை கையகப்படுத்தும் முயற்சியில் மாவட்ட நிர்வாகத்தின் துணையுடன் ஈடுபட்டிருக்கிறது. இந்த முயற்சி வெற்றி பெற்றால் கடலூர் மாவட்ட மக்கள் அவர்களின் சொந்த மண்ணில் அகதிகள் ஆகிவிடுவார்கள்.

வேளாண் விளைநிலங்கள் பறிக்கப்படுவதை தடுக்க வேண்டியதும், கடலூர் மாவட்டத்தை பாலைவனமாக மாற்றி வரும் என்.எல்.சி நிறுவனத்தை வெளியேற்ற வேண்டியதும் அவசியம் ஆகும். 49 கிராமங்களில் இருந்து என்.எல்.சி கையகப்படுத்தவுள்ள 25.000 ஏக்கர் நிலங்களும் பொன் விளையும் பூமி. அங்கு நெல், கரும்பு, வாழை. முட்டைக்கோஸ் போன்ற பணப்பயிர்கள் விளைகின்றன. ஏக்கருக்கு ஆண்டுக்கு ரூ.10 லட்சம் லாபம் வழங்கும் அந்த நிலங்கள் பறிக்கப்பட்டால் விவசாயிகள் வாழ்வாதாரம் இழப்பார்கள்.

நிலம் கொடுப்பவர்களுக்கு என்.எல்.சியில் வேலை கிடைக்குமா? கண்டிப்பாக கிடைக்காது. என்.எல்.சிக்காக கடந்த காலங்களில் 37.256 ஏக்கர் நிலங்களைக் கொடுத்த 25 ஆயிரம் குடும்பங்களிலிருந்து ஒருவர் கூட இப்போது என்எல்சி நிறுவனத்தில் வேலையில் இல்லை. இப்போது நிலம் தருபவர்களுக்கும் வேலை கிடையாது என அறிவித்துள்ளனர். பல ஆண்டுகளாக பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு பணி நிலைப்பு மறுக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.

மேலும், “என்.எல்.சிக்கு நிலம் கையகப்படுத்த வேண்டியது அவசியமா? நிச்சயமாக இல்லை. சுரங்க விரிவாக்கத்திற்காக 1987-ஆம் ஆண்டில் கையகப்படுத்தப்பட்ட 10.000 ஏக்கர் நிலம் 35 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் கிடக்கின்றன. என்.எல்.சி வசம் இப்போதுள்ள நிலங்களைக் கொண்டு இன்னும் 40 ஆண்டுகளுக்கு தேவைக்கும் அதிகமாகவே நிலக்கரி எடுக்க முடியும். பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்கும் மத்திய அரசின் பணமாக்குதல் (National Monetisation Pipeline) திட்டத்தின் கீழ். என்.எல்.சி நிறுவனம் 2025ஆம் ஆண்டுக்குள் தனியாருக்கு விற்கப்படவுள்ளதாக நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது. தனியார் நிறுவனத்தால் நிலங்களை கையகப்படுத்த முடியாது என்பதால் என்.எல்.சி நிறுவனமே நிலங்களை கையகப்படுத்தி தனியாருக்கு விற்பனை செய்யப்போகிறது” என்று விமர்சித்துள்ளார். எனவே இதனை எதிர்த்துதான் அவர் நடைப்பயணத்தை இன்று தொடங்குகிறார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

என்எல்சிக்கு கையகப்படுத்தும் நிலம் ஏக்கருக்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும்! அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம்…