சென்னை:

பாமகவுக்கு இனி தமிழகத்தில் அரசியல் எதிர்காலம் இல்லை என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் கூறி உள்ளார்.

லோக்சபா தேர்தல் மற்றும் சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை  சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சி வேல்முருகன் வாழ்த்து தெரிவித்தார்.

அதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய வேல்முருகன், இந்த மாபெரும் வெற்றியை தமிழக வாழ்வுரிமைக் கட்சி மனதார வரவேற்கிறது என்றவர், தமிழகம் சமூக நீதிக்கான மண் என்பதை தேர்தல் வெற்றிகள் மூலம் மீண்டும்  நிரூபித்திருக்கிறது என்றார்.

தமிழ் மக்களுக்கும் சொந்த சமூகத்திற்கும் மருத்துவர் ராமதாசும் பாட்டாளி மக்கள் கட்சியும் செய்த துரோகத்தை தேர்தல் பிரசாரத்தின்போது  மக்களிடம் எடுத்துரைத்தோம் என்றவர்.  வன்னியர்களுக்கு பாட்டாளி மக்கள் கட்சி செய்த துரோகத்தின் பலனாக, இன்று அவர்கள் போட்டியிட்ட 7 தொகுதியிலும் தோல்வியை தழுவியுள்ளனர்.

பாமகவின் அரசியல் பாணி இனி தமிழகத்தில் பலிக்காது என்றவர், பாமகவுக்கு இனி தமிழகத்தில் எதிர்காலம் இல்லை என்றும்,  பாமக தமிழக மக்களை ஏமாற்றி வஞ்சித்து வருகிறது என்றார்.   திராவிட கட்சிகளுடன் ஒரு போதும் கூட்டணி கிடையாது என்று கூறியிருந்த பாமக, திடீரென அதிமுக கூட்டணியில் இடம் பெற்றது. இதன் காரணமாக அக்கட்சியில் இருந்து சில நிர்வாகிகள் விலகி மற்ற கட்சிகளில் சேர்ந்தனர். தேர்தலிலும், அன்புமணி ராமதாஸ் உட்பட அனைவரும் தோல்வி அடைந்தனர் என்று கூறியவர், அவர்களின் கூட்டணி உடன்பாடு படி,  ஒரு ராஜ்ய சபா சீட் மட்டுமே மிச்சம் என்று தெரிவித்தார்.