சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் பிறந்தநாள் இன்று கொண்டாடப்படுகிறத. இதையொட்டி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பல அரசியல் கட்சி தலைவர்கள் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸின் 85 வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.   ராமதாஸின் பிறந்தநாளை ஒட்டி பல்வேறு பகுதிகளில் அக்கட்சியினர் சமூக நலத்திட்டங்களை செய்து வருகின்றனர் இன்று காலை முதலே டிவிட்டர் (எக்ஸ்) தளத்தில் #DrRamadossAyya85, #மருத்துவர்அய்யா85 என்ற ஹாஷ்டேக்  டிரெண்ட் செய்யப்பட்டு வருகிறது. பலரும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

டாக்டர் ராமதாசுக்கு  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து தனது டிவிட்டர் வளைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று 85-ஆவது பிறந்தநாள் காணும் மருத்துவர் அய்யா ராமதாஸ் அவர்களுக்கு வாழ்த்துகள்! இந்த மண்ணில் வேரூன்றியுள்ள சமூகநீதி அரசியலும், தமிழ் உணர்வும் தழைக்கத் தங்களது உழைப்பு பயன்படட்டும்!” என வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தனது எக்ஸ் சமுக வலைதள பக்கத்தில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் மதிப்பிற்குரிய ஐயா டாக்டர் ராமதாஸ்  அவர்களின் 85 ஆவது பிறந்த தினமாகிய இன்று, தமிழக பாஜக   சார்பாக மனமார்ந்த நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். தமிழகத்தில், சமூக நீதிக்கான நெடிய போராட்ட வரலாறு கொண்ட ஐயா  ராமதாஸ்  அவர்கள், நீண்ட ஆயுளுடன், இன்னும் பல ஆண்டுகள் மக்கள் பணியைத் தொடர இறைவனை வேண்டிக் கொள்கிறேன். என்று குறிப்பிட்டுள்ளார்.

நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் வெளியிட்டுள்ள வாழ்த்து டிவிட்டில் , தமிழ்ச்சமூகத்தின் முன்னேற்றத்திற்கும், மேம்பாட்டிற்கும் அரும்பணி ஆற்றிவரும் தமிழ்நாட்டின் மூத்த அரசியல் தலைவர், பசுமைத் தாயகம் அமைப்பு மூலம் மரம் வளர்ப்பை ஊக்கப்படுத்தி வரும் சூழலியல் நாயகர், சமூகநீதி காவலர், தமிழ் குடிதாங்கி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் எங்கள் ஐயா மருத்துவர் ச.ராமதாசு அவர்களுக்கு நெஞ்சம் நிறைந்த இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துகள்!

ஐயா அவர்கள் இன்னும் பல ஆண்டுகள் உடல் நலத்துடனும், உள்ள நிறைவுடனும் நலமோடு வாழ்ந்து தமிழ்சமூகத்தின் உரிமைகள் வென்றிட பெருந்துணை புரிந்திட விழைகிறேன்! என்று குறிப்பிட்டுள்ளார்.