டில்லி

தேர்தல் ஆணையத்தால் வெளியிடும் தேதி ஒத்தி வைக்கப்பட்ட பி எம் நரேந்திர மோடி திரைப்படம் வரும் 24 அன்று வெளியாகிறது.

மோடி வேடத்தில் விவேக் ஓபராய்

பிரதமர் மோடியின் வாழ்க்கை கதையை அடிப்படையாக கொண்டு எடுக்கப்பட்டதாக கூறப்படும் பி எம் நரேந்திர மோடி என்னும் திரைப்படம் சென்ற மாதம் 11 ஆம் தேதி வெளி வருவதாக இருந்தது.   தேர்தல் நேரத்தில் இந்த திரைப்படம் வெளியாவது தேர்தல் நடத்தை விதிகளை மீறிய செயல் என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் புகார் அளித்தன.

அதை ஒட்டி இந்த படம் திரையிடுவதை தள்ளி வைக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டது.   இதை எதிர்த்து  பட தயாரிப்பாளர்கள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.    உச்சநீதிமன்றம் இந்த திரைப்படத்தை தேர்தல் ஆணைய அதிகாரிகள் பார்த்த பிறகு முடிவை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக் கொண்டது.

அதற்கிணங்க இந்த திரைப்படத்தை பார்த்த தேர்தல் ஆணைய அதிகாரிகள் திரைப்படம் குறித்து விரிவான அறிக்கையை அளித்தார்கள்.   அதில் இந்த திரைப்படத்தில் எதிர்க்கட்சியினரை பற்றி தவறாக சித்தரித்துள்ளதாகவும் ஒரு கட்சியினருக்கு மட்டுமே ஆதரவாக இந்த திரைப்படம் உள்ளதாகவும் கூறப்பட்டது.    அதை ஒட்டி இத்திரைப்படம் தேர்தல் முடியும் வரை வெளியிட தடை விதிக்கப்பட்டது.

பி எம் நரேந்திர மோடி திரைப்பட தயாரிப்பாளர்களில் ஒருவரான சந்தீப் சிங், “நான் ஒரு பொறுப்புள்ள குடிமகன் என்ற முறையில் இப்படம் வெளியீட்டை தள்ளி வைத்ததை வரவேற்கிறேன்.   பல விவாதங்களுக்கு பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது என்பதையும் நான் அறிவேன்.

மக்களவை தேர்தல் முடிவுகள் வெளியாகும் மே 23 ஆம் தேதிக்கு அடுத்த நாளான மே 24 அன்று இந்த திரைப்படம் வெளியாகும்.     அப்போது இந்த திரைப்படம் வெளியாவதில் யாருக்கும் எவ்வித பிரச்சினையும் இருக்காது என நான் நம்புகிறேன்” என ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.