டில்லி

ந்தியாவில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு ஏற்ற சூழல் உள்ளதாக பிரதமர் மோடி கூறி உள்ளார்.

கொரோனா பாதிப்பால் உலகெங்கும் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது.   அதன் பாதிப்பு இந்தியாவிலும் தென்படுவதால் பல வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடுகளை செய்யத் தயக்கம் காட்டி வருகின்றனர்.  இந்நிலையில் விவாடெக் தொழில்நுட்ப கருத்தரங்கில் பிரதமர் மோடி காணொலி மூலம் பங்கு கொண்டு உரையாற்றினார்.

மோடி தனது உரையில், “இந்தியாவின் பல்வேறு துறைகளிலும்  கொரோனா பெருந்தொற்று,  பாதிப்புகளை ஏற்படுத்தியதைப் பார்க்க முடிகிறது.  ஆயினும், அது விரக்தியை அளிக்கும் அளவுக்குச் செல்லவில்லை.  இந்தியத் தொழில்துறை கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்டுள் ள பாதிப்புகளைச் சரி செய்யவும், புதிய வாய்ப்புகளுக்கு தயார்ப்படுத்திக் கொள்ளவும் கவனம் செலுத்த வேண்டும்.

உலக நாடுகளுக்கு இந்தியாவில் முதலீடுகளைச் செய்ய நான் அழைப்பு விடுக்கிறேன்,  வெளிநாட்டு, முதலீட்டாளர்களுக்குத் தேவையான அனைத்தும் கிடைக்கும் நாடாக இந்தியா திகழ்கிறது.

இந்தியாவில்  திறமைமிக்க மனிதவளம், மிகப் பெரிய சந்தை, முதலீடு, சுற்றுச்சூழல், கலாச்சாரம் ஆகிய ஐம்பெரும் தூண்கள் உள்ளன.  இவற்றை எந்த ஒரு நிறுவனமும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் உள்ளது. எனவே இந்த சாதகமான அம்சங்களைப் பயன்படுத்திக்கொள்ள இந்தியாவில் முதலீடு செய்யுமாறு உலக நாடுகளுக்கு அழைப்பு விடுக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.