டெல்லி: நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுடன் இன்று இரவு பிரதமர் மோடி கலந்துரையாடுகிறார். பரிக்ஷா பே சார்ச்சா 2021 என்ற பெயரில் நடத்தப்படும் இன்ற நிகழ்ச்சி இன்று இரவு 7 மணி அளவில் காணொளி காட்சி வாயிலாக நடைபெற உள்ளது.

கடந்த  2018ம் ஆண்டு முதல், ‘பரிக்ஷா பே சார்ச்சா’ என்ற பெயரில் பிரதமர் நரேந்திர மோடி பொதுத்தேர்வு எழுதும் மாணாக்கர்கள் மற்றும் பெற்றோர்களுடன்  காணொளி காட்சி மூலம் கலந்துரையாடி, அவர்களின் மன அழுத்தத்தை பொக்கும் வகையில் ஆலோசனைகளை வழங்கி வருகிறார். இந்த நிகழ்ச்சி வழக்கமாக ஜனவரியில் நடத்தப்படும் நிலையில், இந்த கொரோனா தொற்று காரணமாக தள்ளி வைக்கப்பட்ட நிலையில்,  இன்று (ஏப்ரல்7) மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதை  மத்திய கல்வித் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்  உறுதிபடுத்தி உள்ளார்.

இந்த ஆண்டு  ‘பரிக்ஷா பே சார்ச்சா 2021’ நிகழ்வில் பங்கேற்க 10.5 லட்சம் மாணவர்கள், 2.6 லட்சம் ஆசிரியர்கள், 92 ஆயிரம் பெற்றோர்கள் என 14 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இவர்களில்  60 சதவிகிதம் பேர் ஒன்பது, பத்தாம் வகுப்பு மாணாக்கர் ஆவர். வெளிநாட்டு மாணவர்கள் 81 பேர் முதன் முறையாக இன்றைய நிகழ்ச்சியில் கலந்துகொள்கின்றனர் என்றுகூறினார்.

கடந்தாண்டு இந்த நிகழ்ச்சியில் பங்கேற்க   இரண்டாயிரம் பேரில் 66 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.