கமதாபாத்

டந்த 17 ஆம் தேதி டவ்டேல் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி ரூ. 1000 கோடி உடனடி நிவாரணம் வழங்க உத்தரவிட்டுள்ளார்.

டவ்தே புயலால் கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது.  இதனால் கோவா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டவ்தே புயல் குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா மற்றும் டையு இடையே கடந்த 17ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. அப்போது 175 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.

இந்த புயலால் குஜராத்தில் 16,000 வீடுகள்  சேதமடைந்ததாகவும், 40,000 மரங்கள், 70,000 மின்கம்பங்கள் முறிந்ததாகவும், 5,961 கிராமங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதாகவும் மாநில அரசு கூறி உள்ளது.  இதுவரை புயலால் 45 பேர் பலியாகி உள்ளனர்.   புயலால், பாதிக்கப்பட்ட பகுதியைப் பார்வையிடப் பிரதமர் மோடி நேற்று காலை டெல்லியிலிருந்து விமானம் மூலம் குஜராத்தின் பாவ்நகருக்கு வந்தார்.

அவர் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் உனா, டையு, ஜப்ராபாத், மஹூவா பகுதிகளைப் பார்வையிட்டார். அதன் பிறகு அகமதாபாத்தில் அதிகாரிகளுடன் பாதிப்புகள் குறித்து ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து குஜராத்துக்குப் புயல் நிவாரண நிதியாக உடனடியாக ரூ.1000 கோடி வழங்கப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார். புயலால் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தோருக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அவர் அறிவித்தார்.