கமதாபாத்

டந்த 17 ஆம் தேதி டவ்டேல் புயலால் பாதிக்கப்பட்ட குஜராத் மாநிலத்தைப் பார்வையிட்ட பிரதமர் மோடி மகாராஷ்டிர மாநிலத்து வரவில்லை என எதிர்க்கட்சியினர் குறை கூறி உள்ளனர்

டவ்தே புயலால் கேரளா, தமிழகம், கோவா, மகாராஷ்டிரா, கர்நாடகாவில் கடலோர மாவட்டங்களில் கனமழை கொட்டியது.  இதனால் கோவா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. டவ்தே புயல் குஜராத் மாநிலத்தின் கிர் சோம்நாத் மாவட்டத்தின் உனா மற்றும் டையு இடையே கடந்த 17ம் தேதி நள்ளிரவு கரையைக் கடந்தது. அப்போது 175 கிமீ வேகத்தில் பலத்த சூறைக்காற்று வீசியது.

டவ்தே புயலின் போது மும்பையில் அரபிக்கடலில் எண்ணெய் கிணற்றிலும், நடுக்கடலில் நிறுத்தப்பட்டிருந்த 3 படகுகளிலும் 707 ஊழியர்கள் தங்கியிருந்தனர். கடந்த 2 நாட்களாக இவர்களைப் போர்க்கப்பல்கள் மூலம் கடற்படை வீரர்கள் மீட்கும் பணி நடக்கிறது. ஒரு படகு எண்ணெய் கிணற்றில் மோதியதில் கடலில் மூழ்கியதால் பலர் கடலில் பல மணி நேரம் தத்தளித்தனர்.

மொத்தம் 273 பேர் கப்பலில் இருந்த நிலையில் 186 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.மேலும்  22 பேர் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். சுமார் 65 பேரைக் காணவில்லை எனக் கூறப்படுகிறது.  அவர்களை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.  மேலும் கப்பல் மற்றும் எண்ணெய் கிணறு பணியாளர்கள் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்

குஜராத் மாநிலத்தில் புயல் பாதிப்பை ஆய்வு செய்து நிவாரண உதவிகளை அளித்த பிரதமர் மோடி, மகாராஷ்டிராவில் பார்வையிட ஏன் வரவில்லை எனத் தேசியவாத காங்கிரஸ் கட்சி கேள்வி எழுப்பி உள்ளது.

மகாராஷ்டிர மாநில அமைச்சரும் தேசியவாத காங்கிரஸ் கட்சி செய்தி தொடர்பாளருமான நவாப் மாலிக் இவ்வாறு கேட்டுள்ளார்.  அவர் தனது டிவிட்டரில், ‘‘குஜராத்தை ஆய்வு செய்த பிரதமர் மோடி, ஏன் மகாராஷ்டிராவுக்கு வரவில்லை. இது அப்பட்டமான பாரபட்சமில்லையா?’’ எனக் கேள்வி எழுப்பி உள்ளார்.

சிவசேனா கட்சி எம்பி சஞ்சய் ராவுத் குஜராத்தில் பலவீனமான பாஜக ஆட்சி நடப்பதால் மோடி அங்குச் சென்றிருப்பதாகவும், மகாராஷ்டிராவில் திறன்மிக்க சிவசேனா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடப்பதால் இங்கு வரவில்லை என்று விமர்சித்துள்ளார்.

முன்னாள் மகாராஷ்டிர முதல்வர் பிரித்விராஜ் சவான் இது குறித்து, “டவ்தே புயலால் குஜராத் மட்டுமின்றி மேலும் 5 மாநிலங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. பிரதமர் மோடி தனது சொந்த மாநிலமான குஜராத் சென்று பார்வையிட மட்டுமே விரும்புகிறார். அவர் குஜராத்துக்கு மட்டும் அல்ல நாடு முழுமைக்கும் பிரதமர்” எனத் தெரிவித்துள்ளார்.