சென்னை: 3 நாள் பயணமாக தமிழ்நாடு வந்துள்ள பிரதமர் மோடி, இன்று ஸ்ரீரங்கம் ரங்கநாதரையும், ராமேஸ்வரம் ராமநாதசுவாமியையும் தரிசித்து ஆசி பெற உள்ளார். இதையடுத்து, இன்று காலை பிரதமர் திருச்சி புறப்பட்டார்.
தமிழகத்திற்கான 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நேற்று மாலை சென்னை வந்தடைந்தார். தொடர்ந்து, சென்னை நேரு ஸ்டேடியத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஆளுநர் ரவி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் ஆகியோருடன் சேர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார். இதையடுத்து, ஆளுநர் மாளிகையில் இரவு தங்கியிருந்து ஓய்வு எடுத்தார்.
இதைத்தொடர்ந்து, பயணத்தின் இரண்டாவது நாளான இன்று பிரதமர் மோடி ஸ்ரீரங்கம் சென்று, அங்குள்ள பிரபல ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வழிபாடு நடத்த உள்ளார். இதையொட்டி அங்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் புறப்பட்டு சென்றுள்ள பிரதமர் மோடி காலை 10.20 மணிக்கு பிரதமர் மோடி திருச்சி விமான நிலையம் சென்றடகிறார் அங்கிருந்து 10.45 மணியளவில் ஹெலிகாப்டரில் புறப்பட்டு ஸ்ரீரங்கம் யாத்ரிநிவாஸ் எதிரே பஞ்சக்கரை பகுதியில் அமைக்கப்பட்டுள்ள ஹெலிகாப்டர் இறங்கு தளத்தை அடைவார்
பின்னர் கார் மூலம் காலை 11.05 மணிக்கு ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு செல்கிறார் அங்கு பிரதமர் மோடிக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்படுகிறது. தொடர்ந்து ரங்கநாதரை தரிசிக்கும் பிரதமர்,கோயிலில் அனைத்து சன்னதிகளுக்கும் சென்று வழிபாடு செய்கிறார்
இதையடுத்து மண்டபத்தில் தமிழறிஞர்கள் கம்பராமாயணத்தை பாட, மோடி அதை கேட்கிறார் தொடர்ந்து அங்கு நடைபெறும் கம்பராமாயண பாராயண நிகழ்ச்சியிலும் பிரதமர் மோடி பங்கேற்கிறார்
பின்னர் பகல் 12.50 மணிக்கு ஸ்ரீரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு பஞ்சக்கரை பகுதியை அடைவார் அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருச்சி விமான நிலையம் சென்று, பின்னர் தனி விமானம் மூலம் பிரதமர் மதுரைக்கு புறப்பட்டு செல்கிறார்
பிரதமர் மோடியின் திருச்சி வருகையை ஒட்டி அங்கு பாதுகாப்பு பணிகளுக்காக 4000-க்கும் அதிகமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடி சாலை மார்க்கமாக பயணிக்கும் வழிகளில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. பிரதமர் மோடி பயணிக்கும் மார்கத்தில் தார் சாலைகள் புதியதாக அமைக்கப்பட்டுள்ளன. டிரோன் உள்ளிட்டவை பறக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு படையினர் 2 நாட்களுக்கு முன்பே திருச்சிக்கு வந்து, பிரதமரின் வருகையின்போது, மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து ஆய்வு செய்தனர். இதையடுத்து, விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீரங்கம் செல்லும் வழியில், நேற்று பாதுகாப்பு ஒத்திகள் மேற்கொள்ளப்பட்டன. பிரதமர் மோடி வரும் நேரத்தில் மற்ற பக்தர்களுக்கு கோயிலில் வழிபாடு நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு நடவடிக்கையாக ஸ்ரீரங்கம் பகுதியில் இன்று கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டடுள்ளது.
3 நாள் பயணமாக நாளை தமிழ்நாடு வருகிறார் பிரதமர் மோடி – மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை..!