சென்னை: பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும் வகையில், 3 நாள் பயணமாக பிரதமர் மோடி நாளை தமிழ்நாடு வருகிறார் . இதை யொட்டி, அவர் கலந்துகொள்ளும் நிகழ்ச்சிகள் நடைபெறும் பகுதிகளில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ள நிலையில்,   தலைமைச்செயலகத்தில் மத்திய, மாநில அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டனர்.

தமிழ்நாட்டில்,  6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள்  நடப்பாண்டு நடைபெறுகிறது. தமிழ்நாட்டில் சென்னை, கோவை, மதுரை, திருச்சி ஆகிய 4 இடங்களில் நடைபெற உள்ளது.  இந்த போட்டிகள்  நாளை மறுதினம், அதாவது  ஜனவரி 19-ஆம் தேதி முதல் ஜனவரி 31-ம் தேதி வரை தமிழ்நாட்டில் நடைபெறுகிறது. இதில் 36 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து, 18 வயதுக்கு உட்பட்ட பிரிவில் 6000க்கும் மேற்பட்ட வீரர் வீராங்கனைகளும், 1600க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களும் பங்கேற்க உள்ளனர். இந்த ஆண்டு 27 பிரிவுகளில் விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளன.

இந்த கேலோ இந்திய விளையாட்டு போட்டி தொடக்க விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நாளை (19ந்தேதி)  மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது. இப்போட்டிகளை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இதில் முதலமைச்சர் ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி உள்பட பலர் கலந்துகொள்கின்றனர்.

இதைத்தொடர்ந்து,  ஜனவரி 20ம் தேதி சென்னையில் இருந்து திருச்சி சென்று ஸ்ரீரங்கம் கோவிலில் தரிசனம் செய்கிறார்.  பின்னர் பாஜகவினருடன் ஆலோசனை நடத்துவார்  என எதிர்பார்க்கப்படுகிறது. இதையடுத்து  ராமேஸ்வரம் செல்கிறார். அங்கு ராமநாத சுவாமி கோயில் தரிசனம் செய்கிறார்.  பின்னர்  அங்கிருந்து 21ந்தேதி மதுரை செல்லும் பிரதமர் மோடி அங்கிருந்து டெல்லி புறப்பட்டு செல்ல உள்ளார்.

இந்த நிலையில், பிரதமர் வருகை ஒட்டி சென்னை தலைமைச் செயலகத்தில் பொதுத்துறை செயலாளர் நந்தகுமார் தலைமையில் ஆலோசனை நடைபெற்று வருகிறது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் சட்ட ஒழுங்கு ஏடிஜிபி அருண் , உயர்காவல் அதிகாரிகள் மற்றும் மத்திய மாநில அரசு அதிகாரிகள் கலந்துகொண்டனர்.  பிரதமர் வருகையின் எதிரொலியாக திருச்சி, மதுரை, ராமநாதபுரம் பகுதிகளில், டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டது.

அயோத்தி ராமர் கோவில் திறப்பு விழா மற்றும் கும்பாபிஷேகம் வரும் 22-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், தற்போது 11 நாட்கள் விரதம் மேற்கொள்ளும்  பிரதமர் மோடி பல்வேறு ஆன்மிக ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனை செய்து வருகிறார்.  நாசிக்கின் புனித காலாராம் கோவிலில் விரதத்தை தொடங்கிய பிரதமர், தொடர்ந்து பல்வேறு கோவில்களுக்கு சென்று வரும் நிலையில், கடந்த சில  நாட்களுக்கு முன்பு, மகாராஷ்டிராவில் கோதாவரி நதிக்கரையில் உள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு நடத்தினார். பிறகு பஞ்சவடியில் உள்ள கல்ராம் கோவிலுக்கு சென்று வழிபட்டார். ஆந்திராவின் லேபஷி பகுதியில் உள்ள வீரபத்ரர் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த நிலையில், கேரளா சென்றிருந்த பிரதமர், அங்குள்ள குருவாயூர் கிருஷ்ணர் கோவிலில் சாமி தரிசனம் செய்து வழிபாடு நடத்தினார்.

இதைத்தொடர்ந்து, தமிழ்நாட்டிலும் பிரபலமான ஸ்ரீரங்கம், ராமேஸ்வரம் கோவில்களில் வழிபாடு நடத்த   திட்டமிட்டுள்ளார். இதற்காக பெங்களூரில் இருந்து தனி விமானத்தில் நாளை மாலை 4.50 மணிக்கு சென்னை விமான நிலையம் வரும் பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது.

அதைத்தொடர்ந்து, சென்னை நேரு ஸ்டேடியத்தில் ‘கேலோ இந்தியா’ விளையாட்டுப் போட்டிகளை தொடங்கி வைக்கிறார். இரவு கவர்னர் மாளிகையில் தங்கும் பிரதமர்,  நாளை மறுதினம் காலை  ஸ்ரீரங்கம் செல்கிறார். கவர்னர் மாளிகையில் இருந்து விமான நிலையம் சென்று அங்கிருந்து திருச்சி செல்லும் அவர், கார் மூலம் ஸ்ரீரங்கம் சென்றடைகிறார்.

அயோத்தியில் ராமர் கோவில் மூலவர் சிலை பிரதிஷ்டை செய்யப்படுவதையொட்டி ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோவிலில் பிரதமர் மோடி சிறப்பு சாமி தரிசனம் செய்கிறார். அங்கும் கோவிலை சுத்தப்படுத்துகிறார். அங்கு சாமி தரிசனம் செய்து முடித்து ராமேசுவரம் புறப்படுகிறார். பிற்பகலில் ராமேசுவரம் செல்லும் பிரதமர் மோடி புகழ்பெற்ற ராமநாத சுவாமி கோவிலுக்குச் சென்று தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையில் பங்கேற்கிறார். அதன்பின் கோவிலை சுத்தப்படுத்தும் பணியை செய்கிறார். அன்று இரவு ஸ்ரீராமகிருஷ்ண மடத்தில் பிரதமர் மோடி தங்குகிறார்.

மறுநாள் (21-ம் தேதி) காலை ராமேசுவரம் அக்னி தீர்த்தம் கடலில் புனித நீராடுகிறார். பிறகு மீண்டும் ராமேசுவரம் கோவிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்து, அங்கு நடைபெறும் பூஜையிலும் பங்கேற்கிறார். அதன்பிறகு கார் மூலம் அரிச்சல்முனைக்கு சென்று, கோதண்டராமர் கோவிலில் சாமி தரிசனம் செய்து, பூஜையிலும் பங்கேற்கிறார். பின்னர் கடலில் புனித தீர்த்தங்களைச் சேகரிக்கும் அவர், புனிதநீர் கலசங்களுடன் டெல்லி புறப்படுகிறார்.

பிரதமரின் வருகையையொட்டி பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இந்நிலையில், பிரதமர் மோடி வருகை எதிரொலி யாக திருச்சியில் இன்று முதல் வரும் 20-ம் தேதி வரை என 3 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட கலெக்டர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபர்கள்மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தார்.

முன்னதாக கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் நடத்துவதற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.  இதில் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா மற்றும் உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர். கூட்டத்தில், போட்டி நடைபெறும் இடங்கள் மற்றும் அட்டவணை, பாதுகாப்பு ஏற்பாடுகள், பரிசு விநியோகம், மருத்துவ சேவைகள், தங்குமிடம், சுகாதாரம், உணவு வழங்குதல், விளையாட்டு மைதானங்களுக்கான நிர்வாக கட்டமைப்பு, மேடை ஏற்பாடுகள், தகவல் தொழில்நுட்ப சேவைகள், பார்வையாளர்களுக்கான அடிப்படை வசதிகள், தன்னார்வலர்கள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விரிவாக ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.