திருச்சி: ரூ.1.100 கோடி மதிப்பில் சர்வதேச தரத்தில்  அமைக்கப்பட்டுள்ள  திருச்சி விமான முனையத்தை திறந்து வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி. இந்த விமான முனையத்தின் முகப்பு தோற்றம், பிரபலமனா ஸ்ரீரங்கம் கோவிலின் கோபுரத்தை  நினைவுபடுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து பல்வேறு மக்கள் நலதிட்டங்களை தொடங்கி வைத்ததுடன், ரூ. 20,000 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, திருச்சி விமான நிலைய பன்னாட்டு முனையம் உள்பட பல்வேறு மக்கள் நலத்திட்டப் பணிகளை தொடங்கு வைக்க விமானம் மூலம் திருச்சி வருகை தந்த பிரதமர் மோடியை ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வரவேற்றனர்.

இதைத்தொடர்ந்து காலை 10.30 மணி அளவில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பிரதமர் மோடி  கலந்துகொண்டு, மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி வாழ்த்தி பேசினார்.

இதையடுத்து, முற்பகல் 11.30 மணி அளவில் திருச்சி விமான நிலையம் வருகை தந்தவர், அங்கு புதிதாக கட்டப்பட்டுள்ள பன்னாட்டு முனையத்தை திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா,  பிரதமர் மோடியின் தலைமையில், விமான நிலையங்கள் பயண ஊடகமாக மட்டுமல்லாமல், விமான நிலையங்கள் வளர்ச்சியின் மையமாகவும் மாறுவதை அரசு உறுதி செய்துள்ளது. விமான நிலையங்கள் வேலைவாய்ப்பு மையமாக மாறியுள்ளது. இந்த துறையில் பிரதமர் தலைமையில் கடந்த 9.5 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள ஒரே ஒரு மாற்றம், இந்த நாட்டின் ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர் சிவில் விமான சேவையை ஜனநாயகப்படுத்தியுள்ளார்.’ஹவாய் சப்பல்’ அணிந்துள்ள அனைவரும் ‘ஹவாய் சப்பல்’ அணிந்து பயணிக்க வேண்டும். ஹவாய் ஜஹாஜ்’ என்பது நமது நாட்டு மக்களுக்கான பிரதமரின் அபிலாஷையாகும் என்றார்.

அப்போது,புதிய விமான நிலைய முனையத்தை பார்வையிட்டு பயணிகளுக்கான வசதிகளை குறித்து பிரதமர் மோடி கேட்டறிந்தார். புதிய முனையத்தின் சிறப்பம்சங்கள் குறித்து அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

இந்த நிகழ்ச்சியில்  பிரதமர் மோடி உடன் தமிழ்நாடு  ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  மற்றும் மத்திய அரசின் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா, ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், அமைச்சர்கள் எ.வ.வேலு, டி.ஆர்.பி.ராஜா, அன்பில் மகேஷ் உள்ளிட்டோரும் திறப்பு விழாவில் கலந்து கொண்டனர்.

திருச்சி புதிய முனையத்தின் சிறப்பு அம்சங்கள்

*60,723 சதுர மீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளை கொண்டு புதிய விமான முனையம் உருவாக்கப்பட்டுள்ளது.

*திருச்சி விமான நிலையத்தின் புதிய முனையத்தில் ஒரே நேரத்தில் 3,000 பயணிகள் வருகை தரலாம்.

*புதிதாக கட்டப்பட்டுள்ள முனையத்தில் 750 கார்கள், 200 டாக்சிகள், 10 பேருந்துகளை நிறுத்தும் வசதி உள்ளது.

*புறப்பாடு, வருகை என 16 வழிகள் உள்ளன; 360 டிகிரி கோணத்தில் கண்காணிக்க நவீன கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

*4 நட்சத்திர புள்ளிகள் பெற்ற முதல் இந்திய விமானநிலைய முனையம் இதுவாகும்.

*புதிய முனையத்தில் கழிவுநீரை வெளியேற்றாமல் மறுசுழற்சி செய்யும் தொழில்நுட்பம் அமைக்கப்பட்டுள்ளது.

*பாரம்பரியத்தை பிரதிபலிக்கும் வகையில் கலைநுட்பங்கள் உள்ளிட்டவையும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

மிழகத்தில் சென்னைக்கு அடுத்தப்படியாகயும், மெட்ரோ அல்லாத விமான நிலையங்களில் முதலிடத்திலும் உள்ள திருச்சி சர்வதேச விமான நிலையம் 702 ஏக்கர் பரப்பளவில் செயல்பட்டு வருகிறது. இங்கு, 2009 ஜூன் 1 முதல் பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த முனையம் மூலம் ஆண்டுக்கு 0.49 மில்லியன் பயணிகளை மட்டுமே கையாள முடியும்.

நாட்டின் தொழில் வளர்ச்சி மற்றும் வெளிநாட்டு வர்த்தகத்துறை வளர்ச்சியில், திருச்சி விமான நிலையம் முக்கிய பங்கு வகிப்பது மட்டுமின்றி, திருச்சி உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்ட மக்களின் வெளிநாட்டு பயணத்துக்கான வழித்தடமாகவும் உள்ளது.

தற்போது, திருச்சி விமான நிலையத்தில் இருந்து, நாள்தோறும் இயக்கப்படும் 10 வெளிநாட்டு சேவை மூலம் 3,479 பேர், 8 உள்நாட்டு விமான சேவையின் மூலம் 1,737 பேர் என நாள்தோறும் 5,216 பயணிகள் கையாளப்படுகின்றனர். வருங்காலங்களில் விமான சேவைகள் அதிகரிக்கும் நிலையில், பயணிகள் எண்ணிக்கையும் அதிகரிக்கக் கூடும்.

இதேபோல, கரோனா பரவல் காரணமாக வீழ்ச்சியை சந்தித்த கார்கோ சேவையும், தற்போது, அசுர வளர்ச்சி கண்டு சாதனைப்படைத்து வருகிறது. கரோனா பரவல் 2020-21-ல் 2,740 டன், 2021-22 5217 டன், நடப்பாண்டில், 6,857 டன் என 3 மடங்காக அதிகரித்து வருகிறது. இங்கு, மத்திய நிதியமைச்சகம் சர்வதேச கூரியர் சரக்கு இயக்கத்துக்கு 2013-ம் ஆண்டில் அனுமதி அளித்தும், இதுவரை விமானநிலைய ஆணையக் குழுமம் அதற்கான ஏற்பாடுகளை செய்யவில்லை. மேலும் உள்நாட்டு விமான சேவைக்கு திருச்சி விமானநிலையம் சிறப்பிடம் பெற்று வரும் நிலையில், உள்ளூர் கார்கோ சேவைக்கும் அதிகாரிகள் முனைப்பு காட்டவில்லை என விமானநிலைய ஆர்வலர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

விமான நிலைய வளர்ச்சிக்கு தேவையான ரன்வே விரிவாக்கப் பணிக்கான நிலம் கையகப்படுத்துதல் 10 ஆண்டுகளாக கிடப்பில் உள்ளது. இதனால் கூடுதல் அகலம் கொண்ட நீண்ட இறக்கைகள் மற்றும் அதிக இருக்கைகள் கொண்ட உயர் ரக விமானங்களை இறக்குவதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் மற்ற விமான நிலையங்களைக்காட்டிலும், பயணிகள் மற்றும் சரக்குகள் கையாள்வதில் சிரமம் ஏற்பட்டு வருகிறது. மறுபுறம், திருச்சி விமான நிலைய வளர்ச்சி கேள்விக்குறியாகி உள்ளது.

இந்த நிலையில், 60,723 சதுரமீட்டர் பரப்பளவில் 2 அடுக்குகளைக் கொண்ட ஒருங்கிணைந்த புதிய முனையம் திறப்பதும், பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த பயணிகள் முனையம் சர்வதேச சரக்கு முனையமாக மாற்றப்படுவதும் திருச்சி சர்வதேச விமானநிலைய வளர்ச்சிக்கு காலத்தின் கட்டயம் என விமானநிலைய ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இதுகுறித்து விமானநிலைய ஆய்வாளர் உபைதுல்லா கூறுகையில், “ஏற்கெனவே பயன்பாட்டில் உள்ள ஒருங்கிணைந்த பயணிகள் முனையத்தைக்காட்டிலும். அதிநவீன வசதிகளுடன் மூன்று மடங்கு கூடுதல் பயணிகள் கையாளும் திறன் இருப்பதால் ஓரேசமயத்தில் 4,000 சர்வதேச பயணிகள், 1,500 உள்நாட்டு பயணிகளை கையாள முடியும்.

பயணிகள் காத்திருப்பை தவர்த்திடும் வகையில், புறப்பாடு பகுதியில் 10 வாயில்கள், வருகை பகுதியில் 6 வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன. 40 குடியேற்றப்பிரிவு மையங்கள், 48 செக்-இன் மையங்கள், 3 சுங்கப்பிரிவு மையங்கள், 15 இடங்களில் எக்ஸ்ரே சோதனை மையங்கள், 10 இடங்களில் ஏரோ ப்ரிட்ஜ், 3 இடங்களில் விஐபி காத்திருப்பு அறைகள், 26 இடங்களில் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர், 1,000 கார்களை நிறுத்தும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இதன் காரணமாக,  2040-ல் திருச்சி சர்வதேச விமானநிலையம் நாட்டின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Video: Thanks ANI