டில்லி

காஷ்மீர் விவகாரம் குறித்து இன்று பிரதமர் மோடி தலைமையில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற உள்ளது.

காஷ்மீர் மாநிலத்துக்கு விதி எண் 370 இன் கீழ் சிறப்பு அந்தஸ்து அளிக்கப்பட்டிருந்தது.   இந்த விதி எண் 370 கடந்த 2019 ஆம் வருடம் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் தேதி மத்திய அரசால் விலக்கப்பட்டு காஷ்மீருக்கு அளிக்கப்பட்ட சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது.

மேலும் அம்மாநிலம் ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கப்பட்டன.   மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் லடாக் கொண்டு வரப்பட்டது.  ஜம்மு காஷ்மீரில் நிலைமை சீரடைந்த பிறகு மாநில அந்தஸ்து அளிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாகப் பிரதமர் மோடி இன்று அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றை டில்லியில் நடத்த உள்ளார்.  இந்த கூட்டம் டில்லி லோக் கல்யாண்மார்க் இல்லத்தில் பிரதமர் தலைமையில் நடைபெற உள்ளது. 

இந்த கூட்டத்தில் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெகபூபா முப்தி, குலாம் நபி ஆசாத், மக்கள் மாநாட்டு கட்சியின் சஜத் லோனே, ஜம்மு – காஷ்மீர் அப்னே கட்சியின் சையத் அல்டாப் புகாரி, ஜம்மு – காஷ்மீர் பேந்தர்ஸ் கட்சி தலைவர் ம் சிங் போன்ற முக்கிய தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.