சென்னை: விவசாயிகளுக்கான கிஸான் உதவித் திட்டத்தில், தமிழகத்தில் நடைபெற்றுள்ள முறைகேடு குறித்து, எதிர்க்கட்சிகள் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்துள்ளது. இது தொடர்பாக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

மத்தியஅரசு விவசாயிகளுக்கு ஆண்டு தோறும் ரூ.6000 கடனுதவி வழங்கும் பிரதமரின் கிசான் திட்டத்தில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மோசடி நடைபெற்றிருப்பது கண்டு பிடிக்கப்ட்டது. இந்த முறைகேட்டில் ரூ.110 கோடி அளவில் பணம்கையாடல் நடைபெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக, ஆயிரக்கணக்கானோர் வங்கிக்கணக்கு முடக்கப்பட்டு இருப்பதுடன், பல அதிகாரிகள் சஸ்பெண்டு செய்யப்பட்டு உள்ளனர்.

இது தொடர்பாக சிபிசிஐடி விசாரணை நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், கிசான் முறைகேடு குறித்து தமிழக சட்டப்பேரவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதிமுக, திமுக, காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது தற்போது விவாதம் நடக்கிறது.

மேலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. காரசாரமாக விவாதங்கள் தொடர்ந்து வருகின்றன.

விவாதங்களுக்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் துரைக்கண்ணு கிசான் திட்டத்தில் முறைகேடு செய்த ஒருவர் கூட தப்ப முடியாது என்றும்,  கிசான் திட்டத்தில் புதிய பயனாளிகள் பதிவு செய்வது மறு உத்தரவு வரும் வரை நிறுத்திவைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறினார்.

முறைகேடு தொடர்பாக விரிவான விசாரணை நடந்து வருகிறது; இதுவரை 30.36 லட்சம் பயனாளி களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்டுள்ளன. இதுவரை ரூ.52.65 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்றும் கூறினார்.