புதுடெல்லி:

அபிநந்தனை விடுதலை செய்வதாக அறிவித்து அமைதிப் பேச்சுவார்த்தைக்கு அழைத்த பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான், தம்மை மிகவும் கவர்ந்துவிட்டதாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தெரிவித்துள்ளார்.


புல்வாமா தாக்குதலை தொடர்ந்து வான்வெளித் தாக்குதலை நடத்தி பாகிஸ்தானில் செயல்பட்டு வந்த தீவிரவாத முகாம்களை இந்தியா அழித்தது.

இதனையடுத்து, திருப்பித் தாக்க வந்த பாகிஸ்தானை விரட்டி அடித்தபோது, விமானப்படை அதிகாரி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்திடம் சிக்கிக் கொண்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பேசிய அந்நாட்டின் பிரதமர் இம்ரான்கான், நான் பிரதமரானதும் பேச்சு நடத்த இந்திய பிரதமர் மோடியை நேரிலும் கடிதம் மூலமும் அழைத்தேன். ஆனால் அவரிடமிருந்து எந்த பதிலும் இல்லை.

இந்திய விமானப் படை அதிகாரி அபிநந்தனை விடுதலை செய்கிறோம். அமைதி ஏற்படுத்த இரு தரப்பு பேச்சுவார்த்தைக்கு இந்தியா முன் வரவேண்டும் என்றார்.

பாகிஸ்தான் பிரதமரின் இந்த பேச்சு சர்வதேச அளவில் அவருக்கு ஆதரவான போக்கை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி மார்கண்டேய கட்ஜு தனது ட்விட்டர் பக்கத்தில், நான் முன்பு இம்ரான் கானை விமர்சித்து வந்தேன். அவரது நாடாளுமன்ற உரையைப் பார்த்தேன். என்னை மிகவும் கவர்ந்துவிட்டார்.

இம்ரான்கான் கிரிக்கெட் வீரராக இருந்தபோது, நான் அவரது ரசிகராக இருந்ததில்லை. ஆனால் இப்போது அதில் மாற்றம் ஏற்பட்டுள்ளது என்று பதிவிட்டுள்ளார்.