சென்னை: இந்த மாத இறுதிக்குள் பிளஸ் 2 மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.
கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கை காரணமாக, அடுத்தடுத்து பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டு வருவதால், 2020-2021 ஆம் கல்வியாண்டில் நடக்கவிருந்த 12-ம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளது. இதையடுத்து, பிளஸ்2 மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்கும் முறையை முடிவு செய்வதற்காகப் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் உயர் கல்வித்துறை முதன்மைச் செயலாளர், சென்னை பல்கலைக்கழகத் துணைவேந்தர், பள்ளித் தலைமை ஆசிரியர்கள் உள்ளிட்ட அலுவலர்கள் அடங்கிய குழு அமைத்து, மதிப்பெண்கள் கணக்கிடுவது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்பட்டது. அதன்படி, ஜூலை மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடப்பு ஆண்டுக்கான பன்னிரென்டாம் வகுப்பு மாணவர்களுக்கு மதிப்பெண் பட்டியல் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், இந்த மாத இறுதிக்குள் மதிப்பெண் பட்டியல் வழங்கப்பட்டு விடும் என்றார்.
மேலும் தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பது குறித்து சுகாதாரத்துறையுடன் கலந்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என்றவர் , அனைத்து அரசு பள்ளிகளிலும் அடிப்படை வசதிகளையும், கட்டமைப்புகளையும் மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும், வரும் பட்ஜெட்டில் கல்விக்கென புதிய திட்டங்கள் கொண்டு வர இருப்பதாகவும் தெரிவித்தார்.
தனியார் பள்ளிகளில் அரசு நிர்ணயித்ததை விட கூடுதலாக பணம் வசூலிக்கப்பட்டது உரிய ஆதாரத்துடன் தெரியவந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்தார்.
பிளஸ்2 மாணாக்கர்களுக்கு மதிப்பெண் வழங்குவது எப்படி? விவரங்களை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்…