சென்னை: சென்னையில் வெள்ளம் தேங்கியதற்கு பிளாஸ்டிக் கழிவுகளே காரணம் என்றும், அதை முறையாக கண்காணித்து நடவடிக்கை எடுக்காத  மாநகராட்சி யும் ஒரு காரணம் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் காட்டமாக விமர்சனம் செய்துள்ளது.

கடந்த 4ம் தேதி மிக்ஜாம் புயல் காரணமாக பெய்த கனமழை, ஒட்டு மொத்த சென்னையையும் புரட்டி போட்டுவிட்டது. 2015ம் ஆண்டு ஏற்பட்ட பெரும் வெள்ளம் சென்னைக்கு முக்கிய பாடமாக இருந்த போதும், அந்த அனுபவத்தை கொண்டு இந்த புயல் மழையை எதிர்கொள்ள முடியவில்லை.  தமிழ்நாடு அரசு சென்னையில் மழைநீர் இனிமேல் ஒரு சொட்டுகூட  தேங்காது என மார்தட்டி வந்தது.  அதற்காக ரூ.4000 கோடியும் செலவழித்தது. ஆனால்,  மிக்ஜாம் புயல் மழைக்கு சென்னையால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. ஆட்சியாளர்களின் புளுழு மூட்டை மழை வெள்ளத்தில் கரைந்து, அவர்களின் பொய் பித்தலாட்டம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த தமிழ்நாடு அரசு, பல பகுதிகளில் மின்சார இணைப்பை துண்டித்துடன், டிச.4ம் தேதி தொடங்கி 6ம் தேதி வரை சென்னை முழுவதும் செல்போன் இணைப்புகள் மற்றும் இன்ர்நெட் இணைப்புகள் துண்டித்து, சென்னை நிலவரம் வெளியே தெரியவாறு,  மக்களை திகைக்க வைத்தது. இதனால்,  தமிழ்நாடு அரசு வெளியிட்ட அவசர கால உதவி எண்களையும் தொடர்பு கொள்ள முடியாத அவலம் நிகழ்ந்து. இதனால்,  மீட்பு பணிகளில் கடுமையான தாமதம் ஏற்பட்டது.  இந்த மழை வெள்ளத்தில் ஏராளமான பொருட்கள் அடித்து செல்லப்பட்டிருக்கின்றன. சுமார் 4 லட்சம் வாகனங்கள் சேதமடைந்திருப்பதாக தெரிய வந்திருக்கிறது. இதில் பெரும்பாலும் பைக்குகளும், ஆட்டோக்களும்தான் பாதிக்கப்பட்டிருக்கின்றன. இதனால் சாமானிய மக்களின் வாழ்வில் கூடுதல் பொருளாதார சுமை ஏறியிருக்கிறது.

மழை நின்று ஒரு வாரத்திற்கு மேல் ஆகியுள்ள நிலையில் தற்போதுதான் சென்னை இயல்பு நிலைக்கு திரும்ப தொடங்கியுள்ளது. இருப்பினும் புறநகர் பகுதிகளில் மழைநீர் இன்னும் வடியாததால் மின்சாரமின்றி அப்பகுதி மக்கள் தவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை வெள்ள பாதிப்புகள் குறித்து உயர்நீதிமன்றம் தமிழ்நாடு அரசை கடுமையாக விமர்சித்துள்ளத.

தமிழ்நாட்டில் ஏற்கனவே பிளாஸ்டிக் தடை உள்ள நிலையில், ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கை தடை செய்வது தொடர்பான சீராய்வு மனு உயர் நீதிமன்ற நீதிபதிகள் எஸ். வைத்தியநாதன் மற்றும் பி.டி.ஆஷா ஆகியோர் அமர்வு முன்புவிசாரணைக்கு வந்தது. அப்போது பிளாஸ்டிக் கழிவுகளை அகற்றுவது தொடர்பாக நீதிபதிகள் கடும் அதிருப்தி தெரிவித்தனர்.

மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட வெள்ளம் வடியாமல் தேங்கி நின்றதற்கு பிளாஸ்டிக் மற்றும் பிற கழிவுகள் நீர் வழிப்பாதையை அடைத்ததே காரணம் என்று நேரடியாக குற்றம் சாட்டியதடன், பெருநகர சென்னை மாநகராட்சி வரம்புக்குள் பிளாஸ்டிக் கழிவுகளை தரம் பிரிக்கும் முறை மோசமாக செயல்படுத்தப்படுகிறது என்று சாடினர்,

மேலும், பிளாஸ்டிக் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வைக்க பல்வேறு துறைகள் ஒருங்கிணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியதுடன், சென்னை மாநகராட்சி  குப்பைகளை வீடுகளிலிருந்து பெற்று அதை மக்கும், மக்காத குப்பை என தரம் பிரிப்பது முறையாக செயல்படுத்தப்படவில்லை என்றும்,   ஆவின் பால், பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் விநியோகிப்பதற்கு பதில், ஏன் கண்ணாடி பாட்டிலில் விநியோகிக்க கூடாது என்று கேள்வி எழுப்பி, இது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வுகள் குறித்தும் கேட்டறிந்தனர்.

பின்னர் இந்த வழக்கு விசாரணை வெள்ளிக்கிழமை நடைபெறும் என்று ஒத்தி வைத்தனர்.  அன்றைய தினம் நீதிமன்றத்தில்  மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் ஆஜராக வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.

மழை வெள்ளம் வடியாததற்கு பிளாஸ்டிக் கழிவுகள் முக்கிய காரணம் என நீதிபதிகள் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.