மதுரை:  குரூப்-4 பணிக்கு தேர்வானவர்கள் பட்டியலை  ஒரு மாதத்திற்குள், அதாவது 2024 ஜனவரி 8ந்தேதிக்குள் இணையத்தில் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுக்கு உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவிட்டு உள்ளது.

உயர்நீதிமன்றம் மதுரை கிளையில்,  அந்தப் பகுதியைச் கண்மணி, கீதா, முத்துலட்சுமி உள்பட  பலர், டிஎன்பிஎஸ்சி தொடர்பாக வழக்கு தொடர்ந்திருந்தனர். அவர்களது மனுவில், டிஎன்பிஎஸ்சி கடந்த ஆண்டு (2022)  மார்ச் 30-ம் தேதி குரூப்-4 தேர்வுக்கான அறிவிப்பை வெளியிட்டது. இதில் மொத்தம் 7301 காலி இடங்கள் அறிவிக்கப்பட்டு ஜூலை 24ல் எழுத்து தேர்வு நடந்து முடிந்தது. 22 லட்சம் பேர் விண்ணப்பித்து 18 லட்சம் பேர் எழுதி இருந்தார்கள்,. இதன் பின் காலியிடங்கள் எண்ணிக்கை 10,117 ஆக அதிகரித்து அரசு உத்தரவிட்டது.  டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வு முடிவுகள் மார்ச்சில் வெளியிடப்பட்டது.

தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் எங்கள் பெயர் இல்லை. நாங்கள் 255 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருக்க வாய்ப்புள்ளது. இதனால் எங்களுடைய விடைத்தாள் நகல் கேட்டு. உயர் நீதிமன்றக் கிளையில் மனு தாக்கல் செய்தோம். நீதிமன்றம் உத்தரவிட்டதால், எங்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டது. இதை ஆய்வுசெய்தபோது, நாங்கள் அதிககேள்விகளுக்குப் பதிலளித்துள் ளோம். பணிக்கு தேர்வாகும் அளவுக்கு எங்களுக்கு மதிப்பெண் வருகிறது.

இருப்பினும், எங்களுக்கு பணி கிடைக்கவில்லை. ஆனால்,  குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்து வருகிறது. குரூப் 4 தேர்வு விடைத்தாள் நகல் (ஓ.எம்.ஆர்.,) மோசடியும், குழப்பமும் நடந்திருக்கிறது.. எங்களுடைய ‘ஆன்சர் கீ’ நகல் வழங்க வேண்டும். அதுவரை எங்களுக்குரிய பணியிடங்களை காலியாக வைத்திருக்க உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்துதுடன்,  இதுதொடர்பாக வழக்கறிஞர் ஆணையரை நியமித்து, எங்களது விடைத்தாளையும், இறுதி விடைப்பட்டியலையும் ஒப்பிட்டு சரியான மதிப்பெண் வழங்கவும், எங்களுக்கு குரூப்-4 பணி வழங்கவும் உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தனர்.

இந்த மனு நீதிபதி ஆர்.விஜயகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. டிஎன்பிஎஸ்சி தரப்பில், மனுதாரர்களுக்கு விடைத்தாள் நகல் வழங்கப்பட்டு விட்டது என தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து நீதிபதி, குரூப்-4பணியிடங்களுக்கு தேர்வானவர் களின் பட்டியலை ஜன.8-க்குள் இணையதளத்தில் வெளியிட வேண்டும். மனுதாரர்களைக் காட்டிலும் குறைவாக மதிப்பெண் பெற்றவர்கள், தேர்வானவர்கள் பட்டியலில் இருந்தால், மனுதாரர்கள் நீதிமன்றத்தை நாடலாம். எனவே இந்த மனு முடித்து வைக்கப்படுகிறது என உத்தரவிட்டார்.