சென்னை: சென்னையில் வரும் 19ந்தேதி முதல் 3 நாட்கள் கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்து உள்ளார்.

மிக்ஜாம் புயல் காரணமாக கொட்டித்தீர்த்த கனமழையால் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. இன்னும் மக்கள்  இயல்பு நிலைக்கு திரும்பாத நிலையில், புறநகர் பகுதிகளில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றும் பணியில் தீவிரமாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு, நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில்,  டிச. 19-21 தேதிகளில்  சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு என்றும், டிசம்பர் 15ஆம் தேதிக்குள் இன்னும் தெளிவு வரும் என  வெதர்மேன் தெரிவித்து உள்ளதார்.

இதுதொடர்பாக, அவர்  தனது எக்ஸ் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், “டிச. 19-21 தேதிகள் சுவாரஸ்யமாக மாறி உள்ளன. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இந்த காலகட்டத்தில் நல்ல மழை பெய்ய வாய்ப்பு இருக்கிறது. இருப்பினும், என்ன நடக்கும் என்பது வரும் டிசம்பர் 15ஆம் தேதியில் தான் இன்னும் தெளிவாகத் தெரியும்” என குறிப்பிட்டுள்ளார். மேலும், தற்போது அரபிக் கடலில் உருவாகி உள்ள  காற்றழுத்த தாழ்வுப் பகுதியால் சென்னைக்கு எந்த பாதிப்பும் இல்லை என்றும்  வெதர்மேன் பிரதீப் தெரிவித்துள்ளார்.

தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய மாலத்தீவு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாகவும், இதன் காரணமாக, தென் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், வடதமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமான மழை பெய்யக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.