மதுரை:  உலக பிரிசித்தி பெற்ற மதுலை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கான முகூர்த்த கால் இன்று நடைபெற்றது. இங்கு, பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானம்  ரூ.44 கோடியில் 67 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ளது.  இந்த அரங்கத்தை  ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வந்து திறந்து வைக்கிறார்.

பொங்கல் பண்டிகையையொட்டி, தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டிகள் மதுரை உள்பட தென்மாவட்டங்களில் பிரசித்தி பெற்றவை. அதிலும்,  மதுரை மாவட்டத்தில் அவனியாபுரம், பாலமேடு மற்றும் அலங்காநல்லூரில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகள் உலக பிரசித்தி பெற்றவை. இவற்றை காண உலகம் முழுவதும் இருந்து ஏராளமானோர் மதுவரை வந்து கண்டு களிப்பர்.

நடப்பாண்டு,  பொங்கல் தினமான வரும் 15ம் தேதி  மதுரை, அவனியாபுரத்திலும், மறுநாள் 16ம் தேதி பாலமேட்டிலும், 17ம் தேதி அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடக்க உள்ளன.இதையொட்டி இந்த 3 இடங்களிலும் ஜல்லிக்கட்டிற்கான முன்னேற்பாடுகள் உள்ளிட்ட பணிகள் கடந்த ஒரு வார காலமாக தீவிரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில்,  அலங்கா நல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிக்காக, அலங்காநல்லூரின் கோட்டை முனி திடலில் உள்ள முத்தாலம்மன் கோயில் முன்பாக முகூர்த்தகால் நடும் நிகழ்ச்சி நடந்தது. வணிக வரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, மாவட்ட ஆட்சியர் சங்கீதா, சோழவந்தான் எம்எல்ஏ வெங்கடேசன் மற்றும் அரசு அலுவலர்கள், விழாக்குழுவினர், கிராம பொதுமக்கள் முன்னிலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் செய்து முகூர்த்தக்கால் நடும் நிகழ்வு நடந்தது.

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியில் சுமார் 1000 காளைகளும் 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்ள உள்ளனர் இதைத்தொடர்ந்து, வாடிவாசலுக்கு வண்ணம் பூசும் பணி, கேலரி அமைக்கும் பணி, வாடிவாசல் மைதானத்தை இயந்திரம் மூலம் சுத்தம் செய்யும் பணி உள்ளிட்டவை தொடங்கப்பட்டுள்ளன.

 ஜல்லிக்கட்டு போட்டிக்கான முன்பதிவு இன்னும் ஒரு சில தினங்களில் ஆன்லைனில் தொடங்கப்பட உள்ளது. சிறப்பாக விளையாடி முதல் பரிசு பெறும் காளைக்கு, மாடுபிடி வீரருக்கு கார் பரிசாக வழங்கப்படும். இரண்டாம் பரிசாக இருசக்கர வாகனம் வழங்கப்படும். விலையுயர்ந்த பரிசு பொருட்கள், வீட்டு உபயோக பொருட்கள் பரிசாக வழங்கப்படும். அரசின் வழிகாட்டுதல்படி மாவட்ட நிர்வாகத்தின் மேற்பார்வையில் ஜல்லிக்கட்டு விழா நடக்கும். தகுதி சான்றுடன் ஆன்லைன் பதிவு பெற்ற காளைகள் இந்த ஜல்லிக்கட்டில் பங்கேற்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில்,. அங்கு புதிதாக 67 ஏக்கர் பரப்பளவில் 5000 பேர் பார்க்கும் வகையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தை வரும் 23ந்தேதி முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைக்க உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடத்துவதற்கென்று நிரந்தரமாக ஓர் அரங்கம் அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு  சட்டமன்றக் கூட்டத்தொடரில் விதி 110-ன் கீழ் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, அலங்காநல்லூர் அருகே உள்ள கீழக்கரையில் இடம் தேர்வு செய்யப்பட்டு அதற்கான கட்டுமானப் பணிகளை 2023-ம் ஆண்டு மார்ச் 18-ம் தேதியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 66.8 ஏக்கரில் ரூ.44 கோடியில் ஒரே நேரத்தில் கிரிக்கெட் போட்டியை போல் 5 ஆயிரம் பேர் அமர்ந்து கண்டுகளிக்கும் வகையில் இந்த அரங்கம் பிரமாண்டமாக அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அரங்கில்,  காளைகள் மற்றும் மாடுபிடி வீரர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும்  செய்யப்பட்டுள்ளன. வெளிப்புறத்தில் அரண்மனை முகப்பு தோற்றம் போலவும் உட்புறத்தில் கிரிக்கெட் அரங்கம் போலவும் இந்த ஜல்லிக்கட்டு அரங்கம் வடிவமைக்கப்பட்டுள்ளது. போட்டியைக் காண மக்கள் வந்து செல்வதற்கு ஏதுவாக மதுரை மட்டுமில்லாது அண்டை மாவட்டங்களில் இருந்தும் மூன்று வழித்தடங்களில் புதிய தார்ச்சாலைகள் அமைக்கப்பட்டுள்ளன.

அரங்கின் தரைத்தளத்தில் வாடிவாசல், நிர்வாக அலுவலகம், மாடுபிடி வீரர்களுக்கான இடம், காளைகள் பரிசோதனைக் கூடம், முதலுதவிக் கூடம், பத்திரிகையாளர் கூடம், காளைகள் பதிவு செய்யும் இடம், அருங்காட்சியகம், பொருட்கள் பாதுகாப்பு அறைகள் இடம்பெற்றுள்ளன.

முதல் தளத்தில் முக்கிய பிரமுகர்களுக்கு அறைகள், உணவு அறை, தங்கும் அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

இரண்டாம் தளத்தில் பொருட்கள் வைப்பு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

போட்டியைக் காண வரும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கும் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.

அதையடுத்து வாடிவாசல், காளைகளைக் கட்ட தனி இடம், மருத்துவ முகாம் மற்றும் வீரர்கள் ஓய்வறை போன்றவைகளும் அமைக்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில் பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள ஜல்லிக்கட்டு அரங்கை வரும் ஜனவரி 23ம் தேதி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைக்கிறார். இதனிடையே அலங்காநல்லூரில் இவ்வாண்டு ஜல்லிக்கட்டு போட்டி வரும் 17ம் தேதி நடைபெற உள்ளது.