சென்னை: தவெக தலைவர் விஜய் உடன் பிரசாந்த் கிஷோர் சந்திந்த்து பேசியுள்ளார். இது அரசியல் களத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
2026 சட்டமன்ற தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அமைப்போம் என நம்பிக்கை தெரிவித்துள்ள நடிகர் விஜய், அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார். அதன் தொடர்ச்சியாக பிரபல தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோரை சந்தித்து பேசியுள்ளார். இது தமிழக அரசியலிலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த 2021ல் திமுக பெற்ற இமாலய வெற்றிக்கு பின்புலமாக செயல்பட்டவர் ஐபேக் நிறுவனரான தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர். ஆனால், திமுக ஆட்சி காலத்தில் நடைபெற்ற சில விரும்பதகாத நிகழ்வுகளை அவர் விமர்சித்தது சலசலப்பை ஏற்படுத்தியது. இதன் காரணமாக, நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலின் போது PEN நிறுவனம் மூலமாகவே தேர்தல் பணிகள் செய்யப்பட்டன. அதன் பலனாக 40 தொகுதிகளிலும் திமுக தலைமையிலான கூட்டணி அபார வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து, வரவிருக்கும் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவின் தேர்தல் வியூக வகுப்பாளராக, ராபின் சர்மா நிறுவனத்துடன் கைகோர்த்துள்ளது. அதுபோல அதிமுகவும் சில நிறுவனங்களுடன் பேசி வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், ஐபேக் நிறுவனத்தலைவர் பிரசாந்த் கிஷோர், தவெக தலைவர் விஜய் சந்திப்பு நடைபெற்றுள்ளது. திமுகவை விமர்சனம் செய்ததற்காக விசிகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஆதவ் அர்ஜுனா, விஜய் முன்னிலையில் தவெகவில் இணைந்து பணியாற்றி வரும் நிலையில், அவரது ஆலோசனையின் பேரில், தவெக தலைவர் விஜய்யை, சென்னை நீலாங்கரையில் உள்ள அவரது இல்லத்தில், தேர்தல் வியூக வகுப்பாளர் பிரசாந்த் கிஷோர் சந்தித்துப் பேசியுள்ளார்.
அப்போது தவெக கட்சிக்கு தேர்தல் ஆலோசனை, பிரசார வியூகங்களை வழங்க பிரசாந்த் கிஷோர் ஒப்புதல் தெரிவித்தார் என தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அதிமுகவுடன் கூட்டணி வைத்தால் எப்படியிருக்கும் என பிரஷாந்த் கிஷோரிடம் விஜய் கேட்டறிந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்தச் சந்திப்பின்போது, ஜான் ஆரோக்கியசாமி, என்.ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் உடன் இருந்ததாக கூறப்படுகிறது.
2026 சட்டமன்ற தேர்தல்: தேர்தல் வியூகங்களை வகுக்க ராபின் சர்மா நிறுவனத்துடன் தி.மு.க. ஒப்பந்தம்!