சென்னை:

ந்திராவில் இருந்து சென்னைக்கு வரும் கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க குழாய் அமைக்கப்படும் என்று கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் திறப்பு விழாவில் கலந்துகொண்ட முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கூறினார்.

தண்ணீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக சென்னையில் கழிவுநீரைச் சுத்திகரித்து வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின்படி கோயம்பேடு, கொடுங்கையூர், நெசப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் கழிவுநீர் சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன. கொடுங்கையூர் பகுதியில் 348 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வந்தது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில், இன்று  கொடுங்கையூர் கழிவுநீர் சுத்திகரிப்பு மையதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் முதல்வருடன்  துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணி உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மக்கள் நம்பக்கம் இருக்கிறார்களா என்பதை விட மக்களின் பக்கம் நாம் இருக்கிறோமா என்பதே தன்னுடைய சிந்தனையாக இருக்கும் என்று கூறினார். இந்த கழிவு நீர் சுத்திகரிப்பு மையத்திலிருந்து தினமும் 45 மில்லியன் லிட்டர் தண்ணீர் சுத்திகரித்து வழங்கப்படும் என்றும்  சுத்திகரிப்பட்ட நீரானது தொழிற்சாலைகளுக்கு வழங்கப்பட இருப்பதாகவும் கூறினார்.

அதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி,  தமிழக அரசின் திட்டங்களால் ஒரு நாளைக்கு 110 மில்லியன் லிட்டர் கழிவு நீர் சுத்திகரிக்கப்படும், சுத்திகரிக்கப்பட்ட நீர் 9 நிறுவனங்களுக்கு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும், சென்னை மக்களுக்கு 876 மில்லியன் லிட்டர் தண்ணீர் எவ்வித பிரச்சனையும் இன்றி கிடைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும், தமிழகம் வரும் கிருஷ்ணா நதி நீர் வீணாகாமல் தடுக்க, கண்டலேறு முதல் பூண்டி வரை குழாய் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.