சேலம்:

நீட் தேர்வில்  ஆள்மாறாட்டம் செய்து மருத்துவப் படிப்பில் சேர்ந்ததாக கூறப்படும் தர்மபுரி மருத்துவக்கல்லூரி மாணவர் இர்ஃபானை காவல்துறையினர் தேடி வந்த நிலையில், இன்று சேலம நீதிமன்றத்தில் சரண் அடைந்தார். அவரை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

தமிழகத்தில்  நீட் தேர்வு ஆள்மாறாட்டம் செய்து மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்த விவகாரம் பூதாகாரமாக கிளம்பி உள்ளது. முதலில் மாணவர் உதித்சூர்யா விவகாரம் வெளியான நிலையில், தொடர்ந்து ஏராளமான புகார்கள் வெளியாகி வருகிறது.

இதுதொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வந்த வாணியம்பாடியைச் சேர்ந்த மாணவர் இர்ஃபான் மீதும் புகார் எழுந்தது. இந்தப் புகாரை அடுத்து இர்ஃபான் தலைமறைவானார். அவரது தந்தை முகம்மது சஃபி கைது செய்யப்பட்டார்.

இதற்கிடையில் இர்ஃபான்  மொரிசியஸ் நாட்டிற்கு தப்பிச் சென்றுவிட்டதாக தகவல்கள் பரவி வந்த நிலையில், இன்று வழக்கறிஞருடன் வந்து சேலம்  நீதிமன்றத்தில் சரணடைந்தார். அவரை அக்டோபர் 9ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார்.  இதனையடுத்து இர்ஃபான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.