‘பிலவ’ தமிழ்ப்புத்தாண்டு: மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம் ஆகிய ராசிகளுக்கு உரிய நட்சத்திர பலன்கள்! வேதாகோபாலன்

Must read

ளங்கள் அளிக்கப்போகும் தமிழ் புது வருடமாகிய  பிலவ ஆண்டின் சித்திரை 1ஆம் தேதி 2021 ஆம் ஆண்டு  ஏப்ரல் மாதம் 14ம் தேதி, புதன்கிழமை, சுக்கிலபட்சம் துவிதியைத் திதி பரணி நட்சத்திரம், சித்தயோகம் கூடிய சுபயோக சுப தினத்தில் பிறக்கிறது. தமிழ் ஆண்டு வரிசைப்படி,  அட்டவணையில் 35 வதாக வரக் கூடிய பிலவ வருடம் இதோ வந்துகிட்டிருக்குங்க.

பிலவ ஆண்டு பிறக்கும் போது மேஷ ராசியில் ராஜ கிரகமான சூரியன் உச்சம் பெற்றிருக்க கூடவே சுக்கிரன், சந்திரன் இணைந்துள்ளனர். ரிஷபத்தில் ராகு, மிதுனத்தில் செவ்வாய், விருச்சிகத்தில் கேது, மகரத்தில் சனி, கும்ப ராசியில் குரு மீன ராசியில் புதன் என கிரகங்கள் சஞ்சரிக்கின்றன.

பொதுப்பலன்கள்:

இந்தப் புது வருடம், மேஷ லக்னம் மேஷ ராசி பரணி நட்சத்திரத்தில் பிறக்கிறது. பரணி சுக்கிரனின் நட்சத்திரம். எனவே பெண்களுக்கு சந்தோஷத்தையும் மனநிறைவும் முன்னேற்றமும் தரும் ஆண்டாக இப்புத்தாண்டு அமையும்.. திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். குழந்தைக்குக் காத்திருப்போருக்கு புத்திர பாக்கியம் கிடைக்கும். அனேகமாக அது பெண் குழந்தையாக இருக்கலாம். இந்த ஆண்டில் மிக அதிகம் பேருக்கு திருமணங்கள் நடக்கவும் குழந்தைப் பேறு கிடைக்கவும் வாய்ப்புள்ளது.

இவ்வாண்டு பரணி நட்சத்திரத்தில் பிறப்பதால் மக்களின் வருமானம் சிறப்பாக இருக்கும். உணவுத் பிசினஸ் கொடிகட்டிப் பறக்கும். விவசாயம் செழிப்பாக இருக்கும், பங்குச் சந்தை சிறந்த லாபம் தரும். கட்டுமானத் தொழிலும் மருத்துவத் தொழிலும் வளர்ச்சியடையும்.

வாகனம் தொடர்பான பிசினஸ் உள்பட, .பிசினஸ் செய்துக்கிட்டிருக்கறவங்க, உற்பத்தி தொடர்பான பிசினஸ் செய்துக்கிட்டிருக்கறவங்க அனைவருக்கும் வளர்ச்சி ஏற்படும். கூடுதல் லாபமும் கிடைக்கும்

அலுவலகப் பணியில் இருப்பவர்களுக்கு மிதமான முன்னேற்றம் இருக்கும். சில நட்சத்திரங்களில் பிறந்தவர்களுக்கு அற்புதமான பலன் உண்டு.

ஸ்டூடன்ட்ஸ் சற்றுஅதிக கவனமுடன் படித்தால் வெல்ல முடியும்.

அரசியலில் எதிர்பாராத மாற்றங்கள் நடக்கும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சிக்கல்களையும் நெருக்கடிகளையும் சந்திக்க வேண்டியது வரும்.

மேஷம்  (அஸ்வினி நட்சத்திரம்)

குருபார்வை முக்கிய இடங்களுக்கு இருப்பதால் விவேகமாக முக்கிய முடிவுகளை எடுப்பீங்க. குடும்பத்தில் அமைதி நிலவும். கணவன் – மனைவிக்குள் அந்நியோன்யம் பிறக்கும். குடும்ப வருமானத்தை உயர்த்த முற்படுவீங்க. குழப்பங்களிலிருந்து விடுபடுவீங்க.

வருமானம் நாலா பக்கத்திலிருந்தும் வந்து குவியும். அடகிலிருந்த நகைகளை மீட்கும் அளவிற்கு வருமானம் உயரும். புது ரக ஆடை, ஆபரணங்கள் புதிதாக வாங்குவீங்க. அரசாங்க நெருக்கடிகள், காவல்துறையின் கண்காணிப்புகள், நீதிமன்ற சம்மன்கள் ஆகியவற்றிலிருந்து விடுபடுவதால் நிதி நிலைமை மேம்படும்.

மகனுக்கு நல்ல மணப்பெண் அமைவார். வேலை வாய்ப்புகள் தேடி வரும். வீட்டில் மகிழ்ச்சி தங்கும். பிரச்னைகளுக்குத் தீர்வு காண முற்படுவீங்க. அம்மாவுடன் கருத்து மோதல்கள் வந்தாலும், நெருக்கடி நேரத்தில் ஒருவருக்கொருவர் உதவி செய்வீங்க. எதிலும் வெற்றி பெறுவீங்க. பணவரவு சரளமாக இருக்கும். சொந்த பந்தங்கள் வியக்கும்படி முன்னேற எண்ணுவீங்க.

வெற்றி பெற சற்று அதிகமாக உழைத்தால் போதும். வெளிநாடு போக ஆசைப்பட்டவர்களுக்கு இது நல்ல ஆண்டாக அமையும். புது விஷயங்களைக் கற்க ஆர்வம் வந்து அதிலும் மின்னுவீங்க. அலட்சியம் மற்றும் கவனச் சிதறல் கூடாது என்பதை மட்டும் நல்லா நினைவில் வைத்துக்கொண்டால் போதும். உங்க திட்டங்களுக்கு வீட்டில் உள்ளோரின் ஆதரவு இருக்கும்.

உடல் நலக்கோளாறு எப்போதாவது ஒரு முறை வந்து சிறிது காலத்திலேயே சரியாகிவிடும். எனவே இதை அதிகம் யோசித்து உடம்பைக் கெடுத்துக்கொள்ள வேண்டாம். அக்கறையுடன் ஆரோக்யத்தைப் பார்த்துக்கொள்பவர்களுக்கு ஒரு பிரச்னையும் இல்லை.

நிறைய நன்மைக நடைபெறும். சோம்பல் இல்லாமல் அன்றைய வேலையை அன்றைக்கே முடிக்கும் திறன் வரும். எனவே பாராட்டுக்கிடைக்கும்.

ராகு இரண்டாம் வீட்டிலும், கேது எட்டாம் வீட்டிலும் சஞ்சரிக்கின்றன. சனி பத்தாம் வீட்டில் சஞ்சரிக்கிறார். வேலையில் சின்னச்சின்ன குடைச்சல்கள் பதினொன்றில் ஐந்து மாசங்களுக்கு குரு இருப்பாரே. சமாளிச்சு வேலையை தொடருவீங்க.. புதிய வேலை மாற நினைக்க மாட்டீங்க. பிசினஸ் முதலீடுகளில் அதிக லாபம் கிடைக்கும் என்றாலும் பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்ய நினைக்க வேண்டாம்.

மேஷம் (பரணி நட்சத்திரம்)

பொதுவாக  இந்த ஆண்டு மிகவும் உற்சாகமாகம், தைரியம்காரணமாகப் பல மாற்றங்கள் செய்ய வாய்ப்புள்ளது.. குடும்பத்தில் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும். உங்க ராசிக்கு 10ம் வீட்டில் சனி பகவான் இருப்பதால் உங்களை அதிகமாக உழைக்க வைப்பாரு. அதற்கேற்ற வருமானம் இருக்கும் என்பதால், பணப்புழக்கம் நல்லா இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும்.

பொருளாதார வாழ்க்கையைப் பற்றி பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு இயல்பை விட சற்று சிறப்பாக இருக்கும். உங்க வாழ்க்கையில் பல சவால்கள் இருக்கும்,. அதைத் திறம்பட சமாளிப்பீங்க. .பணவரவு அதிகரிக்கும். ஷேர் மூலம் பணம் வரும். நவீன எலக்ட்ரானிஸ் சாதனங்கள் வாங்குவீங்க. தங்க நகைகள், காஸ்ட்லி ஆடைகள் வாங்குவீங்க. தடைப்பட்ட வீடு கட்டும் பணியைத் தொடங்க வங்கிக்கடன் கிடைக்கும். மனைவிவழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும்.

ராசிக்கு 9ஆம் அதிபதி 11ல் அமர்ந்துள்ளதால் திடீர் அதிர்ஷ்டமும் யோகமும் ஏற்படும். 10ஆம் வீட்டில் சனி பகவான்  அமர்ந்துள்ளதால் ஸ்டூடன்ட்ஸ் படிப்பில் கவனமாக இருக்கணுங்க. கவர்ன்மென்ட் வேலை வாய்ப்பு தேர்வு எழுதுபவர்கள் கவனமாக படிக்க வேண்டும். ராசிக்கு அதிபதியான செவ்வாயினால் வெளிநாடு செல்லும் யோகம் உண்டாகும். வருட மத்தியில் திடீர் உற்சாகமும் சுறுசுறுப்பும் ஏற்பட்டு ஜமாய்ப்பீங்க.அது தொடரும்படி பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்துடன் கோயில்களுக்குக் சென்று நேர்த்திக்கடனை முடிப்பீங்க. சில காரணங்களால் நீங்கள் உங்க வீட்டை விட்டு வேற இடத்தில் ஸ்டே செய்ய வேண்டியிருக்கலாம்.. பட்..  வீட்டிலிருந்து விலகி இருக்கும்போது, நீங்கள் ஃபேமிலி மற்றும் குடும்பத்தினரின் ஆதரவை நன்கு பெறுவீரகள். அவர்களுடன் நன்கு தொடர்பில் இருப்பீங்க. நீங்கள் உங்கநீங்கள் உங்க குடும்பத்திற்கு நேரம் கொடுப்பீங்க என்பதால் சுமுக உறவு இருக்கும்.

பெண்களே… பல்வேறு குழப்பங்களுக்கு ஆளாகி இருந்த உங்களுக்கு இது மிகவும் நன்மைதரும் ஆண்டாக அமையும். மனதிலிருந்த சஞ்சலங்கள் நீங்கும். பிள்ளைகளின் போக்கில் நல்ல மாற்றம் ஏற்படும். கல்யாணம், சீமந்தம், காதுகுத்தல் என வீட்டில் சுபநிகழ்ச்சிகள் நடக்கும். கனிவான பேச்சாலேயே காரியங்களை சாதிப்பீங்க. விட்டு போன பழைய சொந்த பந்தங்கள் தேடி வருவாங்க.

மேஷம் (கிருத்திகை 1ம் பாதம்)

இவ்வருடம் பொருளாதார முன்னேற்றம் உண்டு. செய்து வரும் தொழிலில் நல்ல லாபம், உத்யோகத்தில் புகழ், கௌரவம், அந்தஸ்து, உயர்வு ஏற்படும். உண்மையான செயல் பாட்டிற்கும் கடினமான உழைப்புக்கும் நல்ல பலன் கிடைக்கும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருள்கள் வாங்குவீங்க. அதிகமாக கடன் வாங்காமல் இருந்தால் நன்மை உண்டாகும். புதிய பிசினஸ் முயற்சி நல்ல பலனை தரும். தந்தை வழி சொத்துக்களில் பலன் உண்டாகும்.

வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் குறையும். யாருக்காகவும் எந்த உறுதி மொழியும் தர வேண்டாம். பழைய கடன் பிரச்சனைளில் நல்ல தீர்வுகாண்பீங்க. வங்கிக் காசோலையில் முன்பே கையெழுத்திட்டு வைக்க வேண்டாம். அதற்காக ஒரேயடியாய் பயந்துவிடாதீர்கள். எதிர்காலத்துக்காக நீங்கள் திட்டிய தீட்டங்கள் நலல முறையில் முன்னேற்றம் காணும்.  சம்பளம் உயரும். வாழ்க்கைத் துணையின் வருமானம் அதிகரிக்கும். கூடுதல் வருமானத்துக்கு வழி கண்டுபிடிப்பீங்க.

‘இளைஞர்களுக்குச் சிறந்த எதிர்காலம் இந்த ஆண்டு தீர்மானிக்கப்படும். குடும்ப வருமானம் உயரும்.  துணையிடமும் பிள்ளைகளிடமும் அன்பு செலுத்து வீங்க. மன உபாதைகள் விலகும். புதிய எண்ணங்கள் தோன்றும். அண்டை வீட்டாருடன் அளவாகப் பழகுவது நல்லது. ஒருவருக்கொருவர் மகிழ்ச்சியாகப் பேசிக்கொள்வீங்க. குழந்தைகளின் எதிர்காலத் தீர்மானம் சந்தோஷம் தரும்.

பெண்களுக்குச் சென்ற சில ஆண்டுகளாக இருந்து வந்த மனக் குறைகள் விலகும். கலைத்துறையில் அதிக இன்டரஸ்ட் வரும். வேலைப் பகுதியிலும் ஏராளமான வேலைகள் இருக்கும். அனைத்தையும் புன்னகையுடன் சமாளிப்பீங்க. ஆனால் ஆரோக்யத்தில் நன்கு கவனம் செலுத்த வேண்டும். வாழ்வில் முன்னேறும் வழிமுறைகளை யோசித்துச் செயலாக்கி வெற்றி பெறுவீங்க.

வருடத்தின் இரண்டாம் பாதியில் குரு பகவானும் சனியும் இணைந்திருப்பதால் வயிறு சம்பந்தமான பிரச்னைகள் வராமல் கவனமாக இருங்கள். நிறையத் தண்ணீர் குடித்தால் போதும். உஷ்ணம் காரணமாக பிரச்னைகள் வராது. செவ்வாய் உங்க ராசிநாதன் என்பதால் கோபத்தில் உரக்கக் கத்துபவர்களுக்கு மட்டுமே ஹெல்த் பாதிக்கப்படும் என் நினைவில் வைத்துக்கொண்டால்  போதும்.

நான்கைந்து வேலைகளை ஒன்றாகச் சேர்த்து பார்க்க வேண்டிய சூழல் உருவாகும். மறைமுக எதிர்ப்புகளும், இடமாற்றங்களும் வரக்கூடும். அநாவசியப் பேச்சைத் தவிர்த்து விட்டு வேலையில் கவனம் தேவை.

ரிஷபம் (கிருத்திகை 2,3,4 ம் பாதம்)

குருபகவான் ராசிக்கு 9 – ம் வீட்டில் அமர்ந்திருக்கும் நேரத்தில் இந்தப் புத்தாண்டு பிறப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். கடன்களை அடைப்பீங்க.. உங்களுடைய ராசிக்கு குருவின் பார்வை கிடைப்பதால் நிறையப் பண வரவு இருக்கும். கடன் பிரச்சினையை சமாளிப்பீங்க. கல்யாண விவகாரங்களை அவசரப்பட்டு முடிவு செய்ய வேண்டாம். ஒவ்வொரு செயலையும் நிதானமாக செய்வது அவசியம். திருமணத்திற்கு வரன் பார்ப்பவர்களும் ஒருமுறைக்கு இருமுறை யோசித்து முடிவு செய்யவும்

அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீங்க. வங்கியில் லோன் கிடைக்கும். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனையெல்லாம் பகுதி பகுதியாக அடைக்க முற்படுவீங்க. பணப்புழக்கம் அதிகரிக்கும். எதிர்பார்த்த வகையில் உதவிகள் கிடைக்கும். சொத்துகள் வாங்கும் முயற்சியில் துரிதமான முன்னேற்றம் இருப்பதால் செலவினங்கள் அதிகரிக்கும்.

குடும்பத்தில் குதூகலமும் சந்தோஷமும் நிலைத்திருக்கும். குடும்பத்தினர் உங்களின் அறிவுரையைக் கேட்டு நடப்பாங்க. பிரிந்திருந்த கணவன் மனைவி ஒன்று சேருவாங்க. குழந்தை பாக்கியமும் கிடைக்கும். வீட்டில் தடைப்பட்ட கல்யாணம், கிரக பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகள் நல்ல விதத்தில் நடக்கும்.

ரிஷபம் (ரோகிணி)

இந்தப் புத்தாண்டில் உங்களுக்கு வளர்ச்சி கூடுதலாக இருக்கும். வாய்ப்புகள் வந்து அலைமோதும். கொடுக்கல் -வாங்கல்களில் திருப்தி ஏற்படும். குரு பார்வை குடும்ப ஸ்தானத்தில் பதிவதால், கணவன்- மனைவிக்குள் ஒற்றுமை பலப்படும். அசையாச் சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. கும்பத்தில் குரு சஞ்சரிக்கும் காலத்தில் பிள்ளைகளின் கல்யாண முயற்சிகள் கைகூடும். தாய் மற்றும் சகோதரர்களின் ஒத்துழைப்பு திருப்தி தரும். குழந்தைகளின் வளர்ச்சி மகிழ்ச்சி தரும்.

வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். காஸ்ட்லி பொருள்களைக் கையாளும்போது எச்சரிக்கையாக இருப்பதன் மூலம் தேவையற்ற பொருள் இழப்புகளைத் தவிர்க்கலாம்.

வாழ்க்கைத்துணை வழி உறவினர்கள் ஆதரவாக இருப்பாங்க. மகன் அல்லது மகளின் திருமண முயற்சிகள் நல்லபடியாக முடியும். தந்தையாரின் உடல் நிலை சீராகும். குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு ஆபரணங்கள் வாங்கும் யோகம் உண்டாகும். சகோதர ஒற்றுமை பலப்படும். உடன்பிறப்புகளின் வழியில் பிசினஸ் தொடங்கும் முயற்சி ஒரு சிலருக்கு கைகூடும். பஞ்சாயத்துக்கள் சாதகமாக முடியும். பணப்பொறுப்பு சொல்லி வாங்கிக் கொடுத்த தொகையும் வந்து சேரும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் உண்டு.

ரிஷபம் (மிருகசீர்ஷம் 1,2 ம் பாதம்)

சொந்தக்காரர்களோடும், நட்போடும் கலகலப்பான உறவு நிலவும். குடும்பத்தில் கடன் தொல்லைகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பீங்க. வீடு சம்பந்தமான வேலைப்பளு அதிகரித்தாலும் அதை உற்சாகமாகச் செய்வீங்க.. கட்டுமானம் சம்பந்தமாகத் தள்ளி வைத்த வேலையை, உடனே முடிக்க வேண்டியதிருக்கும். திருமணமாகி பல ஆண்டுகளாக வாரிசு இல்லாமல் எதிர்பார்த்து ஏங்கியவர்களுக்கு வாரிசு உண்டாகும். திருமண வயதில் திருமணத்திற்க்காக காத்திருக்கும் ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமண யோகம் கைகூடி வரும்.

குடும்பத்தில் சுபமான மங்கள விழாக்கள் நடைபெறும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு தகுதிக்கேற்றவாறு கௌரவமான வேலையும், பதவியில் இருப்போர்க்கு பதவி உயர்வும் விரும்பிய இடத்திற்க்கு பதவி உயர்வுடன் இடமாற்றம், ஊதிய உயர்வு கிடைக்கலாம்.

உங்க ராசியின் இரண்டாம் வீட்டுக்கு குரு பார்வை கிடைத்திருப்பதால் குடும்பத்தில் சந்தோஷம் நிலவும். திருமணம் அல்லது குழந்தைப் பேறுமூலம் குடும்பத்தில் ஒருவர் அதிகரித்து குதூகலத்தை அதிகரிப்பார். பல காலம் காத்திருந்த நல்ல விஷயங்கள் குடும்பத்தில் நிறைவேறும். தந்தையின் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டு மகிழ்ச்சி தரும். அனைவரும் சேர்ந்து இன்பச் சுற்றுலா செல்வீங்க. விட்டுக்கொடுக்கும் தன்மை காரணமாக ஒருவருக்கொருவர் அனுசரித்துப் பயன் பெறுவீங்க. குழந்தைகளால் பெருமிதம் வரும்.

எதையுமே நன்கு யோசித்துச் செய்தால் போதும். பெரிய தீர்மானங்கள் எடுக்குமுன் உங்களுக்கு நன்மை நினைக்கும் அனுபவசாலிகளிடம் ஆலோசனை  கேட்டுச் செய்தால் ஜெயித்துவிடுவீங்க.  பணியிடத்தில் நிறைய உழைப்பீங்க. ஆனால் அதை உற்சாகமாய்ச் செய்வீங்க.

மனதில் நினைத்த விஷயங்களை, உடனுக்குடன் செய்து முடிப்பீங்க. முறையான வழைமுறைகளை மேற்கொண்டு வாழ்வில் முன்னேற்றம் அடைவீங்க. இந்த வருடம் ஏற்றமும், மாற்றமும் உங்களைத் தேடிவரும். மேல்படிப்பு பற்றித் திட்டமிடும்போது நன்கு யோசித்து முடிவெடுப்பது அவசியம். யாரோ சொல்கிறார்கள் என்பதற்காக ஏதோ ஒரு கோர்ஸை எடுக்க வேண்டாம். உங்களுக்கு ஆர்வம் அதிகம் உள்ள படிப்பைத் தேர்ந்தெடுங்கள்.

பெண்களின் புகழ், கௌரவம் உயரும். பணவரவு அதிகரிக்கும். உற்சாகம் அடைவீங்க. மூத்த சகோதரர் பகையை மறந்து வலிய வந்து பேசுவார். பொது விழாக்கள், கல்யாண, கிரகப் பிரவேசம் போன்ற சுப நிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீங்க.

மிதுனம் (மிருகசீர்ஷம், 3,4 ம் பாதம்)

பொதுவாக வெளிநாட்டு தொடர்புடைய நன்மைகள் மற்றும் ஆதாயம் தரும். உங்க ஜென்ம ராசியை குரு பார்ப்பதால் உங்க புகழ், அந்தஸ்து, கௌரவம். மதிப்பு, மரியாதை, உற்றார், உறவினர், நண்பர்கள் மத்தியில் உயரும். வீட்டிலும் வெளியிலும் பல்வேறு வகையில் அனுகூலமான பலன்களைப் பெறுவீங்க. உங்களின் எதிரிகளை நேர்மையான முறையில் எளிதில் வெல்வீங்க. உங்களின் எதிர்கால முன்னேற்றத்தைக் கொடுக்கக்கூடிய சில நிகழ்வுகள் நடக்கும். கவர்ன்மென்ட் சார்ந்த உங்களின் வேலை சிறப்பாக நிறைவேறி நன்மைகளைப் பெற வாய்ப்புள்ளது.

ஆரம்பத்தில், பொருளாதார விஷயங்களில் பலவீனம் இருக்கும். இருப்பினும், உங்க நிதி வாழ்க்கையை மேம்படுத்த உங்க கடின உழைப்பையும் முன்னேற்றத்தையும் பயன்படுத்தி வெல்வீங்க.. பொருளாதார வகையில் பார்க்கும் பொழுது, இந்த ஆண்டு உங்களுக்கு கலவையான பலன் கொண்டு வரக்கூடும். எனினும் அதிகமான நற்பலன்களே இருக்கும். உழைத்த உழைப்பு உங்களை ஏமாற்றாமல் பலன் கொடுக்கும்.

பல மாதங்கள் கழித்து வரன் பொருந்தி வரும். பெற்றோர்களின் மணிவிழா, முத்துவிழா, பவளவிழா போன்றவற்றையும், பிள்ளைகளின் பிறந்தநாள் விழாக்களையும் நடத்தும் யோகம் உண்டு. உடன்பிறந்தவர்களின் முழு ஆதரவும் இருக்கும், உங்க வாழ்க்கைத் துணையுடன் நீங்கள் விரும்பியது போல சந்தோஷமாக நேரத்தை செலவிடுவீங்க.

உடல் ஆரோக்யத்தில் கவனமாக இருப்பவர் நீங்கள். உடற் பயிற்சியும் வழக்கம்போலத் தொடர்ந்தால் ஆரோக்யத்தில் உங்களை மிஞ்ச யார் இருக்கிறார்கள்? போன ஆண்டு இருந்த அஷ்டமச் சனி தொல்லைகள்கூட இப்போது இல்லாததால் மனதிலும் உடலிலும் உற்சாகம் பொங்கும். நிறையத் தண்ணீர் குடிப்பவர் என்றால் சிறுநீரகப் பிரச்னைகள் இருக்காது.

முக்கிய முடிவுகளைத் தைரியமாக எடுப்பீங்க. மேலதிகாரிக்கு சில ஆலோசனைகள் வழங்குவீங்க.அனைவராலும் மதிக்கப்படுவீங்க புதிய யுக்திகளைக் கையாண்டு லாபத் தைப் பெருக்குவீங்க. புது பங்குதாரரைச் சேர்ப்பீங்க. அலுவலகச் சூழ்நிலை அமைதி யாகும். உதாசீனப்படுத்திய உயரதிகாரிகள் உங்களை மதித்துப் பேசுவாங்க.புதிய பொறுப்பும் வாய்ப்புகளும் கதவைத் தட்டும். சற்று அதிகம் உழைக்க வேண்டியிருக்கிறதே என்ற சலிப்பு வேண்டாம். பலன் நல்லா இருக்கும்.

மிதுனம் (திருவாதிரை)

ஆண்டின் இரண்டாம் பாதியில் எட்டாம் இடமான அஷ்டம ஸ்தானத்தில் குருவும் சனியும் சஞ்சரிக்கின்றனர். 12ஆம் வீட்டில் ராகுவும், ஆறாம் வீட்டில் கேதுவும் சஞ்சரிக்கின்றனர். பழைய தொல்லைகளிலிருந்து விடுபடுவீங்க.  கணவன் மனைவி இடையே இருந்து வந்த சின்னச் சின்ன பிரச்சினைகள் விட்டுக்கொடுத்துச் செல்வதன் மூலம் சரியாகும். எந்த முடிவு எடுக்கும் முன்பாகவும் நன்கு ஆலோசிப்பதுடன் அனுபவசாலிகளைக் கலந்தாலோசியுங்கள். வேலையில் இருப்பவர்கள் விழிப்புணர்வுடன் இருப்பது நல்லது.

பணவரவு ஓரளவுக்குத் திருப்திகரமாக இருக்கும். பொருளாதாரத்தில் இருந்து வந்த தடைகள் நீங்கி, முன்னேற்றமான வாய்ப்புகள் உண்டாகும். அதிகம் உழைத்து நற்பலனை அடைய முடியும். பல துறையில் உங்களின் தேடல் அதிகரிக்கும். உங்களின் திறமை அதிகரிக்கும், உங்களின் செயல்பாடு சிறப்பாகவும், பொறுமையுடனும் செயல்பட்டு செயல்களில் வெற்றி பெறுவீங்க. அதன் மூலம் நல்ல லாப நிலை உண்டாகும்.

திருமண வயதில் உள்ள இந்த ராசியினருக்கு, அவர்கள் எதிர்பார்த்த மாதிரியான வரன் அமையும். தம்பதியிடையே அன்னியோன்னியம் அதிகரிக்கும். ஆரோக்கியமான விவாதம் ஏற்படலாம். பிள்ளைகளுடன் நல்ல புரிதல் ஏற்படும். அவர்கள் உங்களின் பேச்சை கேட்டு நடக்கும் வகையில் நீங்களும் அவர்களுடன் நல்லபடி நடந்து கொள்வீங்க.  கணவன் மனைவிக்குள் விட்டுக்கொடுத்துச் செல்ல வேண்டும்.

இயல்பாகவே மேலும் மேலும் கற்கும் ஆர்வம் உங்களைக் காக்கும். மதிப்பெண்ணுக்காகக் கற்பதுடன் வாழ்க்கையில் முன்னேறவும் கற்பீங்க. ஆசிரியர்களுக்கு உகந்த மாணவராக இருப்பீங்க. எதை முயன்றாலும் அதில் வல்லமை வரும். மேற்படிப்புக்கு முயற்சி செய்பவர்களுக்கு அவர்களின் விருப்பம் போலவே அது அமையும்.

திறமைகள் வெளிப்படும். பணபலம் கூடும். சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீங்க. வெளிவட்டாரத்தில் புகழ், கௌரவம் வளரும். சொத்து சம்பந்தப்பட்ட பிரச்னைகளுக்கு சாதகமான தீர்வு கிடைக்கும். வெளிநாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் திடீர் திருப்பங்கள் ஏற்படும். நட்பு வட்டம் விரியும்.

குரு பார்வை ராசிக்கு இருக்கையில் என்ன குறை? உடல் நலத்தை நன்கு பேணுபவர்களுக்கு இன்னும் அதிக ஹெல்த் இருக்கும். ராகு கேது காரணமாக சிறு சருமப் பிரச்னைகள் வரக்கூடும். ஆனால் அவை நிரந்தரமல்ல. ஆரோக்யமான உணவை சுகாதாரமான இடத்தில் சாப்பிடுங்கள். கையேந்தி பவனைத் தவிர்க்க வேண்டும்.

மிதுனம்  (புனர்பூசம்: 1,2,3 ம் பாதம்)

பொதுவாக நிதி நிலைமையை உயரும். உங்களின் ஆளுமை கூடும். கவர்ன்மென்ட் வகையிலான அனுகூலங்கள் சிறப்பாக நிறைவேறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உங்க மதிப்பும், கெளரவமும் அதிகரிக்கும். உங்க செல்வத்தின் தேடலுக்கான முயற்சியில் விரும்பியது போலவே நிலைமை சாதகமாக அமையும். கடந்த ஆண்டுகளைவிட மன நிம்மதி அதிகரிக்கும். வெற்றி வாய்ப்பு கூடும். சற்று கவனமாக இருக்க வேண்டிய ஆண்டு. இருப்பினும் உங்களுக்கு பலவித அதிர்ஷ்டங்கள் அடிக்க வாய்ப்புள்ளதால் பிரச்னைகளை சாதகமாக வாய்ப்புக்கள் பிறக்கும். இந்த புத்தாண்டு சாதகமான ஆண்டாக அமையும். பல வகைகளில் நல்ல வசதி  வாய்ப்புகள் தேடி வரும். பெரிய மனிதர்கள் உயர் பதவியில் இருப்பவர்களின் நட்பு, ஆதரவு கிடைக்கும். அக்கம் பக்கத்தினர், தோழிகளிடம் அளவோடு பழகுவது நல்லது.

திடீர் செலவுகளும் ஏற்படும். அதே நேரம் பண வரவும் அதிகரிக்கும். தன வரவு அதிகரிப்பதால், பற்றாக்குறை நீங்கும். கடன் சுமை நீங்கும். உடல் நலம் மேம்படும் என்பதால் மருத்துவ செலவும் குறைந்து உழைக்கும் நேரமும் கூடி, வருமானம் அதிகரித்து, சேமிப்பு அதிகரிக்கும். பெரிய சொத்துக்கள் வாங்கத் திட்டமிடுவதால் வேறு வழியின்றி லோன் போட வேண்டியிருக்கும். அதைச் சரியாக அடைப்பது பற்றி முறையாகத் திட்டமிடுவீங்க. குடும்பத்தினர் கைகொடுப்பாங்க என்பதால், அதற்கு வேண்டிய ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். உபரி வருமானங்கள் உங்க எண்ணம்போல் வரும். சொத்துவாங்குவதற்குச் சேமிப்பிலிருந்து எடுப்பீங்க. இது நியாயமான செலவே.

பணியாளர்களுக்கு இடமாற்றங்கள் ஏற்படலாம். தொழிலில் கூட்டாளிகள் உங்க குணமறிந்து நடந்துகொள்வர். முதலீட்டை அதிகரிப்பதில் நிதானத்தோடு செயல்படவேண்டிய நேரம் இது. பணியில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளுடன் பகை ஏற்படாமல் கவனமாக இருங்கள். பக்கத்தில் பணிபுரிபவர்களுடன் அதிக இணக்கம் வரும். . ‘வேலை போய்விடுமோ’ என்ற வீண் கவலையைத் தூக்கி எறிங்கள்.

சென்ற ஆண்டு மேல் படிப்பில் தடைகள் வந்துகொண்டிருந்தன. இனி அவை இல்லை. நீங்கள் கேட்ட துறையில் சீட் கிடைக்காத நிலை மாறும். வெளிநாட்டில் முயற்சி செய்த கல்வி இந்த ஆண்டு சாத்தியமாகும். கல்வி விஷயத்தில் சோம்பல் வேண்டாம்.

கடகம் (புனர்பூசம்,4 ம் பாதம்)

பொதுவாக பல பாக்கியங்கள் கிடைக்கக் கூடிய ஆண்டாக இருக்கும். பூர்விக சொத்துக்கள் சார்ந்த விஷயங்களில் உங்களுக்கு சாதகமாக நடக்கும். ஆன்மிக பயணங்கள் செய்ய வாய்ப்புக்கள் அமையும். இதுவரை இல்லாத சுறுசுறுப்பை உணர்வீங்க. ஆரோக்கியம் மேம்படும்.  இறை சிந்தனை மேலோங்கும். பழைய தோல்விகள் மெல்ல மறைந்து மாறும். தன்னம்பிக்கை அதிகரிக்கும். செய்யும் செயல்களில் ஒரு பிடிப்பு ஏற்படும். தெய்வீக சிந்தனை  மேலோங்கும். அதிகம் உழைக்க அஞ்ச மாட்டீர்கள். அதற்கேற்ற நற்பலனும் கிடைக்கும். வருமானமும் கூடும். பூர்வீக சொத்தில் இருந்து வந்த வில்லங்கம், தடைகள் நீங்கும். உங்களுக்கு உரிய பங்குத் தொகை வந்து சேரும். குழந்தை பாக்யம் எதிர்பார்த்திருப்பவர்கள்  வீட்டில் விரைவில் மழலை சத்தம் கேட்கும். வழக்கு சம்பந்தமான இழுபறிகள் நீங்கும்.

குரு பார்வை காரணமாக நிதி நிலைமை அமோகமாக இருக்கும். என்றைக்கோ கொடுத்த கடன்கள் திரும்ப வரும். முதலீடு செய்துவிட்டு மறந்துபோன தொகைகள் இரட்டிப்பு லாபமாகத் திரும்ப வரும். தொட்டதெல்லாம் பொன்னாகும். சனி பார்வை காரணமாக லாபங்கள், நன்மைகள் மற்றும் வர வேண்டிய தொகைகள்  சற்று தாமதமானாலும் ஏமாற்றமின்றிக் கிடைக்கும். பணியாளர்களுக்குச் சம்பள உயர்வு உண்டு. சில வியாபாரங்களில் அமோக லாபம் வரும்.

நல்ல பலன்களைப் பெறப் போகும் ஆண்டாக இருக்கிறது. குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். இத்தனை காலம் உங்களை மதிக்காதவர்கள் கூட மதிப்புடன் பேசுவாங்க. உங்க அருமையை ஃபேமிலி உணரும். அப்படி உணர்வதற்கான சந்தர்ப்பம் ஒன்று நேரிடும். பிரிந்து சென்றவர் மீண்டும் வந்து இணையவோ அல்லது பிரிந்தது பற்றி வரைந்தவை வாய்ப்பு உள்ளது. நடுவில் சிலநாட்களுக்கு கலகலப்பு குறைந்தாலும் பொதுவாக குரு பார்வை காரணமாக மகிழ்ச்சியான சூழல் தான் நிலவும். திருமணம் போன்ற காரணத்தால் புதிய நபர் சேர வாய்ப்பு உள்ளது.

முயற்சிகளை முனைந்து துரிதப்படுத்துங்கள்.  மருத்துவம் படிக்க விழைபவர்களுக்கு இந்த ஆண்டு விருப்பப்படி கல்வி அமையும். பட்ட மேல் படிப்புக்குச் செய்த முயற்சிகள் பல காலத்துக்குப் பிறகு அமையும். ஆராய்ச்சிப் படிப்பை முடிப்பீங்க.

சகோதரர்களுடன் சுமுகமான போக்கைப் பின்பற்றுங்கள். கொடுக்கல் வாங்கலில் கவனமாக இருப்பதன் மூலம் ஏமாற்றங்களைத் தவிர்க்கலாம்

கடகம் (பூசம்)

பொதுவாக அனுகூலம்  ஏற்படும். முக்கிய நபர்களின் உதவி கிடைக்கும். தன்னம்பிக்கை  அதிகரிக்கும். விடா முயற்சியுடன் ஈடுபட்டு  செயல்பாடுகளில் வெற்றி பெறுவீங்க. விருப்பங்கள்  கைகூடும். அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனம் தேவை. வீண் பகை ஏற்படலாம். மற்றவர்களுக்காக பொறுப்புகளை ஏற்காமல் இருப்பது நல்லது. வீண் அலைச்சல் இருந்தாலும் அதன் பலன் இனிக்கும். நண்பர்களுக்காகவும் உறவினருக்காகவும் தூது சென்று சமரசம் பேசுவதால் உங்க மதிப்பு உயரும். எது செய்தாலும் பணிவன்புடன் செய்வது நன்று. .கல்வி, திருமணம் போன்ற விஷயங்களுக்கு இரண்டாம்பேருக்குத் தெரியாமல் உதவி செய்து திருப்தி அடைவீங்க. பாராட்டுகள். நல்ல முடிவுகள் ஏற்படும். நான்கு  சக்கர வாகனம் வாங்கும் யோகம் உள்ளது.

இதைப் பற்றி நீங்கள் கவலைப்பட்ட காலம் போய் இனி அதிகப் பணவரவு காரணமாக மனம் மகிழும் நேரம் வரும். தேனீ மாதிரி ஓடி உழைத்தும் சற்றுக் குறைவான வருமானமே வருவதாக நீங்கள் அங்கலாய்த்ததற்கு நேர்மாறாக ஏஸி அறையில் உட்கார்ந்து சந்தோஷமாய்ப் பணத்தை அள்ளி எண்ணுவீங்க.  முன்பு எப்போதோ வாங்கிபபோட்ட நகைகளும் சொத்துக்களும் இப்போது மிக அதிக மதிப்புக் கொண்டிருக்கும். வெள்ளி தங்கம் என்று பொருட்கள் சேர்வதால் மனதில் நிம்மதி பெருகி இரவில் தூக்கம் வரும். உரிய முறையில் வரிகளைக் கட்டி மேலும் நிம்மதியடைவீங்க.

குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து சேருவாங்க. கணவன் மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். பிள்ளைகளின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் ஆர்வம் காட்டுவீங்க. விருந்தினர்கள் வருகை இருக்கும். மரியாதையும் அந்தஸ்தும் கூடும். குழந்தைகளின் விருப்பத்தை  நிறைவேற்ற சிறிதளவு சிரமப்பட்டாலும் அவர்கள் மனநிறைவு உங்களுடைய சிரமத்தை மறக்கச் செய்யும். இப்போது நீங்கள் செலவு செய்வது அவர்களின் வருங்காலத்தில் அவர்களுக்குப் பெரிய நன்மை செய்யும் என்பால் இதை நீங்கள் முதலீடாகவே நினைக்கலாம். குடும்பத்தில் இதனால் மகிழ்ச்சி நிலவும்.

பணிபுரியும் பெண்களுக்கு முன்னேற்றம் அதிகரிக்கும். எதிர்பார்த்தபடி பணி நிரந்தரமும், ஊதிய உயர்வும் கிடைக்கலாம்.

கடகம்  (ஆயில்யம்)

வருடத்தின் இரண்டாம் பகுதியில் சனியும் குருவும் ஏழாம் வீட்டிலும் ராகு லாப ஸ்தானத்திலும் கேது ஐந்தாம் வீட்டில் சஞ்சரிக்கின்றனர். பிறக்கப் போகும் புத்தாண்டு சுபமான ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய நல்ல நிகழ்வுகள் நடைபெறும். குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஒற்றுமை கூடும். வீட்டில் திருமணம் சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். இந்த ஆண்டு நீங்கள் குரு பகவான் ஸ்தலங்களுக்கு சென்று வணங்கலாம். வெளிநாட்டில் உள்ள நெருங்கிய உறவினர்களிடமிருந்து நல்ல செய்திகள் வரும். அடுத்தடுத்து நல்ல நிகழ்வுகள் வந்தபடி இருக்கும். இந்த வருடம் திடீர் கோபம் ஏற்படலாம். நெருக்கடி நிலை காணப்படும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதை தள்ளி போடுவது நன்மை தரும். பயணங்களால் அலைச்சல் ஏற்படலாம்.  ஆனால் அதன் பலன் நல்லபடியாக இருக்கும். ஆனாலும் பணப் புழக்கம் திருப்தியாக இருக்கும்.

பொருளாதார முன்னேற்றம் அதிகரிக்கும் உங்களின் ராசிக்கு இந்த ஆண்டில் துவக்கத்திலேயே குருவின் பார்வையில் கிடைப்பது யோகம். தைரியம் தன்னம்பிக்கை அதிகரிப்பதால் சம்பாதிக்கும் வழிகளைத் திறம்பட யோசித்து அதன்படி செயல்பட்டு வெற்றி காணுவீங்க. பங்குச்சந்தை மார்க்கெட்டில் செய்யும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். முன்பு செய்த முதலீடுகளை இப்போது பெருக்கும் வழி அறிந்து லாபம் சம்பாதிப்பீங்க. ஒன்றிற்கு மேற்பட்ட இனங்களில் லாபம் வரும். குடும்பத்தில் சம்பாதிக்கும் நபர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் குடும்ப வருமானம் ஒட்டுமொத்தமாக அதிகரிக்கும். திருமகள் கடாக்ஷ என்பார்களே அது உங்களுக்கு இந்த ஆண்டு நிச்சயமாக உண்டு. முன்பு பயத்தின்காரணமாகச் செய்யாமல் விட்ட முதலீடுகளை இப்போது செய்து பலனடைவீங்க.

சந்தோஷமான சூழலில் ஓரிரண்டு விஷயங்கள் பானகத்தில் அகப்பட்ட மண் போல் சங்கடப்படுத்தினாலும் அவையெல்லாம் தற்காலிகமானவையே. குடும்பத்திற்குள் உள்ள யாரோ ஒருவருடைய தலையீட்டால் அனைத்தும் சீராகி நிம்மதி மீளும்.  குடும்பத்தில் பல முக்கியமான முடிவுகளும் எடுக்க வேண்டி இருக்கும். சனி பகவான் உங்களைக் குடும்பத்திற்காக வும் மனைவி அல்லது கணவருக்காகவும் அதிகமாக உழைக்க செய்வார். பணப்புழக்கம் நல்லா இருக்கும். எதிர்பார்த்த பல நல்ல திருப்பங்கள் ஏற்படும். தாய்மாமனிடமிருந்து அதிக நன்மைகள் கிடைக்காதிருந்த நிலை மாறி சந்தோஷ உறவு நிலைக்கும்.

நாளை சிம்மம், கன்னி, துலாம், விருச்சிகம் ராசிகளுக்குரிய நட்சத்திரப் பலன்கள் வெளியாகும்…

More articles

2 COMMENTS

Comments are closed.

Latest article