அமெரிக்காவின் கென்டக்கி, இலினொய், இந்தியானா உள்ளிட்ட மத்திய மாகாணங்களை தாக்கிய 30 க்கும் மேற்பட்ட தொடர் சூறாவளி காற்றில் சிக்கி கென்டக்கி மாகாணத்தில் மட்டும் இதுவரை சுமார் 100 பேர் இறந்ததாக கூறப்படுகிறது.

கென்டக்கி மாகாணத்தை தாக்கிய நான்கு சூறைக்காற்றில் ஒன்று தான் சென்ற பாதையில் சுமார் 322 கி.மீ. தூரத்திற்கு சேதம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. அந்த சூறாவளி சென்ற பாதையில் 6 கி.மீ. நீளம் மட்டுமே உள்ள மேபீல்ட் நகரில் மட்டும் நூற்றுக்கணக்கான வீடுகள் இடிந்து தரைமட்டமாகியுள்ளது.

இரவு நேரத்தில் தாக்கியதால் பாதுகாப்பாக பதுங்க வழிதெரியாமல் தவித்த நூற்றுக்கும் அதிகமானோர் பணிபுரியும் மேபீல்ட் கன்ஸ்யூமர் ப்ராடக்ட்ஸ் தொழிற்சாலையில் பணிபுரியும் எட்டு பேர் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தனர்.

அதேபோல், இலினொய் மாகாணத்தில் உள்ள அமேசான் நிறுவன கிடங்கில் பணிபுரியும் 6 பேர் இறந்ததாக கூறப்படுகிறது இந்த தொழிற்சாலையில் ஏற்பட்டிருக்கும் சேதத்தை பார்வையிட்ட அதிகாரிகள் உயிரிழப்பு அதிகமாக இருக்கக்கூடும் என்று அஞ்சுகின்றனர்.

வெள்ளிக்கிழமை இரவு நடந்த இந்த இயற்கை சீற்றத்தால் வீடிழந்த மக்கள் குறித்து ஞாயிற்றுக் கிழமையான நேற்று சர்ச்சுக்கு வந்தபோது தான் பெரும்பாலானோருக்கு தெரியவந்தது.

இந்த சூறாவளி காற்றில் மனித உயிர்களும் வீடுகளும் பாதிக்கப்பட்ட நிலையில் கென்டக்கி மாகாணத்தில் இருந்து இந்தியானா மாகாணம் வரை 209 கி.மீ. தூரம் பறந்து வந்த புகைப்படம் ஒன்று பரபரப்பாக பேசப்படுகிறது.

இந்தியானா மாகாணத்தில் உள்ள நியூ அல்பனி நகரில் வசிக்கும் கேட்டி போஸ்டன் என்பவரது கார் கண்ணாடியில் வந்து விழுந்த 1942 ம் ஆண்டு எடுக்கப்பட்ட புகைப்படத்தின் பின்னால் இருந்த குறிப்பை வைத்து, அது ஸ்வாட்ஸ்ல் குடும்பத்தினரின் புகைப்படம் என்பது தெரியவந்தது.

https://twitter.com/katieposten/status/1469685223700975622

இதனை போஸ்டன் தனது முகநூலில் பதிவு செய்த நிலையில் அவரது நண்பர் மூலம் கென்டக்கி மாகாணத்தின் டாசன் ஸ்பிரிங்ஸ் எனும் இடத்தில் வசிக்கும் ஸ்வாட்ஸ்லின் புகைப்படம் என்பது உறுதியானது.

சாலை மார்கமாக 269 கி.மீ. தூரத்தில் உள்ள ஒருவரது வீட்டில் இருந்த புகைப்படம் பறவைபோல் 209 கி.மீ. நேர்கோட்டில் பயணித்து வந்து விழுந்தது அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர், இதுபோன்ற சூறைக்காற்றில் பேப்பர் போன்ற சிறு தூசுகள் 30,000 முதல் 40,000 அடி உயரம் வரை செல்லும் என்றும் இதற்கு முன் 1920 ம் ஆண்டு மிஸ்ஸோரியில் இருந்து தெற்கு இலினொய் வரை 370 கி.மீ. காகித குப்பைகள் பறந்து வந்ததாக பதிவுகளில் உள்ளது என்றும் குறிப்பிட்டார்.