கோவை:

கோவை அருகே உள்ள சூலூர் விமானப்படைத் தளத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக்-21 ரக போர்  விமானத்தில் இருந்து  பெட்ரோல் டேங்க் தனியாக கழன்று விழுந்து வெடித்து சிதறியதால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்திய விமானப்படை அதிகாரிகள் 2 பேர் இன்று காலை வழக்கம்போல கோவை அருகே சூலூர் விமானப்படை தளத்தில் இருந்து விமான பயிற்சியில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் சென்ற மிக்-21 ரக போர் விமானம்  இருகூர் அருகே பறந்தபோது, விமானத்தில் இருந்து பெட்ரோல் மட்டும் கழன்று கீழே உள்ள விவசாய நிலத்தில் விழுந்து வெடித்து தீபிடித்து சிதறியது. இதனால் அந்த இடத்தில் 3 அடி ஆழத்திற்கு பள்ளம் ஏற்பட்டது.

இதுகுறித்து அந்த பகுதி மக்கள் உடடினயாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். விரைந்து வந்த காவல்துறையினர் அந்த பகுதியில் உடனே பாதுகாப்பை பலப்படுத்தினர். இதற்கிடையில், பயிற்சி விமானம் சூலூர் விமானப்படை தளத்தில் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

இதன் காரணமாக அதிர்ஷ்டவசமாக விபத்து தவிர்க்கப்பட்டது. பெட்ரோல் டேங்க் விழுந்த பகுதிக்கு விமானப்படை அதிகாரிகள் வந்து பார்வையிட்டனர். விமானத்தில் இருந்து கீழே விழுந்து தீப்பிடித்த பெட்ரோல் டேங்க் 1200 லிட்டர் கொள்ளளவு கொண்டது. இதுகுறித்து விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.