டில்லி:

ஓபிஎஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் 11 பேரையும் தகுதி நீக்கம் செய்ய வேண்டும் என உச்சநீதி மன்றத்தில் தொடரப்பட்ட மேல்முறையீட்டு வழக்கை விரைவில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் என உச்சநீதிமன்றம் அறிவித்து உள்ளது.

ஜெ.மறைவுக்கு பிறகு, சசிகலா அதிமுகவை கைப்பற்ற முனைப்பு காட்டும் சமயத்தில், அவருக்கு எதிராக ஓபிஎஸ் போர்க்கொடி தூக்க அதிமுக இரண்டாக உடைந்தது. இதற்கிடையில், சசிகலாவும் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைக்கு செல்ல எடப்பாடி தலைமையில் அரசு அமைந்தது.

அதையடுத்து சட்டமன்றத்தில் எடப்பாடி அரசுமீது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில், ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் எடப்பாடி அரசுக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை கட்சித்தாவல் தடை சட்டப்படி தகுதி நீக்கக் கோரி திமுக சார்பில் சக்கரபாணி, டிடிவி தினகரன் உள்ளிட்டோர் சென்னை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர, வழக்கை விசாரிக்க நீதி மன்றம் மறுத்து விட்ட நிலையில், உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. அங்கு வழக்கு கிடப்பில் போடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் திமுக மற்றும் டிடிவி தரப்பில் உச்சநீதி மன்றத்தில்  மேல்முறையீடு செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஏற்கனவே நடைபெற்று இறுதி விசாரணைக்காக காத்திருக்கிறது. இறுதி விசாரணை நடைபெற்று முடிந்தால், விரைவில் தீர்ப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வழக்கு விசாரணைக்கு வராத நிலையில், வழக்கை விரைந்து விசாரிக்க திமுக சார்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு  கோரிக்கை வைக்கப்பட்டது. ‘அப்போது,  பல வழக்குகள் நிலுவையில் உள்ளதால் விரைவாக விசாரிக்க முடியாது, வழக்கை பட்டியலிட முயற்சி செய்கிறோம்   உச்சநீதி மன்றம்  தெரிவித்தது.

இந்த நிலையில், திமுக தரப்பில் மீண்டும் உச்சநீதி மன்றத்தில் விசாரணையை விரைந்து விசாரிக்க கோரிக்கை வைக்கப்பட்டது.

உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வில், தங்கதமிழ்செல்வன் சார்பில் கபில் சிபில் கோரிக்கை வைத்தார். அதை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் விரைவில், புதிய அமர்வில் வழக்கு விசாரிக்கப்படும் என  தெரிவித்து  உள்ளது.