சென்னை:  கிண்டி ஆளுநர் மாளிகை முன் பெட்ரோல் குண்டை ரவுடி கருக்கா ரவி வீசியது தொடர்பான சிசிடிவி காட்சிகளை  சென்னை காவல்துறை வெளியிட்டு உள்ளது.

 ”குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்லவில்லை. குற்றவாளி ஆளுநர் மாளிகை ஊழியர்களால் பிடிக்கப்படவில்லை. சென்னை பெருநகர காவல்துறையை சேர்ந்த 5 காவலர்களால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார்” என சென்னை காவல்துறை விளக்கம் அளித்துள்ளது.

ஆளுநர் மாளிகை முன்பு ரவுடி கருக்கா ரவி பெட்ரோல் குண்டை வீசிய சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த ரவுடி சமீபத்தில் ஜாமினில் வெளிவந்த நிலையில், அவரை ஜாமினில் எடுத்தது திமுக வழக்கறிஞர் என்பதும் தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக ராஜ்பவன் தரப்பில் புகார் கொடுத்தும், சென்னை காவல்துறை அதை பதிவு செய்யவில்லை என்றும்,  கிண்டி ராஜ்பவனில் பெட்ரோல் குண்டு வீசிய நபர்கள் தப்பி ஓடிவிட்டதாக ஆளுநர் மாளிகை டிவிட் செய்திருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில்,   சென்னை பெருநகர காவல் ஆணையர் சந்தீப்ராய் ரத்தோர் விளக்கம் அளித்துள்ளார். பெட்ரோல் குண்டு வீசிய கருக்கா வினோத் நந்தனம் சிக்னலில் இருந்து ராஜ்பவன் வரை வந்து பெட்ரோல் குண்டு வீசும் சிசிடிவி காட்சிகளையும் அவரை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்த புகைப்படங்களையும் வெளியிட்டார்.

அந்த வீடியோவில், கடந்த 25ஆம் தேதி அன்று மதியம் 3 மணி அளவில் குற்றாவாளி கருக்கா வினோத் ஆளுநர் மாளிகை நோக்கி பாதசாரி போல நடந்து வந்துள்ளார் என்பது சிசிடிவி காட்சிகளில் உறுதி ஆகி உள்ளது.

ஆளுநர் மாளிகையின் பிராத வாயில் வழியாக நுழைய முயற்சிக்கவில்லை. கருக்கா வினோத், தான் கொண்டு வந்த பெட்ரோல் நிரப்பிய 4 பெட்ரோல் பாட்டில்களில் 2 பாட்டில்களை சர்தார் படேல் சாலையில் இருந்து எரிய முற்பட்டபோது அவை ஆளுநர் மாளிகை அருகே இருந்த பேரிகாட் அருகே விழுந்தது. ஆளுநர் மாளிகைக்குள் வீசப்படவில்லை.

குற்றவாளி சம்பவ இடத்தில் இருந்து தப்பித்து செல்லவில்லை. குற்றவாளி ஆளுநர் மாளிகை ஊழியர்களால் பிடிக்கப்படவில்லை. சென்னை பெருநகர காவல்துறையை சேர்ந்த 5 காவலர்களால் பிடிக்கப்பட்டு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார் என சென்னை மாநகர காவல் ஆணையர் சந்தீப் ராய் ரத்தோர் கூறினார்.

அதுபோல, மயிலாடுதுறை சென்ற ஆளுநர் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகாருக்கு சட்டம் ஒழுங்கு ஏடிஜிபி அருண் விளக்கம் அளித்துள்ளார்.

அதில், ஆளுநர் மாளிகை அளித்த புகாரில் மயிலாடுதுறை தருமபுர ஆதீன விழாவுக்கு சென்ற ஆளுநர் தாக்கப்பட்டதாகவும் ஆனால் ராஜ்பவன் அளித்த புகாருக்கு காவல்துறை முதல்தகவல் அறிக்கையை பதிவு செய்யவில்லை என்றும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ராஜ்பவன் தெரிவித்து இருந்தது. அதற்கான விளக்கத்தை நான் தருகிறேன்.

அப்போது கவர்னரின் வாகனம் சென்ற பிறகு தனியார் வாகனம் ஒன்றின் மீது ஒரே ஒரு கொடி மேலிருந்து வந்து விழும். அதுதான் இந்த சிசிடிவி காட்சிகள். ஆளுநர் தாக்கப்பட்டதாக கூறப்படும் புகார் என்பது தவறான செய்தி என்பது இந்த வீடியோவில் புலப்படும்.

அதே போல் ராஜ்பவன் அளித்த புகாருக்கு முதல் தகவல் அறிக்கை போடப்படவில்லை என்ற செய்த தவறானது. முதலில் இந்த சம்பவம் நடந்தது ஏப்ரல் 18 இல்லை ஏப்ரல் 19ஆம் தேதி. இந்த சம்பவத்தில் 73 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

இதுவரை 53 பேரை விசாரித்துள்ளோம், விரைவில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளோம் என்று கூறி முதல் தகவல் அறிக்கையை காண்பித்தார்.

பின்னர் பேசிய தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், ”தமிழ்நாடு பாதுகாப்பான இடம், இந்தியாவில் உள்ள மெட்ரோ நகரங்களில் மிக பாதுகாப்பான இடம் சென்னை என்று புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் இருந்தலும், போதை பொருட்கள் தொடர்பான குற்றங்கள் இருந்தாலும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறோம். இன்றைக்கு தமிழ்நாடு மிகவும் அமைதியான மாநிலம் என நாங்கள் சொல்லவில்லை ஆய்வுகள் சொல்கிறது. சட்டம் ஒழுங்கை பாதுகாப்பதில் முக்கியத்துவத்தை காவல்துறை தொடர்ந்து கொடுத்து வருகிறது”  என்றார்.