டில்லி

சூதிக்குள் தொழுகை நடத்த பெண்களை அனுமதிக்க கோரிக்கை விடுத்து மகராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகள் மனு அளித்துள்ளனர்

.

கடந்த வருடம் உச்சநீதிமன்றம் சபரிமலைக்கு அனைத்து பெண்களும் சென்று வழிபடலாம் என தீர்ப்பளித்தது. அந்த தீர்ப்பில் எந்த ஒரு வழிபாட்டு தலத்துக்கும் பெண்கள் செல்லக் கூடாது என்னும் விதிமுறை எந்த ஒரு மத வேதத்திலும் சொல்லப்படவில்லை என குறிப்பிடப்பட்டிருந்தது. மசூதிகளில் பெண்கள் செல்ல தடை இல்லை எனினும் இதுவரை எந்த மசூதியிலும் பெண்களை அனுமதிப்பதோ பெண்கள் தொழுகை நடத்த தனி இடமோ கிடையாது.

மகாராஷ்டிராவை சேர்ந்த இஸ்லாமிய தம்பதிகளான யாஸ்மின் சுபைர் அகமது மற்றும் சுபைர் அகமது நசீர் ஆகியோர் உச்சநீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுவில், “இஸ்லாமியர்களின் வேதமான குரான் மற்றும் இஸ்லாமிய விதிமுறைகளை வகுத்த ஹடித் ஆகியவற்றில் எங்கும் பெண்களை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்கக் கூடாது என கூறப்படவில்லை. பெண்களை மசூதிக்குள் தொழுகை நடத்த அனுமதிக்காதது பெண்களுக்கு இழிவை ஏற்படுத்துவதாகும். மேலும் இது அடிப்படை உரிமைகளை மீறிய செயலாகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவில் எதிர் தரப்பாக இந்திய அரசு, சிறுபான்மை நல அமைச்சகம், மத்திய வக்ஃப் குழு, மகாராஷ்டிரா மாநில வக்ஃப் குழு, மற்றும் அகில இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட வாரியம் ஆகியவை சேர்க்கப்பட்டுள்ளது. மேலும் ஜமாத் ஈ இஸ்லாமி மற்றும் முஜாகித் மசூதிகளில் பெண்கள் தொழுகை நடத்துவதையும் இந்த மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அத்துடன் இந்த மனுவில், “கடந்த வருடம் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் மத நம்பிக்கைகளை காரணம் காட்டி பெண்களை தாழ்வாக நடத்துவது, சம உரிமை அளிக்காதது உள்ளிட்டவை சட்ட விரோதமானது என கூறப்பட்டுள்ளது. இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் பெண்கள் தொழுகை நடத்த அனுமதிக்கப்படுகிறது.

அப்படி இருக்க மனுதாரரில் ஒருவரான பெண்ணை புனே நகரில் உள்ள ஒரு மசூதியில் தொழுகை நடத்த அனுமதிக்கவில்லை. இந்நிலை பல மசூதிகளில் உள்ளது. எனவே அனைத்து மசூதிகளிலும் பெண்களும் தொழுகை நடத்த அனுமதிக்க வேண்டும்” என கூறப்பட்டுள்ளது.