மிக்ஜாம் புயலால் பெரும்பாதிப்புக்கு உள்ளான பகுதியாக வேளச்சேரியை அடுத்த பெரும்பாக்கம் உள்ளது.

கடந்த 5 நாட்களில் இங்கிருந்து 25000க்கும் அதிகமான மக்கள் மீட்கப்பட்டுள்ளனர். இந்தப்பகுதியில் இருந்த அனைவரும் வெளியேற்றப்பட்டதை அடுத்து ஆள் அரவம் இல்லாத பகுதியாக காட்சியளிக்கிறது.

பெரும்பாக்கம் பகுதியில் இன்னும் முழங்கால் அளவு தண்ணீர் இருப்பதால், இந்தப் பகுதி இயல்பு நிலைக்குத் திரும்ப குறைந்தது இரண்டு வாரங்கள் ஆகலாம் என்று கூறப்படுகிறது.

இந்தப் பகுதி சதுப்பு நிலம் என்பதால், மழைநீர் வெளியேற வழி இல்லை என்றுக் கூறப்படுவதை அடுத்து இந்தப் பகுதி மக்கள் அனைவரும் அங்கிருந்து வெளியேறினர்.

ராணுவம் மற்றும் பேரிடர் மீட்பு குழு உதவியுடன் டிராக்டர் மற்றும் லாரிகள் மூலமாக அங்கிருந்த மக்கள் மீட்கப்பட்ட நிலையில் அவர்கள் அனைவரும் நிவாரண முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

நேற்று மாலையுடன் இந்தப் பகுதியில் மீட்பு நடவடிக்கை முடிவடைந்த நிலையில் இந்தப் பகுதியில் உள்ள குளோபல் மருத்துவமனையில் சிகிச்சைக்காக வந்த எத்தியோப்பியாவைச் சேர்ந்த மூன்று பேர் கடைசி கட்டமாக மீட்கப்பட்டனர்.

சிகிச்சைக்காக வந்த ஒரே குடுபத்தைச் சேர்ந்த இவர்கள் மருத்துவமனையில் வெள்ளம் சூழ்ந்ததை அடுத்து அருகில் உள்ள ஹோட்டல் அறையில் தங்கியிருந்தனர்.

நேற்று அவர்கள் எத்தியோப்பியா செல்ல இருந்த நிலையில் உரிய நேரத்தில் வெளியே வரமுடியாததால் அடுத்த வார விமானத்தில் செல்ல உள்ளனர்.

கடைகள், தொழில் நிறுவனங்கள் மற்றும் சிறு வணிக வளாகங்கள் என அனைத்தும் முடங்கியதை அடுத்து பெரும்பாக்கம் பகுதி கைவிடப்பட்ட நகரம் போல் காட்சி அளிப்பதாக உள்ளது.