மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட சென்னை பெருவெள்ள பாதிப்பில் இருந்து வேளச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள மடிப்பாக்கம், மேடவாக்கம், பள்ளிக்கரணை, முடிச்சூர் ஆகிய பகுதிகள் இன்னும் முழுமையாக மீளவில்லை.

மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் மீட்பு நடவடிக்கைகளில் அரசு துரிதமாக செயல்படவில்லை என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்த நிலையில் அப்பகுதியில் மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த வேளச்சேரி எம்.எல்.ஏ. ஹசன் மவுலானா-வை பொதுமக்கள் முற்றுகையிட்டு தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.

அப்போது சிலர் வேண்டுமென்றே அரசுக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் மீட்பு நடவடிக்கையில் இருந்த ஊழியர்களின் பணியை முடக்கும் விதமாக செயல்பட்டதுடன் ஹசன் மவுலானாவிடம் வாக்குவாதம் செய்தனர்.

அங்கு வந்த அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ.வும் எதிர்கட்சியைச் சேர்ந்தவருமான அசோக் பொதுமக்களுடன் சேர்ந்து ஹசன் மவுலானாவுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

இந்த பரபரப்பு அடங்கியபின் அங்கு குழுமியிருந்த செய்தியாளர்களிடம் பேசிய சட்டமன்ற உறுப்பினர் ஹசன் மவுலானா, “கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.வான தனது கோரிக்கையை ஏற்று அரசும் மூத்த அமைச்சர்களும் மீட்பு நடவடிக்கைக்குத் தேவையான பல்வேறு உதவிகளை தொடர்ந்து செய்து வருவதாகவும், மீட்பு நடவடிக்கையில் ஒரு சில இடங்களில் சிறிது தொய்வு இருந்ததாகவும் அதற்கு காரணம் ஒருசிலரின் குறுக்கீடு தான் என்றும் கூறினார்.

மேலும், வேளச்சேரி – பள்ளிக்கரணை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் தேங்கும் மழைநீர் கடலில் சென்று கலக்கும் விதமாக ஈஞ்சம்பாக்கம் அருகே முகத்துவாரம் அமைக்க வேண்டியது அவசியம்” என்று அப்போது வலியுறுத்தினார்.