விவசாயிகள் உயிரிழந்த சம்பவத்திற்கு ஆறுதல் தெரிவிக்க ராகுல் காந்தி இன்று உத்தர பிரதேசம் செல்ல இருந்த நிலையில், லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது, இதனை காரணம் காட்டி, ராகுல் காந்தி உள்ளிட்ட ஐந்து பேர் அடங்கிய குழுவுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் லக்ஹிம்பூர் பகுதியில் நடந்த விவசாயிகள் போராட்டத்தில் கார் ஏற்றி 8 பேரை பலியான விவகாரம் நாடு முழுவதும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்திற்குப் பின் லக்ஹிம்பூர் பகுதியில் பதட்டமான சூழ்நிலை நிலவியதையடுத்து அங்கு இணையதள சேவை முடக்கப்பட்டது.

விவசாயிகள் மீது மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா-வின் மகன் ஆஷிஷ் மிஸ்ரா கார் ஏற்றியதில் சம்பவ இடத்திலேயே நான்கு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில், மத்திய அமைச்சர் அஜய் மிஸ்ரா இதனை மறுத்தார்.

போராட்டக்காரர்கள் காரின் மீது கல்லெறிந்ததால் ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து கூட்டத்தில் புகுந்ததாக கூறிய அவர், தனது மகன் சம்பவ இடத்திலேயே இல்லை என்று மறுப்பு கூறினார்.

இந்நிலையில், மறியலில் ஈடுபட்ட விவசாயிகள் மீது பின்னால் இருந்து ஒன்றன் பின் ஒன்றாக வேகமாக அணிவகுத்து வந்த கார்கள் விவசாயிகளை ஏற்றிக் கொன்று விட்டு நிற்காமல் சென்றன, கண்மூடித்தனமாக சென்ற இந்த வாகனத்தை விவசாயிகள் தடுத்து நிறுத்திய வீடியோ பின்னர் வெளியானது.

https://twitter.com/iJasOberoi/status/1445089118942236680

இந்த கொலை சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படாததைக் கண்டித்தும் உயிரிழந்த விவசாயிகளுக்கு ஆறுதல் கூறவும் அங்கு செல்ல முயன்ற காங்கிரஸ் தலைவர் ப்ரியங்கா காந்தியை கைது செய்த போலீசார் அவரை எந்த வித குற்றச்சாட்டும் இல்லாமல் வீட்டுக் காவலில் வைத்திருந்த நிலையில் 40 மணி நேரம் கழித்து அவர் மீது மாநிலத்தின் அமைதிக்கு குந்தகம் விளைவித்ததாக வழக்கு பதிவு செய்துள்ளது.

மேலும், சட்டிஸ்கர் மாநில முதல்வர் பூபேஷ் பாகெல் லக்னோ விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதை அடுத்து அவர் விமான நிலையத்திலேயே தர்ணாவில் ஈடுபட்டார்.

பீம் ஆர்மியின் சந்திரசேகர் ஆசாத், ஆம் ஆத்மி கட்சியின் சஞ்சய் சிங், காங்கிரஸ் கட்சியின் தீபேந்தர் ஹூடா ஆகியோர் லக்ஹிம்பூர் செல்லும் வழியில் தடுத்து நிறுத்தப்பட்டனர், சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறுவதையும், சம்பவம் நடந்த இடத்தை ஆய்வு செய்ய மக்கள் பிரதிநிதிகளுக்கு அனுமதி மறுக்கப்படுவதையும் தமிழக முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட நாட்டின் பல்வேறு மாநில முதல்வர்கள் வன்மையாக கண்டித்தனர்.

இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இன்று நேரில் சென்று விவசாயிகளுக்கு ஆறுதல் கூற இருந்த நிலையில், நேற்றிரவு லக்னோ-வில் 144 தடை உத்தரவு பிறப்பித்து அம்மாநில போலீசார் அறிவிப்பு வெளியிட்டிருக்கின்றனர்.

ராகுல் காந்தி விவசாயிகளை சென்று பார்ப்பதற்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் மீது கார் ஏற்றி கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கைது செய்யாத அரசு மீது மக்கள் கொந்தளித்திருக்கும் நிலையில், உத்தர பிரதேச அரசை கண்டும் காணாமல் இருக்கும் மத்திய அரசைக் கண்டித்து இன்று நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காங்கிரசார் ஆர்பாட்டத்தில் ஈடுட்டு உள்ளனர்.