சென்னை:
பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க தமிழக உயர்கல்வித்துறை குழு அமைக்கிறது.

சேலத்தில் அமைந்துள்ள பெரியார் பல்கலைக்கழகத்தில், யுஜிசி விதிகளுக்கு மாறாக, பேராசிரியர்கள் நியமனம், ஊழியர்களுக்கு விதிமுறை மீறி சம்பளம் வழங்கப்பட்டு மற்றும் நிர்வாக குளறுபடி காரணமா, ரூ. 28 கோடி வரை மோசடி நடைபெற்று உள்ளதாக உள்ளாட்சித் தணிக்கை அறிக்கையில் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்து, இந்த முறைகேடு தொடர்பாக தமிழகஅரசு விசாரணை நடத்தி, நடவடிக்கை எடுத்து வருகிறது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்நிலையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரிக்க தமிழக உயர்கல்வித்துறை குழு அமைத்து உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து உயர் கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், பெரியார் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த உயர்கல்வித்துறை கூடுதல் செயலாளர் பழனிச்சாமி, அரசு இணைச் செயலாளர் இளங்கோ ஹென்றி தாஸ் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 2 மாதங்களுக்குள் தங்களது விசாரணை அறிக்கையை அரசுக்கு சமர்பிக்க வேண்டும். இந்தக் குழுவின் விசாரணைக்கு பெரியார் பல்கலைக்கழகம் உரிய வசதிகளை செய்து தரவேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.