லட்சிய திரைவிட முன் னேற்றக் கழகத் தலைவர் விஜய டி ராஜேந்தர், தன் பிறந்தநாளை முன்னிட்டு  நேற்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அவரது பேட்டியை வெளியிட்டிருந்தோம். இப்போது விரிவாக…
2“முதல்வர் உடல் நலமில்லாமல் இருப்பதால், உங்கள் பிறந்தநாளைக் கொண்டாடவில்லை என்று அறிக்கை கொடுத்தீர்கள். அ.தி.மு.வுடன் நெருக்கமான உறவை ஏற்படுத்திக்கொள்ளும் முயற்சியா இது?”
இல்லை.  இல்லை…  என் பிறந்தநாளைக் கொண்டாடாததற்கு முதல்வர் உடல்நிலை மட்டுமே காரணம். அவர் முழு உடல் நலம் பெற வேண்டும் என்று எந்தவித சுயநல எண்ணமும் இல்லாமல் இறைவனிடம் வேண்டுகிறேன். இதற்கு  மனிதாபிமானம்  ஒன்றைத் தவிர வேறு காரணம் இல்லை. அ.தி.மு.க.விடம் இருந்து ஒரு கவுன்சிலர் சீட்டு கூட வாங்காதவன் நான்.
ஜெயலலிதா அம்மையார், ஈழத்தமிழர் சம்பந்தமாக தைரியமாகச் சட்டசபையில் ஒரு தீர்மானம் போட்ட வீராங்கனை.  எனக்கு அவர் எதிரிகளை வீழ்த்தும் ஏவுகணையாக தெரிகிறார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டதால், இதைப் பேசுகிறேன். மற்றபடி எனக்கு யாரிடமும் எதையும் எதிர்பார்க்கும் குணம் கிடையாது.
தி.மு.க. தலைவர் கருணாநிதி மீது உங்களுக்கு அப்படி என்ன வருத்தம்? கடுமையாக விமர்சிக்கிறீர்களே..!
மறைந்த விட்ட மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். எந்த அளவுக்கு தி.மு.க.வுக்கு உழைத்தாரோ.. அதே போல போல நானும் தி.மு.கவுக்கு உழைத்திருக்கிறேன். கலைஞருக்காக மாடாய் உழைத்திருக்கிறேன் . ஓடாய்த் தேய்ந்திருக்கிறேன். ஆனால் அவரால் ஆதாயம் அடைந்ததில்லை. அது பற்றி கவலையும் இல்லை. ஆனால் கலைஞரால் நான் காயம்பட்டிருக்கிறேன்.
எம்.ஜி.ஆரையே தூக்கி வீசியவருக்கு நான் எம்மாத்திரம். என்னையும் தூக்கி வீசிவிட்டார்.
‘நேற்று இன்று நாளை ‘ படத்தில் எம்.ஜி.ஆர் பாடுவதைப் போல கலைஞர் ‘ மக்கள்  நலம்  மக்கள்  நலம் என்றே சொல்லுவார், தம் மக்கள்  நலம்  ஒன்றேதான் மனதில் கொள்ளுவார் ‘ என்றிருப்பவர்.
தி.மு.கவில் நான் இருந்த போது என் 33 வயது பிறந்தநாளின் போது கலைஞர் ஒரு கடிதம் எழுதினார். அதில் திறமையிலும் சரி வயதிலும் சரி டி. ராஜேந்தர் என்னில் பாதி என்று எழுதியிருந்தார்.
கலைஞரோடு முடிந்து விட்டது சரிபாதி. இனி கடவுள் விட்ட வழி சரிபாதி.
இனி உங்கள் அரசியல் நிலைப்பாடு எப்படி இருக்கும்?
பெரியார், அண்ணா, எம்.ஜி.ஆர் ஆன்மா எனக்கு வழிகாட்டும். அந்த வழியில் இந்த டி.ஆர். பயணிப்பான்.
சரி, தற்போது உங்கள் எதிர்பார்ப்பு என்ன?
அதான் சொன்னேனே சார்.. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாதவன் இந்த டி.ஆர்.   வாழ்க்கையில் நடக்கும் அத்தனை செயல்களுக்கும் கர்மாதான்  காரணம். அதற்கு இந்த டி.ஆர். வாழ்க்கையே உதாரணம்.
trஅதாவது…
கொஞ்சம் பொறுங்கள்… யார் மீதும் நான் குற்றம் சொல்லவில்லை. அது என் பழக்கமும் இல்லை.
நான் பாசக்காரன். அதே நேரம் பிடிவாதக்காரன். இரட்டைவேடம் போட்ட போது  கூட நடிப்பதற்கு தாடியை எடுக்காதவன் நான்.
நோட்டை எதிர்ப்பார்த்து நான் எங்கும் போகவில்லை. !
சரி, கடந்த சட்டமன்றத் தேர்தலில் பல கட்சிகள் கூட்டணி அமைத்தன. நீங்கள் ஏன் ஒதுங்கிவிட்டீர்கள். அல்லது யாரும் ஆழைக்கவில்லையா?
முப்பது வருடமாக சினிமாவில் ஒதுக்கமுடியாதவன் இந்த டி.ஆர்.! அதே போலத்தான் அரசியலிலும் என்னை ஒதுக்கிவிட முடியாது.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் அத்தனை கட்சியும் கூட்டணி என்று அமைத்தபோது என்னைக் கூப்பிடாமலா இருந்திருப்பார்கள்? ஓட்டை உடைக்க நோட்டை எதிர்ப்பார்ப்பவன் நான் இல்லை. ஆகவே நான் எங்கும் போகவில்லை.
இப்போதைய அரசியல் குறித்து என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?
கர்நாடகத்தில் காங்கிரசின் சீத்தாராமையா காவிரி தண்ணீர் கொடுக்க மாட்டேன் என்கிறார்.  இந்த நிலையில் உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரசுடன் தி.மு.க .வுக்குக்  கூட்டணி தேவையா?
மத்தியிலுள்ள கர்நாடக அமைச்சர்கள் அனைத்துக் கட்சி கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கிறார்கள். ஏன்?
மோடி அரசு இதற்குப் பதில் சொல்ல வேண்டும். உச்சநீதிமன்ற தீர்ப்பை மதிக்காத கர்நாடக அரசு மீது மோடி அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை,? மோடி அரசு ஏன் தட்டிக் கேட்கவில்லை?
கர்நாடகத்திற்கு ஒன்று, நீங்க உங்கள் மாநிலத்தை நேசியுங்கள். நீருக்காக தமிழ்நாட்டையும் யோசியுங்கள். ஆனால் ஒன்று, மொழி உணர்வில் மாநில உணர்வில் கர்நாடகத்தில் மக்கள் எல்லாரும் ஒற்றுமையாக இருக்கிறார்கள். இதற்காக அவர்களின் திசைநோக்கி வணங்குகிறேன். தமிழ்நாட்டில் ஆளுக்கு ஒன்று பேசலாம். எது வேண்டுமானாலும் பேசலாம்.
1
கர்நாடகத்தில் நடிகர்கள் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்களே?
ஆமாம்… அங்கே நடிகர்கள் எல்லா விசயத்திலும் ஒற்றுமையாக குரல் கொடுக்கிறார்கள்.கர்நாடகத்தில் ஒரு திருட்டு விசிடிகூட கிடையாது. இங்கே நிலைமை தலைகீழ்.
இங்கே கேபிள் டிவி யில் படம் போடுகிறார்கள் மீண்டும் அதையே பிரபல டிவிக்கு விற்க நினைக்கிறார்கள். இதை தயாரிப்பாளர் சங்கம் தட்டிக் கேட்க முடியாதா? உங்க துணிவு எங்கே போயிற்று? உங்கள் முதுகெலும்பு எங்கே?
ஆந்திராவில் எல்லா தயாரிப்பாளர்களும் ஒன்றாக இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் தயாரிப்பாளர்களின் நிலை தத்தளிப்பாக இருக்கிறது.
அண்மையில் வந்த தனுஷ், விஜய்சேதுபதி படங்கள் ‘தொடரி’யும் ஆண்டவன் கட்டளை’ யும் நெட்டில் போடுகிறான். ஏன் தடுக்க முடியவில்லை? ஏன் தட்டிக் கேட்க முடியவில்லை?
 உள்ளாட்சித்தேர்தலில் லட்சிய தி.மு.க. போட்டியிடுமா?
உள்ளாட்சித் தேர்தலில் பல முதலமைச்சர் வேட்பாளர்களே தத்தளித்துக் கொண்டிருக்கும் போது லட்சிய தி.மு.க.என்ன செய்யும்? நாங்கள்  தேர்தலில் நிற்பதைவிட என் கருத்தை தைரியமாக எடுத்துச் சொல்லி மக்களைச் சிந்திக்க வைப்பேன்.”