பெரம்பலூர் மாவட்டம் ஒதியம் கிராமத்தில் கடந்த வியாழனன்று நாய் கடியால் காயமுற்று மயங்கிய குரங்கு ஒன்று அப்பகுதி இளைஞரால் காப்பாற்றப்பட்ட சம்பவம் சமூக வலைத்தளங்களில் வைரலானது.
குரங்கு குட்டி ஒன்றை நாய்கள் ஒன்று சேர்ந்து கடித்ததில் உடல் முழுக்க காயமுற்ற குரங்கு மரத்தின் மீது ஏறி மயக்கமுற்றது.
இதனைப் பார்த்த பிரபு என்ற 38 வயது வாலிபர், அதனை லாவகமாக மரத்தில் இருந்து கீழே இறங்க வைத்தார்.
பின்பு அதற்கு குடிக்க தண்ணீர் கொடுத்த நிலையில் மீண்டும் மயங்கியதால் அருகில் உள்ள கால்நடை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்.
பைக்கில் சென்று கொண்டிருந்தபோது வழியில் குரங்கு மீண்டும் மூர்ச்சையானதால் வண்டியை நிறுத்திவிட்டு குரங்குக்கு முதலுதவி செய்ததோடு வாயோடு வாய் வைத்து மூச்சுக்காற்றை ஊதி அதனை மீண்டும் உயிர் பிழைக்க வைத்தார்.
இதனைத் தொடர்ந்து கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு சென்று சிகிச்சையளித்த பிரபு பின்னர் அந்த குரங்கை வனத்துறையினரிடம் ஒப்படைத்தார்.
கார் ஓட்டுநராக வேலை செய்யும் பிரபு விபத்து நேரங்களில் முதலுதவி செய்வது குறித்து முறையான பயிற்சி பெற்றவர் என்ற போதும், அந்த குரங்கை கடித்த நாய்க்கு ‘ரேபிஸ் வைரஸ்’ இருந்தால் அது அவருக்கு சிக்கலாக இருக்கும் என்று கால்நடை மருத்துவர் தெரிவித்துள்ளார்.