சென்னை: பொய்வழக்கு போட்டு திமுக அரசு பழிவாங்குகிறது என குற்றம் சாட்டிய தமிழர் முன்னேற்ற படை, நிறுவன த்தலைவர் கி.வீரலட்சுமி, வாயை திறக்கவே கூடாதா என ஆவேசமாக தெரிவித்து உள்ளார்.

திமுக ஆட்சி பதவி ஏற்றது முதல், ஆட்சியையும், திமுகவையும் விமர்சித்து கருத்து மற்றும் வீடியோ பதிவிடுபவர்கள் மீது வழக்கு போட்டு, பின்னர் அவர்களை குண்டர் சட்டத்திலும் கைது செய்து வருகிறது. ஏற்கனவே எதிர்க்கட்சிகளைச் சேர்ந்த பல யுடியூபர்களை கைது செய்துள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு பிரபல யுடியூபர் மாரிதாசையும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. இது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்த நிலையில், தற்போது, தமிழர் முன்னேற்ற படை, நிறுவனத்தலைவர் கி.வீரலட்சுமி தம் மீது பி.சி.ஆர் வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. இது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதை எதிர்த்து நீதிமன்றத்திற்கு சென்றுள்ள வீரலட்சுமி, இதுதொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அதில்,  ’மிகவும் பிற்படுத்தப்பட்ட பாமர பொதுமக்களிடையே ஒரு பெண்ணாக இருந்து தமிழ் மொழிக்காகவும், தமிழ் மண்ணுக்காகவும், தமிழர்களுக்காகவும், சமரசமில்லாத எமது கடந்த பதினைந்து ஆண்டுகள் போராட்ட வாழ்க்கையை அவமதிக்கும் வகையில்,  நியாயம் நீதி பார்க்காமல் சரி தவறு என்று ஆராயாமல் திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை காவல் நிலையத்தில் ஜோசப் என்ற காவல் ஆய்வாளர் மூலம் என் மீது SC/ST.act பொய் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது எந்த விதத்தில் நியாயம் என கேள்வி எழுப்பியவர், தாய் மொழிக்காகவும், தாய் மண்ணுக்காகவும் பிற்படுத்தப்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட ஒடுக்கப்பட்ட மக்களுக்காகவும், பெண்களுக்காகவும் போராடுவதாக சொல்லும் திமுக அரசு என் மீது இந்த SC/ST act, வழக்கு பதிவு செய்ய எப்படி அனுமதித்தது.  அப்படி என்றால் பொது வாழ்க்கையில் இருக்கும் பெண்களுக்கு திமுக ஆட்சியில் பாதுகாப்பு இல்லையா?

எங்களால் கண்ணுக்கு எதிராக தெரியும் அநீதிகளையும் சமூக விரோத செயல்களையும் லஞ்சம் ஊழலுக்கு எதிராக செயல்படுபவர்களை கண்டும் காணாமல் இருக்க முடியாது.

இங்கே மணல் கடத்தலை தடுக்க கூடிய வட்டாட்சியர் மணல் திருட்டுக்கு உடந்தையாக இருக்கிறார்.

கள்ள மது, கஞ்சா, குட்கா, விற்பதற்கும் இங்கு சில காவல்துறை அதிகாரிகள் மாமூல் வாங்கிக்கொண்டு அனுமதிக்கின்றனர் .

அரசு அலுவலகங்களை தேடி வரும் பொதுமக்களை அரசு அதிகாரிகள் கொத்தடிமை போல் நடத்துகின்றார்கள்.

பொதுமக்கள் அதிகாரிகளை நேரடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை.

உள்ளாட்சி பிரதிநிதிகள் ஆக இருந்தாலும் சட்டமன்ற உறுப்பினராக இருந்தாலும் மாநில மந்திரியாக இருந்தாலும் ஒரு சிலர் அவர்கள் குறிப்பிட்ட மதத்திற்கும் குறிப்பிட்ட சாதிக்கும்  ஆதரவாக இருக்கிறார்கள். அதேபோல் ஒரு குறிப்பிட்ட சாதிக்கும் குறிப்பிட்ட மதத்திற்கும் எதிராகவும் செயல்படுகின்றார்கள். இது, என் போன்ற செயல் நடுநிலையான எங்களைப்போன்ற அரசியல்வாதிகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது.

திராவிட இயக்கக் கொள்கை கரைய தொடங்கி விட்டதா? அல்லது வேண்டிய பட்டவர்களுக்கு கனிந்து போக பழகி  விட்டதா?

எப்பேர்பட்ட அரசு அறியனையாக இருந்தாலும்  சித்தாந்தமாக இருந்தாலும் நியாயத்திற்கும் நீதிக்கும் தர்மத்திற்கும் எதிராக இருந்தால் அழிந்து போய்விடும் என்று வரலாறு சொல்லுகிறது.

என் மீது போடப்பட்ட பொய் வழக்கிற்கு எனக்கு நீதி வேண்டும் நியாயம் வேண்டும்.

நான் எழுப்புகின்ற கேள்விக்கு அரசின் செயல் பதிலாக இருக்க வேண்டும். இதற்குப் பின்புலமாக இருந்து இயக்கியவர்களுக்கு  தண்டனை வேண்டும். என்று இந்த அறிக்கையின் வாயிலாக கேட்டுக் கொள்கிறேன்.

என் உயிரினும் மேலான என் தாய் தமிழ் உறவுகளே. இந்த பொய் வழக்கை எதிர்த்து நாம் சென்னை உயர் நீதிமன்றத்தை நாங்கள் நாடிய போது சென்னை உயர்நீதிமன்றம் எங்களை திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி பிணையை பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்ட நீதிமன்றத்தில் நானும் எமது இயக்கத் தோழர்களும் ஆஜராக இருக்கின்றோம் தேதி நேரத்தை நாளை அறிவிக்கின்றேன்’.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.