பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்கள்: தூர்வார மக்கள் கோரிக்கை

Must read

பாபநாசம் அணையில் செத்து மிதக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

நெல்லை மாவட்டத்தில் கடந்த மாதம் முதல் கோடை வெயில் கொளுத்தி வருகிறது. மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கோடை மழை பெய்யாத காரணத்தால், அணைகளின் நீர்ப்பிடிப்பு பகுதிகள் வறண்டு போய்விட்டன. இதனால் அணைகளுக்கு போதிய நீர்வரத்து இல்லாமல், நீர்மட்டம் குறைந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் 11 அணைகள் உள்ளன. இதில் பிரதான அணையான பாபநாசம் அணையின் உச்சபட்ச நீர்மட்டம் 143 அடி ஆகும். காலை 8 மணி நிலவரப்படி நீர்மட்டம் 9 அடியாக குறைந்தது. எந்த ஆண்டிலும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு வறட்சியின் கோரப்பிடியில் பாபநாசம் அணை சிக்கி தவித்து வருகிறது. அணையின் தற்போதைய நீர்மட்டம் 9 அடியாக குறைந்துள்ள போதிலும், அணை இதுநாள் வரைக்கும் தூர்வாரப்படாததால் சில அடி உயரத்துக்கு சகதி நிரம்பி கிடக்கிறது. கொளுத்தும் வெயிலால் அணையில் தேங்கி கிடக்கும் தண்ணீருக்குள் ஏற்பட்டிருக்கும் சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மீன்கள் கொத்து கொத்தாக பரிதாபமாக செத்து மிதக்கின்றன. அணைகளில் தண்ணீர் வெகுவாக மாசடைந்து, மீன்கள் சுவாசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், மீன்கள் நாள்தோறும் சிறிது சிறிதாக இறக்கத் தொடங்கியுள்ளன. இவ்வாறு இறந்த ஆயிரக்கணக்கான மீன்கள் அணையின் கரையோரம் மிதப்பதால் அவை அழுகி கடும் துர்நாற்றம் வீசுகிறது.

மேலும் அணையில் இருந்து திறந்துவிடப்படும் சிறிதளவு தண்ணீரும் துர்நாற்றத்துடன் செல்வதால், தாமிரபரணியில் இருந்து குடிநீருக்காக எடுக்கப்படும் தண்ணீர் சுகாதாரமற்றதாக மாறும் நிலையுள்ளது. இதனால், இறந்து கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

More articles

Latest article