மும்பை

காராஷ்டிர மாநிலம் மும்பையில் ஆரே வனத்தில் மரங்களை வெட்ட மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்

மும்பை மாநகரத்தின் நுரையீரல் என அழைக்கப்படும் பகுதி ஆரே வனம் ஆகும்.  இங்கு  மெட்ரோ வாகன நிறுத்தம் அமைப்பதற்காக சுமார் 2500க்கும் மேற்பட்ட மரங்களை வெட்ட மும்பை மாநகராட்சி முடிவு செய்தது. இந்த முடிவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. மும்பை உயர்நீதிமன்றம் அவை அனைத்தையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

தீர்ப்பு வழங்கிய சிலமணி நேரங்களிலேயே மரங்களை வெட்டும் பணியை மாநகராட்சி நிர்வாகம் தொடங்கியது. அதிர்ச்சியடைந்த சுற்றுவட்டார மக்களும், சுற்றுச்சூழல் ஆர்வலர்களும் தாங்கள் உச்சநீதிமன்றத்தை நாடவுள்ளதால், அதுவரை மரங்களை வெட்டக் கூடாது என தெரிவித்து கடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.   அவர்கள்  இரவு வெகு நேரம் ஆகியும் போராட்டத்தைத் தொடர்ந்ததால் அவர்களை காவல்துறையினர் அப்புறப்படுத்தினர்.

அத்துடன் ஆரேவிற்கு செல்லும் அனைத்து வழிகளையும் முடக்கியுள்ளனர். ஆரே பகுதியில் மரங்களை வெட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பலரும் சமூக வலைத்தளங்களிலும் கருத்து தெரிவித்து வருகின்றனர். அரசு அனுமதியளித்த நாளிலிருந்து 15 நாட்களுக்கு பிறகே மரங்களை வெட்ட வேண்டும் என்றும், ஆனால் அதிகாரிகள் விதிமுறைகளை மீறிச் செயல்படுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இந்நிலையில் டிவிட்டரில் மும்பை மெட்ரோ ரயில் அதிகாரி அஸ்வினி பைட், மரத்தை வெட்டுவதற்கான உத்தரவு செப்டம்பர் 13ம் தேதி பிறப்பிக்கப்பட்டது என்றும், 28ம் தேதியுடன் 15 நாட்கள் முடிவடைந்த நிலையிலும் நீதிமன்ற உத்தரவுக்காக காத்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பகுதி தொடர்ந்து பதட்டத்துடன் காணப்படுகிறது.